டிசம்பர் 09, 2025
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகளை ஆராய்ந்தது கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகள் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டன.குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 26) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.இதற்கு அமைய, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்களுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் நிதி அறிக்கைகள் ஆராயப்பட்டன.அத்துடன், பாடசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்வது மற்றும் அதிபர்களைச் சேவையில் இணைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ்.இராதாகிருஷ்ணன், ரோஹினி குமாரி விஜேரத்ன, அபூபக்கர் ஆதம்பாவா, துரைராசா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ உள்ளிட்டோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.