E   |   සි   |  

2025-12-05

செய்தி வகைகள் : செய்திகள் 

2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்
  • மேலும் மூன்று சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் இன்று (டிச. 05) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 07.30 மணிக்கு ஆரம்பமானதுடன், இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. அத்துடன், இருவர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர். அதற்கமைய, 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவுசெலவுத்திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 06 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்றது. அதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 14 ஆம் திகதி 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (05) வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் 14 நாட்கள் இடம்பெற்றன. 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் 17 நாட்கள் இடம்பெறவிருந்ததுடன், சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக விவாத நாட்கள் இவ்வாறு 14 நாட்களாகக் குறைக்கப்பட்டன.

அந்த நிலையில், கடந்த சில நாட்களில் குழுநிலையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஒரு சில அமைச்சுக்களுக்கான செலவுத்தலைப்புகள் மீது முன்னர் திட்டமிடப்பட்ட தினங்களில் விவாதம் மேற்கொள்ள முடியாமல் போனதால், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு மேலதிகமாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் செலவுத்தலைப்புகளும் 2025.12.03 ஆம் திகதியும் இன்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன. 

மேலும், பாராளுமன்றத்தில் இன்று (05) நிறைவேற்றப்பட்ட 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.

அதற்கு மேலதிகமாக, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பவற்றுக்கும் பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, மூன்று குறைநிரப்புத் தொகைகளும் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டன.



தொடர்புடைய செய்திகள்

2026-05-19

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.05.19

பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப்பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (மே 19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.இச்சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடுகளும் அரசியலமைப்பின் எந்தவொரு உறுப்புரையுடனும் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.நிதிசார்  கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானம் அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “நிதிசார்  கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்)”  எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்கு கிடைக்கப்பெறிருப்பதாகவும் கௌரவ சபாநாயகர் அறிவித்தார்.பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய, வாசகம்  22 மற்றும் வாசகம்  39 தவிர, சட்டமூலம் பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம் என உயர்  நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், நீதிமன்றம் பரிந்துரைத்தபடி வாசகம் 22 மற்றும் வாசகம் 39 திருத்தப்பட்டால், அந்த வாசகங்களையும் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும்  அவர் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்தார்.குறித்த சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய (19) கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமெனவும் சபாநாயகர் கட்டளையிட்டார்.


2026-05-18

காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில்

காலி சௌவுத்லண்ட்  கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் (மே 14) நடைபெற்றது. காலி சௌவுத்லண்ட்  கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே அவர்கள், மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர்கள் தலைமைத்துவத்தில் மிகுந்த அனுபவத்தைப் பெற முடியும் எனக் குறிப்பிட்டார். நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவிருக்கும் மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு நாட்டில் வீண் விரயத்தைக் குறைப்பது குறித்த புரிதல் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன், ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவிகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ, மாணவர் பருவத்திலிருந்தே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிகாட்டியதோடு, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்தும் விளக்கமளித்தார்.இலங்கை பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா புலத்சிங்கள அவர்கள், பாராளுமன்றத்தின் வகிபாகம், அதன் அமைப்பு மற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து மாணவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.காலி சௌவுத்லண்ட்  கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வின் இறுதியில் காலி சௌவுத்லண்ட்  கல்லூரியின் அதிபர் என்.ஜீ.ஆர்.சுமேதா காரியவசம் நன்றியுரை நிகழ்த்தினார்.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் வாசனா எதிரிசூரிய, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-14

பாராளுமன்றம் மே மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றத்தை மே மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் மே மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் கூடும் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.மே 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மே 20ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை குறித்த ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.மே 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2481/02, 2482/08 மற்றும் 2482/12 ஆகிய இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்டவை), ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் (2026.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட பாராளுமன்றத்தின் 3ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான 11ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளக்கப்பட்டுள்ளன) என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மே 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை காலஞ்சென்ற முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எஸ்.ஜீ.முதுகுமாரண, சந்திரதாஸ கலப்பதி, நந்தன குணதிலக, ஜனக் மஹேந்திர அதிகாரி மற்றும் கனகசபை தம்மன்பிள்ளை ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை என்பன எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


2026-05-14

பாராளுமன்ற உறுப்பினர்ளுக்கான அஞ்சல் வதிகளுக்கான புதிய முத்திரைகள் வெளியீடு

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அஞ்சல் வசதிகளுக்கான புதிய முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இங்கு ரூ. 20 மற்றும் ரூ. 70 பெறுமதியான புதிய முத்திரைகள் வெளியிடப்பட்டன.இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் இந்த முத்திரைகள் வெளியிடப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பலதரப்பட்ட அஞ்சல் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர ஆகியோரும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, அஞ்சல்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார, பிரதி தபால்மா அதிபர் (செயற்பாடு) எச்.எம்.பிரேமச்சந்திர ஹேரத், முத்திரை பணியகத்தின் பணிப்பாளர் எல்.ஜி.என்.த சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks