E   |   සි   |  

2025-12-02

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதிய அம்சங்களுடன் நவீன மயப்படுத்தப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது

இலங்கைப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த 19 வருடங்களாக செயற்பட்டுவரும் நிலையில், இதில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 27) நடைபெற்றது.

கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டனர்.

2006ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்திற்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு தடவைகள் புதுப்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம் தற்பொழுது மூன்றாவது தடவையும் புதுப்பிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

கௌரவ சபாநாயர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட செயலாளர் குழுவின் வழிகாட்டலில், தேசிய ஜனநாயக நிறுவகத்தின் (NDI) முழுமையான அனுசரணையுடன், பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம் மற்றும் டெக்கீக்ஸ் (தனியார்) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் இணையத்தளம் மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் பல புதிய அம்சங்கள் பலவற்றை உள்ளடக்கியதாகவும், நவீன தேவைகளை இலகுவாகப் பூர்த்திசெய்யக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள " My Parliament " அதாவது "எனது பாராளுமன்றம்" எனும் போர்டலானது ஒவ்வொரு பிரஜையும் பாராளுமன்றத்துடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும்  நேரடியாக இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் பொதுமக்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும், பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றும் அரசாங்கப் பணியாளர்கள் இந்தப் பதிவை மேற்கொண்டு தமது நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.

பாராளுமன்றத்தின் இணையத்தளம் அரசாங்கத் துறையில் விருதுகள் பலவற்றைப் பெற்றுக் கொண்ட இணையத்தளமாக விளங்குகிறது.  பல ஆண்டுகளாக தேசிய அளவிளான போட்டிகளில் ‘சிறந்த அரசாங்க இணையத்தளம்’ என்ற விருதையும், ‘சிறந்த பன்மொழி இணையத்தளம்’ என்ற விருதையும் பெற்றுள்ளது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கொண்ட பாராளுமன்ற இணையத்தளத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.பி.யூ.நவகமுவ உள்ளிட்ட அத்திணைக்களத்தின் அதிகாரிகள், டெக்கீக்ஸ் (தனியார்) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் கமகே உள்ளிட்ட அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-12

எதிர்காலத் தலைவர்கள் தார்மீக விழுமியங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றனர் – மாணவர் பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் வலியுறுத்து

நாளைய தலைவர்களான மாணவ சமூகத்தினர் பெரியோரை மதிப்பவர்களாகவும், தார்மீக விழுமியங்களைப் பாதுகாப்பவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பது அவசியம் என கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள் வலியுறுத்தினார். கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ பிரதி சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு மேலும் உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர்,மாணவர் பராயம் முதலே ஒழுக்கத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படும் நபர்கள் சட்டங்களை மதிக்கும் ஒழுக்கசீலர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது மக்களின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே அவர்கள், ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்படும் சேவைகள் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கினார். கல்விச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும், இந்த நிதியத்தை பிரதேச செயலகங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா அவர்கள், பாராளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கினார். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை குறித்து ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாண்புமிகு பிரதி சபாநாயகர் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில், கண்டி வித்யார்த்த கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எஸ். ஸ்ரீலால் நன்றியுரை  நிகழ்த்தினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, கண்டி வித்யார்த்த கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-11

இலங்கைப் பாராளுமன்ற தூதுக் குழு சீனாவிற்கான உத்தியோகபூர்வ செயலமர்வு நிகழ்ச்சித்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்தது

சீன மக்கள் குடியரசில் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற இலங்கைப் பாராளுமன்ற தூதுக் குழு, அதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து 2026 ஜூன் 05 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. கௌரவ வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்களது தலைமையிலான இந்தப் பாராளுமன்ற  தூதுக் குழு, 2026 மே 26 முதல் ஜூன் 04 வரை சீனாவின் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு  நிலையத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றது.  இந்த விஜயத்தின் போது, இக்குழு சீனாவின் ஆளுகைக் கட்டமைப்பு, அபிவிருத்தி மூலோபாயம், சனநாயக ஆலோசனைப் பொறிமுறைகள் மற்றும் தேசியக் கொள்கை வழிகாட்டல் முதலிய தலைப்புகளில் சீனாவின் சிரேஷ்ட கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரினால் நடத்தப்பட்ட அமர்வுகளில் பங்கேற்றது. இக்குழு தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) மாநாட்டு மண்டபம் மற்றும் மக்கள் மாபெரும் மண்டபம் (Great Hall of the People) உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்களுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டது. மேலும், சர்வதேச தேயிலைத் தினத்தை முன்னிட்டு 2026 மே 29 ஆம் திகதி பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்விலும் இக்குழு கலந்துகொண்டது. இந்நிகழ்வானது இலங்கையின் வளமான தேயிலை பாரம்பரியத்தையும், கலாசார மற்றும் பொருளாதார உறவுகளுக்கான அதன் பங்களிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது. இந்நிகழ்ச்சித் திட்டம் ஷென்சென் (Shenzhen) மற்றும் பின்னர் குவாங்சோ (Guangzhou) ஆகிய நகரங்களிலும் தொடர்ந்ததுடன் அங்கு இக்குழு ஸ்மார்ட் உட்கட்டமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம், தகவல் தொடர்பாடல்கள், விவசாயம் மற்றும் புதிய சக்திக் கைத்தொழில்கள் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களையும் அபிவிருத்திக் கருத்திட்டங்களையும் பார்வையிட்டது. இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திர உறவு, நிறுவன ரீதியான பரிமாற்றம் மற்றும் அறிவுப் பகிர்வு என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக இந்த செயலமர்வு அமைந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வருகின்ற நட்புறவுகளையும் மேலும் வலுப்படுத்தியது.


2026-06-10

இலங்கையின் தற்போதைய நிதி மற்றும் நாணயமாற்று விகித கொள்கைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் உள்ளிட்ட அதிகாரிகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தினர்

நாணயக் கொள்கை, நாணயாற்று விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று (ஜுன் 10) நடைபெற்றது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் முறைமை, நாணயமாற்று விகிதத்தின் போக்கு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் பராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் கருத்துக்களுக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகள் பதில்களை வழங்கினர்.இந்த நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-09

“பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)”  எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஜுன் 09) பாராளுமன்றத்தில் அறிவித்தார். உயர் நீதிமன்றம் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றலாம் என்று தீர்மானித்துள்ளது. எனினும்  வாசகம்  14 [முன்மொழியப்பட்ட பிரிவு  12 அ(ஆ)] மற்றும் வாசகம்  18 [முன்மொழியப்பட்ட பிரிவுகள் 17அ, 17ஆ மற்றும் 17இ] ஆம் வாசகங்கள்    மட்டும் விதிவிலக்காகும். இந்த வாசகங்கள்  பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். நீதிமன்றம் பரிந்துரைத்தபடி திருத்தப்பட்டால், அவற்றையும் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் அறிவித்தார்.உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய (09) கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென்றும் சபாநாயகர் கட்டளையிட்டார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks