01

E   |   සි   |  

2026-09-11

செய்தி வகைகள் : செய்திகள் 

புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் பாராளுமன்ற சபாநாயகரைச் சந்தித்தார்

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மாண்புமிகு வெய் ஹுவாசியாங் அவர்கள், கௌரவ சபாநாயகர்  வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (10) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம்  குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.

கௌரவ சபாநாயகர் அவர்கள் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்களை அன்புடன் வவேற்றதுடன், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நெருங்கிய தொடர்புகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பல்வேறு சவாலான காலகட்டங்களில், குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது, உண்மையான நண்பனாக இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியைத் தொடர்ந்து சீனா வழங்கிய உதவிகளையும், பாடசாலைச் சீருடைத் துணி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இலங்கை மக்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கௌரவ சபாநாயகர் அவர்கள், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குறிப்பாக பாராளுமன்றப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் வகையில், இலங்கை–சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக மேலும் பல முயற்சிகளும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். பட்டுப்பாதை மற்றும் கடல்வழிப் பாதைத் திட்டங்களின் கீழ் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளுக்கு விரிவடைந்துள்ளதாகவும், இதன் மூலம் இரு நாடுகளினதும் மக்களுக்கு நடைமுறைப் பயன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கௌரவ சபாநாயகர் வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள், இலங்கை மக்களின் நட்புணர்வும் புன்னகையும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையை “புன்னகைகளின் அழகிய தீவு” எனக் குறிப்பிட்ட அவர், நாட்டிற்கு வந்தது முதல் தமக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பையும் விருந்தோம்பலையும் பாராட்டினார்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் கடல்சார் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய உயர்மட்ட சந்திப்புகள் தொடர்பில் குறிப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு சீனாவிற்கு மேற்கொண்ட தனித்தனி விஜயங்களின்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களையும் சந்தித்ததாக தூதுவர் வெய் தெரிவித்தார். இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் மேலும் வளர்ச்சிக்கான புதிய மூலோபாய திசையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்த தூதுவர், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும், இரப்பர்–அரிசி உடன்படிக்கையின் 75ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடவுள்ள நிலையில், அந்த ஆண்டின் முக்கியத்துவத்தையும் இருதரப்பினரும் எடுத்துரைத்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கையில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பையும் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள் மேலும் தெரிவித்தார்.



தொடர்புடைய செய்திகள்

2026-10-23

‘பிரஜா சக்தி’ தேசிய இயக்கத்தின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 25 பில்லியன் ரூபா

‘பிரஜா சக்தி’ வறுமையை ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 25,000 மில்லியன் ரூபா நிதியில், 23,000 மில்லியன் ரூபா மாவட்ட மட்டத்தில் சமூக அபிவிருத்திச் சபைகளால் அடையாளம் காணப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 2,000 மில்லியன் ரூபாவிலிருந்து தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படும் நடுத்தர அளவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான்  அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பதிலிலேயே அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.‘பிரஜா சக்தி’ தேசிய இயக்கத்தின் கீழ் 24,221.38 மில்லியன் ரூபா செலவில் 15,725 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 15,316 திட்டங்கள் வாழ்வாதார அபிவிருத்தியின் கீழும், 273 திட்டங்கள் கல்வியின் கீழும், 136 திட்டங்கள் சுகாதாரத்தின் கீழும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்துத் திட்டங்களையும் 2026.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகள் ஊடாக, அந்தந்த மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் பல்பரிமாண வறுமையை ஒழிப்பதற்கு நேரடியாகப் பங்களிக்கும் திட்டங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, சமூகச் சூழல், மனித வள அபிவிருத்தி, பராமரிப்பு, விநியோக வலையமைப்புகள் மற்றும் அணுகல் வசதிகள் ஆகிய துறைகளின் கீழ் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் ஆகியவற்றின் ஊடாக மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கல்வி அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அமைச்சுகள் ஊடாகவும் மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி அல்லது ஏனைய நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.அத்துடன், மாற்றுத்திறனாளிகளையும் அவர்களது குடும்ப அலகுகளையும் வலுவூட்டும் நோக்கில், அவர்களுக்கென விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், நிதியுதவி வழங்குதல், நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


2026-10-22

மிளகு பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காகப் பல்வேறு ஆய்வுகள்

மிளகு பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக மரபியல் பண்புகளின் மதிப்பீடு, நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், பயிர் மேம்பாடு, தாவரப் போசணை முகாமைத்துவம், பயிரியல் ஆய்வுகள், அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம், பெறுமதி சேர்த்தல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இலங்கையின் மிளகு உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் மாவட்டங்களாக கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.தற்போது நாட்டில் பயிரிடப்படும் மிளகு வகைகளில் உள்ளூர் மிளகு வகை, பன்னியூர் 1 மற்றும் டிங்கிரி ரால, கொஹுகும்புரே ரால, பூட்டாவே ரால ஆகிய உள்ளூர் தெரிவு வகைகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.மிளகு பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்துவதற்காக நடுகைப் பொருட்களை இலவசமாக வழங்குதல், முதலீட்டு உதவிகளை வழங்குதல், சிறிய அளவிலான வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைத் திட்டங்களின் கீழ் மிளகுச் செடிகளை இலவசமாக வழங்குதல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான அறிவையும் உதவிகளையும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன், காலநிலை மாற்றங்களுக்கு மிளகு பயிர்ச்செய்கையை ஏற்புடையதாக்குவதற்குப் பொருத்தமான நீர்ப்பாசன முறைகளை அறிமுகப்படுத்துதல், நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், விலங்குகளால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான முதலீட்டு உதவிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.மிளகு உற்பத்திகளை சர்வதேச தரங்களுக்கு அமைவாகத் தயாரிப்பதற்காகச் சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் சிறந்த உற்பத்தி நடைமுறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தி, பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை உருவாக்குவதற்குத் தேவையான அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் முதலீட்டு உதவிகள் வழங்கப்படுவதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், மிளகு உற்பத்திகளை வெளிநாட்டுச் சந்தைகளில் சேதன உற்பத்திகளாகச் சந்தைப்படுத்தும் நோக்கில், பயிர்ச்செய்கைகளைச் சேதனப் பயிர்ச்செய்கைகளாக மாற்றுதல், அதற்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு உதவிகளை வழங்குதல், அத்துடன் ஏற்றுமதி விவசாயக் கிராமங்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.பல்வேறு ஊடகங்கள் ஊடாக மிளகு பயிர்ச்செய்கை தொடர்பான அறிவு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், மிளகு உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதிக்குத் தேவையான ஆலோசனைச் சேவைகளை வழங்குதல் மற்றும் விநியோகஸ்தர்களையும் கொள்வனவாளர்களையும் தொடர்புபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மேலும் தெரிவித்தார்.


2026-10-22

விசர்நாய்க்கடி நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்குவதற்காக 2025ஆம் ஆண்டில் ரூ. 655 மில்லியனுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது

விசர்நாய்க்கடி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்காக 2025ஆம் ஆண்டில் ரூ. 655,824,000 செலவிடப்பட்டுள்ளதாக கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர் வழங்கிய பதிலிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சர் சபையில் சமர்ப்பித்த பதிலுக்கு அமைய, 2025ஆம் ஆண்டில் நாய்க்கடிக்கு உள்ளாகி விசர்நாய்கடி நோயினால் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், 2025ஆம் ஆண்டில் பொதுச் சுகாதார கால்நடை மருத்துவ சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ. 220 மில்லியன் எனவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.பொதுச் சுகாதார கால்நடை மருத்துவ சேவைகள் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் விசர்நாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டில் ரூ. 51 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாய்களுக்குத் தடுப்பூசி வழங்குதல், கருத்தடை செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இத்திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதியாகும்போது நான்கு மாவட்டங்களில் 5,951 தெருநாய்களுக்குக் கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களிலும் வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வழங்கிய பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


2026-10-21

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.10.21

2026 ஒக்டோபர் 20 ஆம் திகதிய எனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட முப்பது மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.அத்துடன், 2026 ஒக்டோபர் 07, 08 மற்றும் 20 ஆம் திகதிய அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட இருபத்தைந்து மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் பதினொரு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாகவும் சபாயாகர் சபையில் அறிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks