E   |   සි   |  

2025-12-05

செய்தி வகைகள் : செய்திகள் 

நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்தார்

நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் முன்னிலையில் இன்று (டிச. 05) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது அவர்கள் தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.

கற்பிட்டி திகழி முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் அவர்கள், 1991ஆம் ஆண்டு கற்பிட்டி பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலுக்குள் நுழைந்தார். அவர் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.



தொடர்புடைய செய்திகள்

2025-12-05

2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்மேலும் மூன்று சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் இன்று (டிச. 05) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 07.30 மணிக்கு ஆரம்பமானதுடன், இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. அத்துடன், இருவர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர். அதற்கமைய, 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவுசெலவுத்திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 06 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்றது. அதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 14 ஆம் திகதி 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (05) வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் 14 நாட்கள் இடம்பெற்றன. 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் 17 நாட்கள் இடம்பெறவிருந்ததுடன், சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக விவாத நாட்கள் இவ்வாறு 14 நாட்களாகக் குறைக்கப்பட்டன.அந்த நிலையில், கடந்த சில நாட்களில் குழுநிலையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஒரு சில அமைச்சுக்களுக்கான செலவுத்தலைப்புகள் மீது முன்னர் திட்டமிடப்பட்ட தினங்களில் விவாதம் மேற்கொள்ள முடியாமல் போனதால், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு மேலதிகமாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் செலவுத்தலைப்புகளும் 2025.12.03 ஆம் திகதியும் இன்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன. மேலும், பாராளுமன்றத்தில் இன்று (05) நிறைவேற்றப்பட்ட 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.அதற்கு மேலதிகமாக, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பவற்றுக்கும் பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, மூன்று குறைநிரப்புத் தொகைகளும் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டன.


2025-12-03

அனர்த்தம் காரணமாக உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில்  ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக அவர்களினால் இன்று (டிச. 03) பாராளுமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


2025-12-02

இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதிய அம்சங்களுடன் நவீன மயப்படுத்தப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது

இலங்கைப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த 19 வருடங்களாக செயற்பட்டுவரும் நிலையில், இதில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 27) நடைபெற்றது.கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டனர்.2006ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்திற்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு தடவைகள் புதுப்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம் தற்பொழுது மூன்றாவது தடவையும் புதுப்பிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.கௌரவ சபாநாயர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட செயலாளர் குழுவின் வழிகாட்டலில், தேசிய ஜனநாயக நிறுவகத்தின் (NDI) முழுமையான அனுசரணையுடன், பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம் மற்றும் டெக்கீக்ஸ் (தனியார்) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது.புதுப்பிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் இணையத்தளம் மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் பல புதிய அம்சங்கள் பலவற்றை உள்ளடக்கியதாகவும், நவீன தேவைகளை இலகுவாகப் பூர்த்திசெய்யக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள " My Parliament " அதாவது "எனது பாராளுமன்றம்" எனும் போர்டலானது ஒவ்வொரு பிரஜையும் பாராளுமன்றத்துடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும்  நேரடியாக இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் பொதுமக்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும், பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றும் அரசாங்கப் பணியாளர்கள் இந்தப் பதிவை மேற்கொண்டு தமது நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.பாராளுமன்றத்தின் இணையத்தளம் அரசாங்கத் துறையில் விருதுகள் பலவற்றைப் பெற்றுக் கொண்ட இணையத்தளமாக விளங்குகிறது.  பல ஆண்டுகளாக தேசிய அளவிளான போட்டிகளில் ‘சிறந்த அரசாங்க இணையத்தளம்’ என்ற விருதையும், ‘சிறந்த பன்மொழி இணையத்தளம்’ என்ற விருதையும் பெற்றுள்ளது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கொண்ட பாராளுமன்ற இணையத்தளத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.பி.யூ.நவகமுவ உள்ளிட்ட அத்திணைக்களத்தின் அதிகாரிகள், டெக்கீக்ஸ் (தனியார்) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் கமகே உள்ளிட்ட அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


2025-12-02

இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 27) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், கௌரவ ஸன்டெல் எட்வின் ஷால்க் (H.E. Sandile Edwin Schalk) அவர்கள் கௌரவ அதிதியாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.1994 இல் முறையான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் நிறுவப்பட்ட இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயுள்ள நீண்டகால உறவை இரு தரப்பினரும் இங்கு வலியுறுத்தினர். பல்தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர ஆதரவை இரு தரப்பினரும் பாராட்டினர். சுற்றுலா, கல்வி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைகளில் தென்னாப்பிரிக்காவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு முன்னர், தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகர் கௌரவ சபாநாயகரை மரியாதையின் நிமித்தம் சந்தித்தார். இதன் போது, தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளை அவர் பாராட்டியதுடன், தென்னாப்பிரிக்காவின் ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks