பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-08-20
செய்தி வகைகள் : செய்திகள்
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
2026 ஆம் ஆண்டிற்காக தபால் ஊழியர்களுக்கு தபால் விநியோகப் பணிகளை மேற்கொள்வதற்காக 165 மின்சார மோட்டார் சைக்கிள்களும், 20 மின்சார முச்சக்கர வண்டிகளும் (e-three-wheelers) கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும், எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக ஏனைய தேவையான மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கௌரவ வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்தார். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் முன்வைத்த வாய்மூல விடைக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதியமைச்சர் இந்தத் தகவல்களை வழங்கினார்.1798 ஆம் ஆண்டு தபால் திணைக்களம் நிறுவப்பட்டதுடன், தற்போது இலங்கையில் மொத்தம் 647 தபால் அலுவலகங்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் 52 உயர் தர தபால் அலுவலகங்கள், 294 முதலாம் தர தபால் அலுவலகங்கள் மற்றும் 301 இரண்டாம் தர தபால் அலுவலகங்கள் உள்ளடங்குவதாகவும் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக, நாடு முழுவதும் 3,282 உப தபால் அலுவலகங்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.தபால் திணைக்களத்தில் தற்போது 17,830 நிரந்தர ஊழியர்களும், 1,660 பதிவு செய்யப்பட்ட பதிலீட்டு ஊழியர்களும் பணியாற்றுவதாகவும், அதன்படி மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 19,490 எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், திணைக்களத்தில் தற்போது 7,881 பணியிடங்கள் வெற்றிடமாக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதில் 4,753 நிரந்தர ஊழியர் பணியிடங்களும், 3,128 பதிவு செய்யப்பட்ட பதிலீட்டு ஊழியர் பணியிடங்களும் வெற்றிடமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டது.இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்தார். நிர்வாக சேவைப் பிரிவின் III ஆம் தரத்தைச் சேர்ந்த 21 தபால் அத்தியட்சகர்கள் உள்ளக ஆட்சேர்ப்பு முறையின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், 61 தபால் சேவை உத்தியோகத்தர்கள் திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், 732 தபால் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.அதேபோன்று, 40 சாரதிகள் திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், 367 உப தபால் நிலையப் பொறுப்பாளர்களுக்கும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1,000 பதிவு செய்யப்பட்ட பதிலீட்டு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2026-08-19
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மனுக்களின் பிரதிகள் மற்றும் “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதியொன்றும் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஆக. 19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
2026-08-18
விலங்குகள் (திருத்தம்) மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (18) சான்றுரைப்படுத்தினார்.1958ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விலங்குகள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் 2026.07.21 திகதியன்று முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 2026.08.06 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பிரதான சட்டத்தின் 38ஆம் பிரிவில் “விலங்கு” என்ற சொல்லுக்கான சட்டரீதியான வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். மேலும், “ஒரு விலங்கு” என்பதற்கான வரைவிலக்கணத்தை மீள வரையறுப்பதன் மூலம், ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகள் இந்தச் சட்டத்தின் IIஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், சட்டத்தின் IVஆம் பகுதிக்குப் பொருந்தும் வகையில் செம்மறியாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் உள்ளடங்கும் வகையில் வரைவிலக்கணங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைமச்சரினால் 2026.07.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026.08.06ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தத் திருத்தத்தின் மூலம், 1974ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் நவீனமயப்படுத்தப்பட்டு, நீர் வழங்கல், வடிகால் சேவைகளை வழங்குவது தொடர்பான சபையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் வலுப்படுத்தப்படுகின்றன.கைத்தொழில் பேட்டைகள், கைத்தொழில் பூங்காக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுக்கான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ சேவைகளையும் சபையின் பொறுப்புகளுக்குள் உள்ளடக்கும் வகையில் அதன் பொறுப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், மிகவும் பயனுள்ளதும் நிலையானதுமான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ஊழியர் காப்புறுதித் திட்டங்கள், தொழில்நுட்ப சேவைகள், பயிற்சி சேவைகள், ஆய்வக சேவைகள் மற்றும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் இந்தத் திருத்தத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, விலங்குகள் (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விலங்குகள் (திருத்தம்) சட்டமாகவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமாகவும் நடைமுறைக்கு வருகின்றன.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks