பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-02-25
செய்தி வகைகள் : செய்திகள்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஹங்கேரியின் தேசிய சட்டமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா (Dr. Lajos Oláh) அவர்கள் இலங்கை சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை 23.02.2026ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
ஹங்கேரி பிரதி சபாநாயகரை வரவேற்ற இலங்கை சபாநாயகர், இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் காணப்படும் வலுவான உறவுகளையும் நினைவுகூர்ந்தார். குறிப்பாக இந்நாட்டின் வீதி அபிவிருத்தி மற்றும் நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள், GSP சலுகை உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச மட்டங்களில் ஹங்கேரி வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
ஊழல் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், முதலீட்டு வாய்ப்புக்களை விஸ்தரிக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் வலியுறுத்தினார். அத்துடன், இலங்கையில் காணப்படும் முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை ஆராய்வதற்கு ஹங்கேரி முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை எடுத்துரைத்த சபாநாயகர், கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் ஹங்கேரியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறான பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்த பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – ஹங்கேரி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை வலியுறுத்தினார். இலங்கையின் சுற்றுச்சூழல், இயற்கை அழகு, வளமான கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றையும் அவர் பாராட்டினார்.
திறந்த பாராளுமன்ற முறைமையை மேம்படுத்தல், பொதுமக்களுடனான இணைப்பை வலுப்படுத்தல் மற்றும் அனுபவங்கள், நல்ல நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளல் மற்றும் பாராளுமன்றங்களின் ஆய்வுக்கான திறன்ங்களை மேம்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் “INTER PARES” உலகளாவிய திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஹங்கேரி எதிர்பார்ப்பதாகவும் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவம், இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையே நேரடி விமானங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புக்கள் போன்ற விடயங்களையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
ஹங்கேரிக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் அவர் இலங்கை சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த விஜயத்தின் போது ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர், இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். சுமுகமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், செயற்கை நுண்ணறிவில் (AI) வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகள் மற்றும் சவால்கள், இரு நாடுகளிலும் உள்ள அரசியல் கட்டமைப்புக்கள், மாணவர் பாராளுமன்றம் போன்ற மக்களுடனான இணைப்புக்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.
இதேநேரம், ஹங்கேரி தூதுக் குழுவினருக்கும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சருமான (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன மற்றும் இரு குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை திறம்பட எதிர்கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள், நெறிமுறை தரநிலைகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளை நிறுவுவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் திறன் பரிமாற்றத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா முன்மொழிந்தார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய சவால்களுக்கு பதிலளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தக் கலந்துரையாடல் வலியுறுத்தியது. மேலும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான தொழில்நுட்ப முன்னேற்றத்தை உறுதி செய்யும் அதே வேளையில், புதுமைகளை ஊக்குவிப்பதற்கான ஹங்கேரி மற்றும் இலங்கை இடையேயான பரஸ்பர உறுதிப்பாடும் இங்கு வலியுறுத்தப்பட்டன.
இதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஹங்கேரிக்கான கென்சியூலர் ஷெவந்த ஹரேந்திர சுதாரக மென்டிஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் மரபுகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் ஹங்கேரி தேசிய சட்டமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டார்.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks