01

E   |   සි   |  

2026-09-18

செய்தி வகைகள் : செய்திகள் 

ஜேர்மன் பாராளுமன்றத் தூதுக் குழுவினர் இலங்கைப் பாராளுமன்றக் குழுவினருடன் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,  ஜேர்மன் பாராளுமன்றத்தின் தெற்காசிய பாராளுமன்றக் குழுவின் தூதுக்குழுவொன்று செப்டெம்பர் 16ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிக்லஸ் காப்பே அவர்கள் தலைமையிலான இந்தக் குழுவில்,  கௌரவ கெரோல்ட் ஓட்டன், கௌரவ ஜோஹன் சாத்தோஃப் மற்றும் கௌரவ உல்லே ஷாவுஸ் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். அத்துடன், இலங்கைக்கான ஜேர்மன் பிரதித் தூதுவர் சாரா ஹாசல்பார்த், பாராளுமன்றச் செயலகப் பணியாளர் கதரீனா பீனெர்ட் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் தாரிணி தழுவத்தே ஆகியோரும் இத்தூதுக்குழுவில் இணைந்திருந்தனர்.

கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள் இத்தூதுக் குழுவை வரவேற்றதுடன், இலங்கை - ஜெர்மனி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் மதிய போசனத்துடனான கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் இலங்கை ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இலங்கைப் பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பில், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் குழு முறைமை, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் தலைமையை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், மற்றும் அரசியல் செயற்பாடுகளில் இளம் தலைமுறையினரின் அதிகளவிலான பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகிய விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், நேர்மை மற்றும் சட்டத்தை மதித்தல் தொடர்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், இன மற்றும் மத ரீதிதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் அனைத்துச் சமூகங்களிடையேயும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மதிய போசனக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஜேர்மன் தூதுக் குழுவினர், மூன்று அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் மற்றும் இரண்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடனான இணைந்த கலந்துரையாடலிலும் பங்கேற்றனர்.  வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். 

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எஸ். எம். மரிக்கார் ஆகியோருடன் மேற்படி குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்கள் சிலரும் இணைந்துகொண்டனர்.

தூதுக்குழுவினரால் அடையாளம் காணப்பட்ட ஆர்வமுள்ள துறைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்திய கருத்துப் பரிமாற்றத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் இக்குழுக்கள் வட்டமேஜைக் கலந்துரையாடலில் பங்கேற்க அழைக்கப்பட்டன. இக்கலந்துரையாடலானது அந்தந்தக் குழுக்களின் முக்கிய பங்களிப்புகள், தற்போதைய செயற்பாடுகள் மற்றும் மூலோபாய முன்னுரிமைகள் குறித்த பார்வைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது. இதில் கழிவு மேலாண்மை, நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு, மின்சாரம் மற்றும் சக்தி, அத்துடன் பொருளாதாரம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல்கள் இலங்கை மற்றும் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே அனுபவங்களையும் பார்வைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்த உதவியது.



தொடர்புடைய செய்திகள்

2026-11-12

கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (நவ. 12) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 6.30 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) நவம்பர் 13 ஆம் திகதி  முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 26 நாட்கள் இடம்பெறும்.2026 ஒக்டோபர் 7ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்  மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை  04 சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.


2026-11-12

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.11.12

இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (நவ. 12) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.சபாநாயகரின் அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்டமூலத்தின் 29 ஆம் வாசகம் அரசியலமைப்பின் 14(1)(இ) ஆம் உறுப்புரையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்பட முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.எவ்வாறாயினும், குழுநிலைப் பரிசீலனையின் போது உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம், மேற்படி முரண்பாடு நீங்குவதுடன், சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.மேலும், சட்டமூலத்தின் 7(1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்படலாம் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.எவ்வாறாயினும், குழுநிலைப் பரிசீலனையின்போது உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மேற்படி முரண்பாடு நீங்குவதுடன், சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு உட்பட்டு, சட்டமூலத்தின் ஏனைய ஏற்பாடுகள் எவையும் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் மேலும் தீர்மானித்திருப்பதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம்  தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றியும் சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.பின்வரும் திருத்தங்களை (அவற்றில் மூன்று மேலதிக மன்றாடியார் அதிபதி அவர்களினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன) குழுநிலையில் மேற்கொண்டதன் பின்னர், பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது:-குழுநிலைப் பரிசீலனையின் போது, 26(2) ஆம் உட்பிரிவில் “அத்தகைய பொலிசு அலுவலரின் விண்ணப்பத்தின் பேரில்” என்னும் சொற்றொடரை உட்புகுத்துவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மேற்படி உட்புகுத்தலுடன், 26(2) ஆம் உட்பிரிவு பின்வருமாறு அமைய வேண்டும்:-“(1) ஆம் உட்பிரிவின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நீதவான் முன்னிலைக்கு கொண்டு வரப்படுவதன் போது, புலனாய்வை மேற்கொள்கின்ற பொலிசு அலுவலர், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்காக சந்தேகநபரை மேலும் நீடிக்கப்பட்ட காலத்திற்கு தடுத்து வைத்திருப்பது அவசியமானது என நியாயமான ஏதுக்களைக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், நீதவான், எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களின் அடிப்படையில், அத்தகைய பொலிசு அலுவலரின் விண்ணப்பத்தின் பேரில், அத்தகைய சந்தேகநபரை மேலும் இருபத்துநான்கு மணித்தியாலங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்கு பொலிஸ் காவலில் வைத்திருக்கப்படுவதற்கு  அதிகாரமளிக்கப்படலாம்;நீதித்துறை மேற்பார்வையை வினைத்திறன் மிக்கதாக்கும் பொருட்டு, 59(5)(ஆ) ஆம் பந்தியில் “மேன்முறையீட்டு நீதிமன்றம்” என்னும் சொற்றொடருக்குப் பதிலாக “உயர் நீதிமன்றம்” என்னும் சொற்றொடரை இடுவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.தேவையற்றதாகக் கருதப்படுவதன் அடிப்படையில், சட்டமூலத்திலிருந்து 60(7) ஆம் உட்பிரிவை நீக்குதல்; மற்றும்66(1) ஆம் உட்பிரிவை பின்வருமாறு மீளமைத்தல் வேண்டும்”:-“இச்சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட அல்லது ஆக்கப்பட்ட ஒரு பணிப்புரை, பணிப்பு அல்லது கட்டளை அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு பணிப்பு, அரசியலமைப்பின் 126  ஆம், 140 ஆம் அல்லது 141 ஆம் உறுப்புரைகளின் கீழான நடவடிக்கைளில் கேள்விக்குட்படுத்தலாம்.”“குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருமாறு, தற்போதைய வடிவிலுள்ள சட்டமூலத்தின் வாசகம் 43(3) அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(ஐ) ஆம் உறுப்புரைகளுடன் முரண்படுகிறது. எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான நிபந்தனைகளின் அடிப்படையில், 43(3) ஆம் வாசகத்திற்குப் பதிலாகப் புதிய வாசகமொன்றை இடுவதன் மூலமும், புதிய 43(4) ஆம் வாசகமொன்றை உட்புகுத்துவதன் மூலமும் மேற்படி முரண்பாடு நீங்கும்.தற்போதைய வடிவிலுள்ள 169 ஆம் வாசகம், அரசியலமைப்பின் 76 ஆம் உறுப்புரையையும் கருத்திற்கொண்டு நோக்கும்போது, அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் 169(1) மற்றும் 169(3) ஆம் வாசகங்களில்  திருத்தங்களை மேற்கொள்வதன்  மூலம் மேற்படி முரண்பாடு நீங்கும்.தற்போதைய வடிவிலுள்ள 45 மற்றும் 65 ஆம் வாசகங்கள், அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றன. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, 45(1) ஆம் வாசகத்தைத் திருத்துவதன் மூலமும், குடிவரவு வசதிகளுக்கான செலவுகள் தொடர்பான முன்மொழியப்பட்ட ஏற்பாட்டை உரிய இலக்கமிடலுடன் உட்புகுத்துவதன் மூலமும் மேற்படி முரண்பாடுகள் நீங்கும்.பரிசீலிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அரசியலமைப்புடன் வேறு எத்தகைய முரண்பாடும் இல்லை. எனினும், 174 ஆம் வாசகத்திலிருந்து “எழுத்திலான” என்னும் சொல்லை நீக்குவதன் மூலம் அதனைத் திருத்துவதற்கான உறுதிமொழியையும் உயர் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.அடையாளங்காணப்பட்ட முரண்பாடுகளை நீக்குவதற்குத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், தொடர்புடைய ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட பெரும்பான்மை தேவைப்படும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சபாநாயகர் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்தார்.


2026-11-11

இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் கௌரவ பிரதிச் சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் டேவிஸ் மயர்ஸ் அண்மையில் கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.கௌரவ பிரதிச் சபாநாயகர் டேவிஸ் மயர்ஸை அன்புடன் வரவேற்றதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, சவால்மிக்க காலப்பகுதிகளில் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த பிரதிச் சபாநாயகர், பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றல்களை வலுப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (USAID) ஊடாக வழங்கப்பட்ட ஆதரவையும் பாராட்டினார்.இந்தச் சந்திப்பின்போது, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும் அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத்திட்ட அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களின் அண்மைய அமெரிக்க காங்கிரஸ் விஜயம் தொடர்பில் குறிப்பிட்டார். அத்துடன், USAID ஊடாக பாராளுமன்றத்தின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான ஆதரவுகள் குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார்.இலங்கைக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பேணுவதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்குமான தனது அர்ப்பணிப்பை டேவிஸ் மயர்ஸ் இதன்போது உறுதிப்படுத்தினார். அத்துடன், பாராளுமன்றக் கட்டடத்தின் அழகியல் மற்றும் அதன் கட்டடக்கலை முக்கியத்துவம் குறித்தும், இலங்கையின் இயற்கை அழகு குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, டேவிஸ் மயர்ஸ் பாராளுமன்றக் கட்டடத்தையும் பார்வையிட்டார்.இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் மற்றும் அரசியல் நிபுணர் நஸ்ரின் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-11

அநுராதபுரத்தின் 846 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக 18 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

அநுராதபுரம் மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொல்பொருள் பெறுமதி மிக்க 846 இடங்களைப் பாதுகாப்பதற்காக இவ்வருடம் 18,058,884 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.இதற்கமைய, திணைக்களத்தின் ஒதுக்கீடுகளின் கீழ் 12,609,034 ரூபாவும், வெளி நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 5,449,850 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இந்தத் தொல்பொருள் தளங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக, ஒவ்வொரு தொல்பொருள் தளத்தின் முக்கியத்துவம், அவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தன்மை, அமைவிடம் மற்றும் சட்டப் பின்னணி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இதற்கமைய, குறித்த இடங்களைக் கண்காணித்தல், பாதுகாப்புப் பணிகளை முன்னெடுத்தல், பாதுகாப்பு வேலிகளை அமைத்தல், எல்லைக் கற்களை நாட்டுதல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஆய்வுகளை முன்னெடுத்தல், பராமரித்தல், உறுதிப்படுத்துதல், அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks