02

E   |   සි   |  

அரச அலுவலர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தரல்

பணி நிமித்தமாக பாராளுமன்றத்துக்கு வருகை தரும் அரச அலுவலர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வசதிகளை விளக்கும் ஒரு வழிகாட்டல்.

உரிய நேரத்தில் வந்தடைதல்

குழுக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளும் அரச அலுவலர்கள், தாமதங்களை தவிர்க்கும் நோக்கில் பாராளுமன்றத்துக்கு தயவு செய்து முன்னதாகவே வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. ஒரே நேரத்தில் பல கூட்டங்கள் இடம்பெறுவதால், பாதுகாப்பு சோதனைகள் காரணமாக நுழைவாயிலில் தடங்கல்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

தடங்கலற்ற உள்நுழைதலை உறுதி செய்வதற்காக, உங்களின் கூட்டம் ஆரம்பமாவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் முன்னதாக அனுமதிப்பத்திரக் கருமபீடத்தை வந்தடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இது தேவையற்ற தாமதங்களை தடுப்பதற்கும் உங்களின் உத்தியோகபூர்வ கூட்டங்களுக்கு நீங்கள் உரிய நேரத்தில் வருவதை உறுதி செய்யவும் உதவும்.

இலகுவான அணுகலுக்கான அனுமதிப்பத்திரங்கள்

அலுவலக நோக்கங்களுக்காக அடிக்கடி பாராளுமன்றத்திற்கு வருகை தரும் அரசு அதிகாரிகளுக்கு வசதியாக வருடாந்த/நாளாந்த நுழைவு அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்.

அமைச்சுகளின் செயலாளர்களுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரங்கள்

பாராளுமன்றத்துக்கு அடிக்கடி வருகை தரும் அரச அலுவலர்களுக்கு உதவும் வகையில், அமைச்சுகளின் செயலாளர்களுக்கு நாம் வருடாந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குகின்றோம். பாராளுமன்ற அமர்வு தினங்களில் அரச அலுவலர்கள் அரச அலுவலர் கூடங்களுக்குள் நுழைதல், பாராளுமன்றக் குழுக்கூட்டங்களில் பங்கேற்றல், அத்துடன் ஏனைய உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அரச அலுவலர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தருவதை இவ்வனுமதிப்பத்திரங்கள் அனுமதிக்கும். நடப்பு ஆண்டுக்கான அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு செயலாளரும் பின்வரும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வர்:

  • வாகனத்துக்கான அனுமதிப்பத்திரம் – 01
  • அரச அலுவலர் கூடத்துக்கான அனுமதிப்பத்திரங்கள் – 03
  • அரச அலுவலர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் – 01
  • உணவு விடுதிக்கான அனுமதிப்பத்திரம் – 01

இந்த அனுமதிப்பத்திரங்களுக்கான கோரிக்கைகள் தொடர்புடைய அமைச்சின் செயலாளரால் கையொப்பமிடப்பட வேண்டியதுடன் அவை படைக்கல சேவிதரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஒரு நாளாந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளல்

உங்களுக்கு ஒரு நாளாந்த அனுமதிப்பத்திரம் அவசியமாயின், நீங்கள் செய்ய வேண்டிய விடயங்கள் பின்வருமாறு. முதலாவதாக உங்கள் அமைச்சின் செயலாளரிடம் இருந்து நீங்கள் ஒரு பரிந்துரைக் கடிதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அக்கடிதத்தை படைக்கல சேவிதருக்கு அனுப்புங்கள். வருகை தரும் அரச அலுவலர்களுக்கு நாளாந்த அனுமதிப்பத்திரங்கள் பின்வரும் அணுகல்களை வழங்கும்:

  • அரச அலுவலர்கள் கூடத்துக்குள் நுழைதல்
  • பாராளுமன்ற பார்வையாளர் கூடம், அமைச்சர்களின் அறைகள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ பிரதேசங்களுக்கான அணுகல்
  • பாராளுமன்ற குழுக்கூட்டங்களில் பங்கேற்றல் அல்லது ஏனைய உத்தியோகபூர்வ தேவைகளை நிறைவேற்றல்

பாராளுமன்றத்துக்கு வருகை தரும் அரச அலுவலர்களுக்கான ஆவணங்களை அனுப்புதல்

துரித கவனயீர்ப்புக்காக, பாராளுமன்றத்துக்கு வருகை தரும் அரச அலுவலர்கள் பற்றிய விபரங்கள் அல்லது வருகை தருவதற்கான அனுமதி கோரல்களை 2777473, 2777322, அல்லது 2777323 என்ற தொலைநகல் இலக்கங்கள் ஊடாக அனுப்பி வைக்கவும்.

குழுக் கூட்டங்களுக்கு, குழுவின் செயலாளர் அல்லது உதவிப் பணிப்பாளரிடம் (நிருவாகம்) பெறப்பட்ட ஒரு பரிந்துரையுடன் விபரங்களை படைக்கல சேவிதருக்கு சமர்ப்பிக்கவும். இது இலகுவான தொடர் செயன்முறையாக்கத்துக்கு வழிவகுக்கும்.

பிரச்சினைகளைத் தவிர்க்க பின்வரும் விடயங்களை கருத்திற்கொள்ளவும்:

  • ஆவணங்களை நேரடியாக படைக்கல சேவிதர் அல்லது குழுவின் செயலாளர்/உதவிப் பணிப்பாளருக்கு நேரடியாக அனுப்பி வைக்கவும், வேறு அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டாம்.
  • தேவையற்ற ஆவணங்களை அல்லது ஒரு ஆவணத்தின் பல பிரதிகளை அனுப்பவதை தவிர்க்கவும்.
  • இறுதி நிமிட ஆவண சமர்ப்பிப்பை தவிர்ப்பதுடன் ஆவணங்களை கூடிய அளவு முன்னதாக சமர்ப்பிக்கவும்.
  • அனைத்து மாற்றங்களும் தெளிவாகக் குறிப்பிடப்படுவதையும் ஒரு தலைப்புக் கடிதம் ஆவணங்களுடன் இணைக்கப்படுவதையும் உறுதி செய்யுங்கள்.
  • பெயர்கள், தேசிய அடையாள அட்டை இலக்கங்கள், அத்துடன் வாகன பதிவு இலக்கங்கள் போன்ற அத்தியாவசியமான தகவல்களை உள்ளடக்கவும்.
  • 2777100 (உள்ளக நீடிப்பு 5422, 5334, அல்லது 5302) என்ற இலக்கத்துக்கு அல்லது மேலுள்ள தொலைநகல் இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி ஆவணங்கள் கிடைக்கப்பெற்றமையை உறுதி செய்யவும்.
  • தொடர்புடைய அனைத்து விபரங்களையும் குறைந்தது ஒரு பணி நாளுக்கு முன்னதாக அனுப்பி வைக்கவும்.

பாராளுமன்றத்துக்கு அரச அலுவலர்களை ஏற்றி வரும் வாகனங்கள்

உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக அரச அலுவலர்களை வாகனங்கள் பாதுகாப்பு தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் வாகன சாரதிகளுடன் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் அனுமதிக்கப்படும்.

அரச அலுவலர்களின் வாகனங்கள் ஜயந்திபுர பிரதான நுழைவாயில் ஊடாக மாத்திரம் உள்ளே வர அனுமதிக்கப்படும்.

ஜயந்திபுர பிரதான நுழைவாயிலில் வாகனங்கள் ஒரு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் போது அரச அலுவலர்கள் வாகனங்களில் இருந்து இறங்கத் தேவையில்லை.

வாகனத்தில் உள்ள அனைத்து பொருட்களும் சோதனை செய்யப்படும். பாதுகாப்பு சோதனைக்கு வசதியளிக்கும் விதத்தில் சாதனங்கள், உபகரணங்கள், கருவிகள், பயணப் பைகள், அத்துடன் ஏனைய தேவையற்ற பண்டங்களை எடுத்து வருவதை தவிர்க்கவும். உங்களின் வருகையின் நோக்கத்துக்கு பொருத்தமான ஆவணங்களை மாத்திரம் எடுத்து வரவும்.

பாதுகாப்பு சோதனை நிறைவுற்ற பின்னர், பொலிஸ் அலுவலர்கள் வாகனத்தை பாராளுமன்றக் கட்டடத்தின் பொதுமக்கள் நுழைவாயிலை நோக்கி அனுப்புவர்.

பொதுமக்கள் நுழைவாயிலில் வைத்து அரச அலுவலர்கள் வரவேற்பு கருமபீடத்துக்கு அரச அலுவலர்கள் அனுப்பப்படுவர். சாரதிகளால் செலுத்தப்படும் வாகனங்கள் ஜயந்திபுர வாகனத் தரிப்பிடத்துக்கு அல்லது ஏற்புடைய இன்னொரு வாகனத் தரிப்பிடத்துக்கு வாகனங்கள் அனுப்பப்படும்.

திரும்பிச் செல்லும் வேளை வாகனத்தை மீளழைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வக் கடமைகள் நிறைவடைந்த பின்னர், திரும்பிச் செல்வதற்காக ஜயந்திபுர பிரதான நுழைவாயில் அல்லது நுகசெவன அல்லது பின்னியர வெளியேறும் வழிகளை பயன்படுத்த முடியும்.

எவ்வாறாயினும், வாகனம் அரச அலுவலரினால் செலுத்தப்படும் வாகனம் எனில், குறித்த வாகனம் ஜயந்திபுர வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட வேண்டியதுடன் அரச அலுவலர் பிரதான நுழைவாயிலில் உள்ள அனுமதிப்பத்திர கருமபீடத்தை வந்தடைய வேண்டும். இக்கருமபீடத்தில் அடையாளப்படுத்தல் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்த பின்னர் பாராளுமன்ற கட்டடத்தை சென்றடைய பாரளுமன்றத்தின் குறுந்தூர பேருந்து சேவையை குறித்த அரச அலுவலரால் பயன்படுத்த முடியும்.

தற்காலிக வர்ண அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள்

அரச அலுவலர்கள் தமது தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியான கடவுச்சீட்டு, அல்லது அவர்களின் அலுவலகத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிப்பதன் மூலம் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். படைக்கல சேவிதரால் வழங்கப்பட்ட நுழைவு அனுமதிப்பத்திரங்கள் அரச அலுவலர்களிடன் இருந்தால், அவற்றை அரச அலுவலர்கள் வரவேற்பு கருமபீடத்தில் உள்ள வரவேற்பாளரிடம் சமர்ப்பிப்பதும் அவசியமாகும்.

தொடர்புடைய தகவல்களை வரவேற்பாளர் ஆவணப்படுத்துவதுடன் அடையாள ஆவணத்தை தன் வசம் வைத்திருப்பார், அத்துடன் ஒரு வர்ண தற்காலிக அனுமதிப்பத்திரத்தை வழங்குவார். திரும்பிச் செல்லும் வேளை அந்த அனுமதிப்பத்திரத்தை மீளக் கையளிப்பதன் மூலம் அரச அலுவலர்கள் தமது அடையாள ஆவணத்தை மீளப்பெறலாம்.

பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழையும் வேளை, அனைத்து அரச அலுவலர்களும் ஒரு உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவர்களின் பைகள் மற்றும் ஆவணங்களும் சோதனை செய்யப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இவ்வாறான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதை கருத்திற்கொண்டு, பாதுகாப்பு அதிகார தரப்புகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரச அலுவலர்களிடம் வினயமுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

பாராளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியொழுகுதல் அத்தியாவசியமானது. தமது வருகையின் போது பொலிஸ் அலுவலர்கள் மற்றும் கடமையிலுள்ள பாதுகாப்பு அலுவலர்களுக்கு தமது ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை வழங்குமாறு அரச அலுவலர்களிடம் வினயமுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

பாராளுமன்றக் கட்டடத்துக்குள் இலத்திரனியல் உபகரணங்களை கொண்டு வரல்

அரச உத்தியோகர்களின் கூடத்தினுள் தமது கையடக்க தொலைபேசிகளைக் கொண்டு வருவதற்கு அரச உத்தியோகத்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அரச அலுவலர்களுக்கான வரவேற்பு கருமபீடத்தில் நீங்கள் உங்களின் கையடக்க தொலைபேசிகளை கையளிக்க முடியும்.

அரச அலுவலர்களின் கூடத்தில் நுழையும் தேவை இல்லாத, ஆனால் குழுக் கூட்டங்கள் அல்லது ஏனைய உத்தியோகபூர்வ தேவைகளுக்காக தமது கையடக்க தொலைபேசிகளைக் கொண்டு வரும் அவசியம் உள்ள அரச அலுவலர்கள் அதற்கான அனுமதியை பெற வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட ஒரு விண்ணப்ப படிவம் இதற்காக படைக்கல சேவிதரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றால், நடப்பு ஆண்டுக்கு செல்லுபடியான அனுமதிப்பத்திரம் உங்களுக்கு வழங்கப்படும். தாமதங்களைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு வருகையின் போதும் இந்த அனுமதிப்பத்திரத்தைக் கொண்டு வரவும்.

மடிக்கணணிகள், டேப்லட்கள் மற்றும் ஐபாட்கள் என்பன அரச அலுவலர்கள் கூடத்துக்கு கொண்டுவரப்பட முடியும். இதற்கான கோரிக்கையை மேற்கொள்ள ஒரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

குழுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ தேவைகளுக்கு மடிக்கணணிகள், டேப்லட்கள் மற்றும் ஐபாட்கள் என்பன முன் அனுமதியுடன் கொண்டு வரப்பட அனுமதி வழங்கப்படும். அனுமதிக்காக உரிய படிவத்தை சமர்ப்பிக்கவும்.

அனைத்து அனுமதிப்பத்திரங்களும் படைக்கல சேவிதர், பிரதி படைக்கல சேவிதர், அல்லது உதவி படைக்கல சேவிதரால் வழங்கப்படுகின்றன.

உத்தியோகபூர்வ இடங்களை அணுகுதல்

நீங்கள் அரச அலுவலர்கள் கூடம், பாராளுமன்ற பார்வையாளர் கூடம், அமைச்சரின் அறை, அல்லது உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக வேறெங்கு சென்றாலும் உங்களின் விடயங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். படைக்கல சேவிதர், பிரதி படைக்கல சேவிதர், அல்லது உதவு படைக்கல சேவிதர் அனைத்தையும் கையாள்வார்.

உங்களின் நுழைவுக்கான அனுமதிப்பத்திரங்களை அவர்கள் ஏற்பாடு செய்வதுடன் பின்வரும் தரப்புகளுக்கு உரிய பணிப்புரைகளையும் வழங்குவார்கள்;

  • பாராளுமன்ற பொலிஸ்
  • வரவேற்பு கருமபீடங்கள்
  • பாதுகாப்பு நபர்கள்

பொது இடங்களின் உத்தியோகபூர்வ பயன்பாடு

அரச அலுவலர்கள் கூடம் அல்லது பார்வையாளர் கூடத்தை உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வேளை, அதனை இலகுபடுத்துவதற்கான சில வழிகாட்டல்கள் எம்மிடம் உள்ளன.

முதலாவதாக, அரச அலுவலர்கள் வரவேற்பு கருமபீடத்தில் இருந்து நீங்கள் ஒரு தற்காலிக வர்ண அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், குறித்த நாளுக்கு என படைக்கல சேவிதரால் வழங்கப்பட்ட செல்லுபடியான அரச அலுவலர் கூட அனுமதிப்பத்திரம் உங்களிடம் இருந்தால் மாத்திரமே இந்த தற்காலிக வர்ண அனுமதிப்பத்திரத்தை உங்களால் பெற முடியும். இதே நடைமுறை பொதுமக்கள் பார்வைக் கூடத்தை அணுகுவதற்கும் பிரயோகம் மிக்கது.

இந்தப் பிரதேசங்களை உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான எந்த கோரிக்கையும் உங்கள் அமைச்சின் செயலாளர் அல்லது மேலதிக செயலாளர் ஊடாக படைக்கல சேவிதரை சென்றடைய வேண்டும். பாராளுமன்றத்தின் ஏனைய துறைகளின் செயலகங்களுக்கு கோரிக்கைகளை அனுப்புவதை தயவு செய்து தவிர்க்கவும். எவ்வாறாயினும், விசேட சூழ்நிலைகளில், ஒரு அரச அலுவலர் அரச அலுவலர்கள் கூடத்தில் இருக்கும் தேவை எழுமாயின், அதற்குரிய ஏற்பாடுகளை நாம் மேற்கொள்வோம்.

படைக்கல சேவிதரின் திணைக்களத்தில் இருந்து நாளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுவதை உங்களின் அமைச்சு முன்னதாகவே உறுதி செய்ய வேண்டும். இந்த அனுமதிப்பத்திரங்கள் அரச அலுவலர்கள் கூடம் மற்றும் பார்வையாளர் கூடங்களை, விசேடமாக வரவு செலவு வாசிப்பு காலகட்டத்தில் அணுகுவதற்கான தனி நபர் அனுமதிப்பத்திரங்களாகும்.

அரச அலுவலர்கள் கூடத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான இருக்கைகளே காணப்படுவதால், உத்தியோகபூர்வ தேவையின் அடிப்படையில் உங்களின் கோரிக்கை முன்னுரிமைப் பட்டியலில் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.

அரச அலுவலர்களின் கூடத்தை பயன்படுத்தும் வேளை, பொருத்தமான உடைகளை அணிந்திருப்பதுடன் தொடர்புடைய அனைத்து விதிகளையும் பின்பற்றவும். இவ்விதிகள் நாளுக்கான அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கூடத்தினுள்ளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உங்களின் வசதிக்காக தொலைபேசி மற்றும் தொலைநகல் வசதிகளையும் நாம் வழங்கியுள்ளோம். நீங்கள் முகப்பு கூடமொன்றில் இருந்தால், பாராளுமன்ற உறுப்பினர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட முகப்புக் கூடங்களுக்கு வெளியே இருப்பதை உறுதி செய்யுங்கள்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks