பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-06-09
செய்தி வகைகள் : செய்திகள்
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஜுன் 09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
உயர் நீதிமன்றம் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றலாம் என்று தீர்மானித்துள்ளது. எனினும் வாசகம் 14 [முன்மொழியப்பட்ட பிரிவு 12 அ(ஆ)] மற்றும் வாசகம் 18 [முன்மொழியப்பட்ட பிரிவுகள் 17அ, 17ஆ மற்றும் 17இ] ஆம் வாசகங்கள் மட்டும் விதிவிலக்காகும். இந்த வாசகங்கள் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். நீதிமன்றம் பரிந்துரைத்தபடி திருத்தப்பட்டால், அவற்றையும் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய (09) கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென்றும் சபாநாயகர் கட்டளையிட்டார்.
2026-07-20
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் “விரைவான அணுகல்” என்பதன் கீழ் ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்” என்ற பெயரில் கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.குறித்த விண்ணப்பங்கள் அரசியலமைப்புப் பேரவையின் பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.கடித உறையின் இடதுபுற மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்’ எனக் குறிப்பிடுமாறு கோரப்படுகிறது.
2026-07-20
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள வெற்றிடமொன்றையும் நிரப்புவதற்கு விதந்துரைப்பதற்காக ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் “விரைவான அணுகல்” என்பதன் கீழ் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்” என்ற பெயரில் கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.குறித்த விண்ணப்பங்கள் அரசியலமைப்புப் பேரவையின் பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.கடித உறையின் இடதுபுற மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்காக விதந்துரைத்தல்’ எனக் குறிப்பிடுமாறு கோரப்படுகிறது.
2026-07-16
நியாயமான அடிப்படை இன்றி தன்னிச்சையாக பொருட்களின் விலையை நிர்ணயித்து நுகர்வோரை பாதிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நாடு முழுவதும் 272 விசாரணை அதிகாரிகளை நியமித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விசாரணை அதிகாரிகள் மாவட்ட செயலகங்களுடன் இணைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ் தங்களது அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். நுகர்வோரை அநியாயத்திற்கு உள்ளாக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ருவன் திலக ஜயகொடி வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கௌரவ வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.நியாயமற்ற விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான விரிவான செயல்முறை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிடம் உள்ளது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்ட சில அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன. அவற்றை நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதுவரை இத்தகைய மீறல்களுக்கு எதிராக கணிசமான அளவு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தினசரி சந்தை ஆய்வுகளையும், பண்டிகைக் காலங்களில் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனுடன், கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்ட பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் விசேட மேற்பார்வைத் திட்டமும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2026-07-16
முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை, சிறுவர் பாதுகாப்பு, பௌதீக ரீதியான தண்டனை, அது தொடர்பான சட்டப் பின்னணி மற்றும் நேர்மறை ஒழுக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி அண்மையில் (ஜூலை 08) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதியமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை தொடர்பாக கல்வி அமைச்சின் பணிப்பாளர் (முன்பள்ளிக் கல்வி) கே.டி.டி. விமலசிறி விளக்கமளித்தார். முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகள் 2027 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட முன்பள்ளி ஆசிரியர் கையேடும் மாதிரி செயற்பாட்டு நூலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக 108 பிரதான பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், அவர்களின் மூலம் மாகாண மட்டத்தில் மேலும் 556 பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10 நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ் முன்பள்ளிக் கல்வியை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.அத்துடன், முன்பள்ளிகளுக்கான மதிப்பீடு மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கும், அடுத்த ஆண்டுக்குள் முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை சட்டமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த தேசியக் கொள்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, சுகாதார அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க, குறித்த அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன், சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி பிரீதிகா சகலசூரிய மற்றும் விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாரச்சி ஆகியோர் சிறுவர் பாதுகாப்பு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பங்கு, பௌதீக ரீதியான தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள், அவ்வாறான தண்டனைகளால் சிறுவர் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள், தண்டனையை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கத்திற்கு மாற்றாக ‘நேர்மறை ஒழுக்கத்தை’ சிறுவர்களுக்கு கற்பிப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் உடல் தண்டனைகளையும் தடுக்கும் நோக்கில் சட்ட மற்றும் கொள்கை ரீதியான மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தனது ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனைச் சட்டக் கோவையைத் திருத்துவதன் மூலம் உடல் தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடாக இலங்கை, சிறுவர்களுக்கு எதிரான உடல் மற்றும் உளவியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான சர்வதேசப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், சட்டத் திருத்தங்கள் எந்தவொரு தரப்பையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படக் கூடாது என்பதையும், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.இந்நிகழ்ச்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்றதுடன், அவர்கள் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks