பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-04-28
செய்தி வகைகள் : செய்திகள்
வியட்னாம் நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு டோ லாம் அவர்கள் எதிர்வரும் மே 08ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதாகவும், இது தொடர்பான நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (ஏப். 27) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடவுள்ளது.
2026 மே 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள் (2471/52, 2471/53, 2471/54, 2471/55 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்டவை), கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2475/28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது) என்பன விவாதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படவுள்ளன.
பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக (எதிர்க்கட்சி) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 மே 6ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன. மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்காக நுரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 மே 7ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 11.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2471/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது), (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (2470/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது) மற்றும் (351ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (2026.05.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது) என்பவற்றை விவாதத்திற்கு எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பி.ப 1.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சுவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பன தொடர்பான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 மே 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.05 மணியளவில் வியட்னாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதிமேதகு டோ லாம் அவர்கள் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அன்றையதினம் பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை கீழ்வரும் 07 தனியார் பாராளுமன்ற உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
| கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் | தனியார் உறுப்பினர் பிரேரணை |
| ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்கள் | தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல். |
| சமிந்த விஜேசிறி அவர்கள் | வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல். |
| ரவி கருணாநாயக்க அவர்கள் | புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல். |
| லால் பிரேமநாத் அவர்கள் | அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல். |
| ரோஹண பண்டார அவர்கள் | பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல். |
| நலின் பண்டார ஜயமஹ அவர்கள் | பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல். |
| ரவீந்திர பண்டார அவர்கள் | பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல். |
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks