பாராளுமன்றத்தை பார்வையிட வருபவர்களுக்கான பொதுவான வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள்
பாதுகாப்பு தொடர்பான தகவல்கள்
- பாராளுமன்ற வளாகத்தினுள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்ய, உங்கள் வருகையின் போது பல பாதுகாப்பு நடைமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
- படைக்கல சேவிதரால் வழங்கப்படும் ஒரு அனுமதிப்பத்திரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். குறித்த அனுமதிப்பத்திரம் நீங்கள் வருகை தரும் நாளுக்கு மாத்திரம் செல்லுபடியானதாக இருப்பதுடன் பாராளுமன்ற வளாகத்தினுள் நீங்கள் இருப்பதற்கு அவசியமானது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியை விட்டு நீங்கிச் செல்லும் வரை அனைத்து நேரங்களிலும் நீங்கள் இந்த அனுமதிப்பத்திரத்தை உங்களிடம் வைத்திருக்க வேண்டும்.
- ஆரம்ப அனுமதிப்பத்திரம் ஜயந்திபுர பொதிகள் கருமபீடத்தில் வழங்கப்படும், அத்துடன் பாராளுமன்ற கட்டடத்துக்குள் நுழைவதற்கான அனுமதிப்பத்திரம் உத்தியோகபூர்வ பொது மற்றும் அரச வரவேற்புக் கருமபீடத்தில் வழங்கப்படும்.
- முன் அறிவித்தல் வழங்கப்படாமல் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் சூழ்நிலைகளும் உள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தொடர்புடைய தரப்புகளுக்கு தகவல்களை வழங்க எம்மால் முடிந்தளவு நாம் முயற்சிப்போம்.
- பாதுகாப்புக் காரணங்களுக்காக பின்வரும் பொருட்கள் பார்வையாளர் கூடங்களுக்குள் கொண்டு வரப்பட அனுமதிக்க வழங்கப்படமாட்டாது:
- பொதிகள், கைப்பைகள், பிரீஃப்கேஸ், பயணப்பைகள், அல்லது வேறு ஏதாவது வகை பைகள் அல்லது வாலட்கள்
- புத்தகங்கள், ஆவணங்கள், பேனைகள், பென்சில்கள் அல்லது வேறு ஏதாவது வகை காகிதாதிகள்
- மழை அங்கிகள், தொப்பிகள், குடைகள் புகைப்படக் கருவிகள்
- கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் உள்ளடங்கலாக மின்னியல் அல்லது இலத்திரனியல் சாதனங்களும் துணைக்கருவிகளும்.
- சிகரெட், புகையிலை, வெற்றிலை, புகைக்குழல், உணவுப் பொருட்கள் போன்றன.
- பார்வையாளர் கூடங்களுக்குள் எடுத்துச்செல்லப்படக் கூடாது என தீர்மானிக்கப்படும் வேறு ஏதாவது பொருட்கள்.
- மேலுள்ளவாறான பொருட்களை கொண்டு வருவதை தவிர்த்துக்கொள்வதுடன், தேவையாயின் அவற்றை வாகனங்களுக்குள் வைத்து விட்டு வரலாம்.
- நீங்கள் பாராளுமன்றத்துக்குரிய ஆடையொழுங்கை பின்பற்ற வேண்டும். அதனை பின்பற்றத் தவறுவது நுழைவு அனுமதி மறுப்புக்கு வழிவகுக்கலாம்.
- பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழையும் வேளை, வாகனங்கள் மற்றும் வாகன நிறுத்தல் தொடர்பான விதிகளை பின்பற்றவும்.
- ஜயந்திபுர நுழைவாயில், பொதுமக்கள் நுழைவாயில் மற்றும் பார்வையாளர் கூட நுழைவாயில் என்பவற்றில் அனைத்து வருகை தருனர்களும் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
- மேற்குறிப்பிட்ட நுழைவாயில்களில் உடற் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நீங்கள் பொலிஸ் அலுவலர்களை அனுமதிக்க வேண்டும். ஏதாவது ஒரு சந்தேகத்துக்கிடமான சம்பவத்தின் போது மேற்குறிப்பிட்ட இடங்கள் அல்லாத வேறு இடங்களிலும் உங்களிடம் சோதனைகள் நடத்தப்படலாம்.
- பொதுமக்கள் நுழைவாயில் கதவின் ஊடாக உங்களால் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைய முடிவதுடன் அங்கிருந்து மேற்கு ஏறுபாதை ஊடாக பொதுமக்கள் பார்வையாளர் கூடத்தை சென்றடையலாம். இதன் போது பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் உங்களுக்கு வழி காட்டுவர், அத்துடன் ஏனைய பகுதிகளுக்குள் நுழைதல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதால் நீங்கள் ஏனைய எந்தப் பகுதிக்கும் செல்லலாகாது.
- பாராளுமன்றத்துக்கு வருகை தரும் நபர்கள் ஜயந்திபுர நுழைவாயிலை மாத்திரமே பயன்படுத்த வேண்டும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது பாரளுமன்றத்தின் பணியாளர் ஒருவருடன் வருகை தரும் நபர்களும் இதே நுழைவாயிலையே பயன்படுத்தல் வேண்டும்.
- அடையாளத்தை உறுதிப்படுத்தல் மற்றும் உடற்பரிசோதனை நிறைவுற்றவுடன், அனுமதி வழங்கப்பட்ட வருகை தருனர்கள் பொதுமக்கள் நுழைவாயிலுக்கு தமது வாகனங்கள் மூலம் அல்லது பாராளுமன்ற குறுந்தூர பேருந்து சேவை மூலம் பயணிக்கலாம். வருகை தருனர்கள் வேறு எந்த நுழைவாயிலையும் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற கட்டடத்தினுள் உள்ள வருகை தருனர்கள் அனைத்து நேரங்களிலும் உரிய கருமபீடத்தினால் வழங்கப்படும் அடையாளச் சிட்டையை அணிந்திருக்க வேண்டும்.
- வழிகாட்டப்படும் சுற்றுலா முறைமையின் கீழ் உள்ள வருகை தருனர்கள் ஒரு பொதுமக்கள் வெளிச்சென்றடைதல் அலுவலருடன் இருத்தல் வேண்டும். பாராளுமன்ற கட்டடத்தினுள் ஒரு பொதுமக்கள் வெளிச்சென்றடைதல் அலுவலரின் பிரசன்னமின்றி வருகை தருனர்கள் இருப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
சோதனை மற்றும் தகுதிச் சோதனை
- பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கு முன்னர் உங்களின் உடமைகள் விமான நிலைய பாணியில் அமைந்த பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்.
- பாதுகாப்பு நடைமுறைகளில் ஒரு நாளின் 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு கமராக்களும் உள்ளடங்குகின்றன.
பார்வையாளர் கூடங்களுக்கு வருகை தரல்
பொதுமக்கள் பார்வைக் கூடங்களுக்கு செல்வதற்கு படைக்கல சேவிதரின் அனுமதி பெறப்பட வேண்டும். இந்த அனுமதி நடைமுறை பற்றி அறிந்துகொள்ள “உங்களின் சுற்றுலாவை திட்டமிடல்” பக்கத்தை நோக்கவும்.
பார்வைக் கூடங்களுக்கு வருகை தரும் நபர்கள் ஒரு பார்வைக் கூட அனுமதிப்பத்திரத்தை தம் வசம் வைத்திருக்க வேண்டும். இந்த அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி பாராளுமன்ற பார்வைக் கூடம் தவிர்ந்த ஏனைய இடங்களுக்கு செல்லுதல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
செய்யக் முடியுமான விடயங்களும் செய்யக் கூடாத விடயங்களும்
- ஸ்கின்னிகள் மற்றும் கட்டைக் காற்சட்டை போன்ற உடைகளை அணிந்தவர்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதால், நீங்கள் பொருத்தமான உடைகளை அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகச் சூழலுக்கு கௌரவமளிக்கும் வகையில் அமைந்த நீளக் காற்சட்டைகள், சட்டைகள் மற்றும் டீ-சேர்ட்கள் போன்றவற்றை நீங்கள் அணிவது அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்களின் கலாச்சார ஆடைகளை அணிந்திருக்கவும் அனுமதி உள்ளது.
- பொதுமக்கள் பார்வைக் கூடம் அத்துடன் ஒட்டுமொத்த கட்டடத்தினுள்ளும் முழுமையான அமைதி பேணப்பட வேண்டும். உங்களின் அமைதியான நடத்தை பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தடங்கலின்றி இடம்பெறுவதை உறுதி செய்யும்.
- மேற்கு ஏறுபாதை ஊடாக நீங்கள் பொதுமக்கள் பார்வைக்கூடத்தை சென்றடைய உங்களுக்கு அனுமதி வழங்கப்படும். பணியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் உங்களுக்கு இதன் போது வழிகாட்டுவர். ஏனைய பகுதிகளுக்குள் சுற்றித்திரிய உங்களுக்கு அனுமதியில்லை என்பதால் அவ்வாறு நீங்கள் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
- பொதுமக்கள் பார்வைக்கூடம் அத்துடன் கட்டடத்தின் ஏனைய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிக் கருவிகள் மற்றும் ஏனைய கருவிகளைத் தொடுதல் அல்லது சேதமேற்படுத்தல் என்பவற்றை தவிர்க்கவும்.
- இருக்கைகள் தொடர்பில் பணியில் உள்ள பாராளுமன்ற பாதுகாப்பு அலுவலர்கள் பொலிஸ் அலுவலர்கள் அல்லது வெளிச்சென்றடைதல் அலுவலரின் பணிப்புரைகளை பின்பற்றவும். பாராளுமன்ற அரங்கினுள் ஏதாவது தொந்தரவுகள் ஏற்படுத்தப்பட்டால் தொடர்புடைய நபர்களை பொதுமக்கள் பார்வைக்கூடத்தில் இருந்து அகற்றுவதற்கு மேற்குறிப்பிட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, எனவே அவர்களின் பணிப்புரைகளை பின்பற்றவும்.
- தியவன்னா நதிக்கரையில் கூடி நிற்க வேண்டாம். உங்கள் குழுவில் உள்ள சிறுவர்கள் மற்றும் ஏனையோர் நதிக்கரைக்கு நெருக்கமாக நிற்காமல் இருப்பதை உறுதி செய்யவும்.
- பார்வைக்கூடடத்தில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது: பார்வைக்கூடத்துக்குள் எதனையாவது கொண்டு வரல், புகைபிடித்தல், பேசுதல், ஆர்ப்பரித்தல், சத்தமிடல், நகைச்சுவைகளைக் கூறல், சுற்றி நடத்தல் அல்லது நிற்றல், வேடிக்கைகளை மேற்க்கொள்ளல், சைகைகளுக்காக முகபாவனைகளை காண்பித்தல், பாராளுமன்ற அரங்குக்குள் எட்டிப்பார்த்தல், விரல்களை, கைகளை அல்லது கால்களை பாராளுமன்ற அரங்கை நோக்கி காண்பித்தல், அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கையசைத்தல் அல்லது சைகை செய்தல், தூங்குதல், குறிப்புகளை எடுத்தல், அத்துடன் பத்திரிகை அல்லது புத்தகங்களை படித்தல். மேலதிகமாக, பாராளுமன்ற அமர்வுகளுக்கு தொந்தரவாக எந்த ஒரு செயலும், பாதுகாப்பு வேலிகளுக்கு மேலாக பாய்தல், அத்துடன் பத்திரிகையாளர் கூடத்தில் உள்ள இருக்கைகளில் அமருதல்.
சுற்றுலாவின் போது உங்களின் நடத்தை
நீங்கள் பாராளுமன்ற வளாகத்தினுள் உள்ள போது பாராளுமன்ற தத்துவங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டம், ஒழுங்குவிதிகள், நிலையியற் கட்டளைகள், அத்துடன் இலங்கையின் பொதுவான சட்டங்கள் என்பன உங்களுக்கு பிரயோகம் மிக்கனவாகக் காணப்படும். அதிகாரிகளால் வழங்கப்படும் பணிப்புரைகள் மற்றும் வழிகாட்டல்களை அனைத்தையும் நீங்கள் பின்பற்றியொழுக வேண்டும்.
பாராளுமன்ற வளாகத்தினுள் உங்களின் செயற்பாடுகள் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்துவனவாக அமையலாகாது.
எனவே, சுற்றுலாவின் போது நீங்கள்:
- அமைதியாக இருக்க வேண்டும்.
- நீங்கள் செல்வதற்கு உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு மாத்திரமே செல்ல வேண்டும்.
- பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பாராளுமன்ற பணியாளர்களுக்கு நீங்கள் தொந்தரவளிக்கக் கூடாது.
- தடை செய்யப்பட்ட எந்த செயற்பாட்டிலும் நீங்கள் ஈடுபடலாகாது.
- பாராளுமன்ற ஆடையொழுங்கை நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
- தொல்பொருட்கள், தளவாடங்கள் அல்லது எந்த ஒரு கருவியையும் தொடவோ சேதப்படுத்தவோ கூடாது.
- பொதுமக்கள் பார்வைக்கூடத்துக்கு மேற்கு ஏறுபாதை ஊடாக செல்வதற்கு உங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
சிறுவர்களுடன் வருகை தரல்
பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் வேளை சிறு குழந்தைகள் பார்வையாளர் கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது.
மேலதிகமாக, சிறு குழந்தைகள் மற்றும் 10 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் பார்வையாளர் கூடத்தின் முதலாவது வரிசையில் அமர அனுமதிக்கப்படமாட்டாது.
பாராளுமன்றக் கூட்டங்கள் இடம்பெறும் நாட்களில் 10 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் பார்வையாளர் கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.