01

E   |   සි   |  

2025-12-12

செய்தி வகைகள் : செய்திகள் 

பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களைச் சந்தித்தார் பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர்

பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர் கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் கடந்த 2025.12.10 ஆம் திகதி கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களைச் சந்தித்தனர்.

தித்வா சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில், கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்கள் தனது அனுதாபத்தைத் தெரிவித்ததுடன், இலங்கை மக்களுடனான தனது ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தினார். இந்த அவசர நிலைமையில், தனது ஆதரவையும் உதவியையும் அவர் இங்கு வெளிப்படுத்தியதுடன், காலநிலை மீள்தன்மை மற்றும் நிலைபேறான தன்மை பற்றி கவனம் செலுத்தும் எதிர்காலத்தின் தேவையை ஏற்றுக்கொள்ளும் வகையில் காலநிலை மாற்றம் தொடர்பில் இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர். 

பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பஹீம் உல் அஸீஸ், பிரதி உயர்ஸ்தானிகர் ஸுனைரா லத்தீப், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தொழில்வாண்மையாளர்கள் மற்றும் கல்விமான்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களுக்குப் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.

இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் அமையப்பெற்றுள்ள குழு முறைமை குறித்தும் கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்கள் வினவினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், வலுவான குழு முறைமை மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள் விளக்கமளித்தார்.

அதன் பின்னர், பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர் கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களுடன் இணைந்து பாராளுமன்ற வளாகத்தையும் பார்வையிட்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-12-15

எதிர்வரும் 18 ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு

கௌரவ பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது கௌரவ சபாநாயகர் அவர்களினால் 2025.12.12 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2466/33 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய அன்றையதினம் பாராளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு கௌரவ சபாநாயகர் சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.


2025-12-05

2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்மேலும் மூன்று சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் இன்று (டிச. 05) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 07.30 மணிக்கு ஆரம்பமானதுடன், இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. அத்துடன், இருவர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர். அதற்கமைய, 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவுசெலவுத்திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 06 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்றது. அதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 14 ஆம் திகதி 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (05) வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் 14 நாட்கள் இடம்பெற்றன. 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் 17 நாட்கள் இடம்பெறவிருந்ததுடன், சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக விவாத நாட்கள் இவ்வாறு 14 நாட்களாகக் குறைக்கப்பட்டன.அந்த நிலையில், கடந்த சில நாட்களில் குழுநிலையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஒரு சில அமைச்சுக்களுக்கான செலவுத்தலைப்புகள் மீது முன்னர் திட்டமிடப்பட்ட தினங்களில் விவாதம் மேற்கொள்ள முடியாமல் போனதால், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு மேலதிகமாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் செலவுத்தலைப்புகளும் 2025.12.03 ஆம் திகதியும் இன்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன. மேலும், பாராளுமன்றத்தில் இன்று (05) நிறைவேற்றப்பட்ட 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.அதற்கு மேலதிகமாக, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பவற்றுக்கும் பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, மூன்று குறைநிரப்புத் தொகைகளும் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டன.


2025-12-05

நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்தார்

நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் முன்னிலையில் இன்று (டிச. 05) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது அவர்கள் தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.கற்பிட்டி திகழி முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் அவர்கள், 1991ஆம் ஆண்டு கற்பிட்டி பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலுக்குள் நுழைந்தார். அவர் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.


2025-12-03

அனர்த்தம் காரணமாக உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில்  ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக அவர்களினால் இன்று (டிச. 03) பாராளுமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks