03

E   |   සි   |  

2025-12-24

செய்தி வகைகள் : செய்திகள் 

சபாநாயகரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

"தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது."

அதன்படி, அன்பு, தியாகம் மற்றும் கருணை ஆகியவற்றின் அர்த்தங்களை அடையாளப்படுத்தும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நத்தார் காலம், இலங்கை கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு அழகான சந்தர்ப்பமாகும். நத்தாரின் உண்மையான அர்த்தம் மனிதநேயம் மற்றும் அன்பான தியாகத்தை வலியுறுத்துவதும், அத்தகைய வாழ்க்கைக்குத் தேவையான ஆன்மீக பாதைகளைத் திறப்பதுமாகும். 

இருப்பினும், இந்த ஆண்டு முழு தேசமாக ஒரு பெரிய பேரழிவை எதிர்கொண்ட பிறகு நாம் நத்தாரைக் கொண்டாடுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்கள் அன்புக்குரியவர்களில் பலர் இந்த நேரத்தில் துன்பப்படுகிறார்கள். இந்தப் பேரழிவு ஒரு நாடாக நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், மதம், இனம் அல்லது கட்சியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களும் ஒருவருக்கொருவர் காட்டிய தியாகமும் மனித அன்பும் போற்றப்படத்தக்கது. இது நத்தாரின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் மனித அன்பின் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன். 

அதன்படி, உங்கள் அனைவருக்கும் இந்த நத்தார் காலம் அனைத்து சவால்களையும் கடந்து, ஒரு நாடாகவும், தேசமாகவும் மீண்டும் எழுச்சி பெற, இயேசு கிறிஸ்துவால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட மனிதகுல அன்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும், அமைதியை அடையவும் குறிக்கோளாகக் கொண்ட மகிழ்ச்சியான, வளமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் நல்வாழ்த்துக்கள்


வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன 
சபாநாயகர்
இலங்கை பாராளுமன்றம்



தொடர்புடைய செய்திகள்

2025-12-19

500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது

பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று (டிச. 19) பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.இந்தக் குறைநிரப்பு மதிப்பீடை கௌரவ பிரதமர் நேற்று (18) பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.அதற்கமைய, இன்று மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 6.10 மணி வரை இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதுடன்,  500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி அங்கீகரிக்கப்பட்டது.


2025-12-18

மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தியிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (டிச. 18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலமானது, 2022ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்தச்)சட்டத்தைத் திருத்துவதை பிரதான நோக்காகக் கொண்டதாகும். இச்சட்டமூலம் 09.10.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 05.12.2025ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.அத்துடன், 05.12.2025ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 2வது வாசகம் திருத்தப்படுகிறது. இதற்கமைய, 2023 ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் 01ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு மட்டும் ஏற்புடையதான பத்து சதவீதத்திலான மொத்தச் சேகரிப்பை மட்டுப்படுத்துவது, 2025 ஒக்றோபர் 01ஆம் திகதியிலிருந்து குதிரைப் பந்தயப் பணயக்காரர் என்ற தொழிலில் அல்லது சூதாட்டத் தொழிலில் ஈடுபடுட் ஆட்களிடமிருந்தான மொத்தச் சேகரிப்பு அறவீட்டைப் பதினெட்டு சதவீதமாக அதிகரித்தல், இலங்கைப் பிரசைகளாகவுள்ள ஆட்களிடமிருந்து கெசினோ நுழைவு அறவீடானது நூறு ஐக்கிய அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல் என்பன இத்திருத்தத்தின் நோக்கமாகும்.அதேநேரம், 14.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 05.12.2025ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலமானது, 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்ட சட்டமூலத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாகும். இத்திருத்தமானது, திட்டங்களை அடையாளம் காணுவதற்கான புதிய நடைமுறையாக அதிகபட்ச விலக்களிப்புக் காலத்தை இருபத்தைந்து ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாகக் குறைத்தல்,  உத்தேசிக்கப்பட்ட கருத்திட்டத்தை ஒரு செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டமாக அடையாளங்காண்பதன்மேல், இலங்கை முதலீட்டுச் சபையானது அத்தகைய கருத்திட்ட உத்தேசத்தை நிகழ்வுக்கு முன்னரான செலவு நன்மைப்பகுப்பாய்வுக்காக நிதியமைச்சுக்கு ஆற்றுப்படுத்துதல்,  அத்தகைய நிகழ்வுக்கு முன்னரான செலவு நன்மைப்பகுப்பாய்வை நிறைவேற்றுதல், இணங்கியொழுகாமையின் போது இச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விலக்களிப்புகள், சலுகைகள் அல்லது வாிவிடுமுறை எவற்றையும் அல்லது எல்லாவற்றையும் மட்டுப்படுத்துதல் அல்லது சம்பந்தமாக ஏற்பட்ட இழப்பை அறவிடுவதற்கு நிருவாகத் தண்டங்களை விதித்தல், வரிச் செலவினங்கள் மீதான வருடாந்த அறிக்கையொன்றினை வெளியிடுவதற்கு நிதி அமைச்சினைத் தேவைப்படுத்துவதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துதல் என்பன இந்தத் திருத்தங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கமைய, குறித்த மூன்று சட்டமூலங்களும் முறையே 2025ஆம் ஆண்டு 24ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமாகவும், 2025ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமாகவும், 2025ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமாகவும் அமுலுக்கு வருகின்றன.


2025-12-18

உயர்மட்ட சீன தூதுக் குழுவினர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தனர்

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் (SCNPC) கௌரவ உப தலைவர் வாங் டோங்மிங் (H.E. Wang Dongming) தலைமையிலான சீன மக்கள் குடியரசின் உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று (டிச. 17) பாராளுமன்றத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களைச் சந்தித்தனர்.இந்தச் சந்திப்பில் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி; போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வரும், இலங்கை - சீனா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவருமான பிமல் ரத்நாயக்க; எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க; சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வளப் பாதுகாப்பு குழுவின் தலைவர், கௌரவ லு சின்ஷே; வெளிவிவகாரக் குழுவின் உப தலைவரும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சீனா - இலங்கை நட்புறவுக் குழுவின் பிரதித் தலைவருமான கௌரவ வாங் கே; சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சமூக அபிவிருத்தி விவகாரக் குழுவின் உப தலைவர், கௌரவ டான் டியான்சிங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், சீனாவின் இலங்கைக்கான தூதுவர் சீ ஷென்ஹொங்; பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர; மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான ஆழமான மற்றும் நீடித்த உறவை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்கள் எடுத்துரைத்தார். இந்த உயர்மட்ட சீன பாராளுமன்றக் குழுவின் விஜயம் பாராளுமன்ற இராஜதந்திரம் மீது சீனா வழங்கும் முக்கியத்துவத்தையும், இரு நாடுகளுக்குமிடையேயான நீண்டகால ஒத்துழைப்பின் வலிமையையும் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். தித்வா சூறாவளியின் காரணமாக அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து சபாநாயகர் தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்ததுடன், இந்தக் காலகட்டத்தில் சீனா வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளுக்காக சீனா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இலங்கையின் மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் (SCNPC) கௌரவ உப தலைவர் வாங் டோங்மிங் அவர்கள், இலங்கைக்கு விஜயம் செய்ய அழைத்தமைக்கு தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே பாராளுமன்ற பரிமாற்றங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சீனாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். நெருங்கிய மற்றும் நட்பு நாடாக, இலங்கை அதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிப்பதற்கு சீனா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட சவால்களைச் சமாளிக்க இலங்கை அரசாங்கத்திற்கான சீனாவின் ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.அத்துடன், கௌரவ உப தலைவர் வாங் டோங்மிங் அவர்கள் இலங்கையின் ஜனாதிபதி அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்ததை நினைவுகூர்ந்ததுடன், அது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய மூலோபாய வழிகாட்டியாகச் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பு, கல்வி, கலாசாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்காக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்கள் இதன்போது நன்றியைத் தெரிவித்தார்.


2025-12-18

பிரான்ஸ் செனட் சபையின் உறுப்பினர் கௌரவ சமந்தா கேசபோன் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்

பிரான்ஸ் செனட் சபையின் உறுப்பினர் கௌரவ சமந்தா கேசபோன் (Samantha Cazebonne) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (டிச. 16) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் பிரான்சை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரும் கலந்துகொண்டனர்.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாதகமான காலநிலை காரணமாக நாடு எதிர்கொண்ட மோசமான இயற்கை அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்தப் பேரிடர் சூழ்நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.இந்தப் பேரிடரை எதிர்கொண்ட இலங்கையர்களின் ஒற்றுமை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பிரான்ஸ் தூதுக்குழுவினரிடம் எடுத்துக் கூறினார். “Rebuild Sri Lanka” திட்டத்தின் மூலம் சர்வதேசக் குழுக்களுக்கு இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த கௌரவ சபாநாயகர், 2023 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்த நட்பு மேலும் வலுப்படுத்தப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர் கௌரவ சமந்தா கேசபோன் (Samantha Cazebonne), நாடு முகங்கொடுத்துள்ள அவசரகால நிலைமை குறித்து தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், இலங்கைக்கு பிரான்ஸ் அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து, இலங்கைக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க பிரான்ஸ் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படும் பிற மனிதாபிமான உதவிகள் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும், இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் எனச் சுட்டிக்காட்டிய  பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர், இதன் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும் என்பதையும் குறிப்பிட்டார்.  இலங்கையில் உள்ள பிரான்ஸ் சர்வதேச பாடசாலைகளை மேலும் வலுப்படுத்தி முன்கொண்டு செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் அவர் கௌரவ சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த கௌரவ சபாநாயகர், இந்தக் கோரிக்கையை கல்வி அமைச்சின் பரிசீலனைக்கு ஆற்றுப்படுத்துவதாகத் தெரிவித்தார்.மேலும், இலங்கையில் பெண்கள் தொடர்பில் காணப்படும் சமூக நிலைப்பாடு குறித்தும் அவர் கேட்டறிந்துகொண்டார்.  இலங்கையில் பெண்கள் மீதான நேர்மறையான அணுகுமுறைகள் இருப்பதாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் பதில் வழங்கினார். முதன்முறையாக பெண்களுக்கான சுயாதீன ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டிருப்பதாகவும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், 2026 ஆம் ஆண்டு பரிஸ் நகரில் நடைபெறவுள்ள உலகளாவிய சமாதான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கௌரவ சபாநாயகரை பிரான்ஸிற்கு வருமாறும் பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர் கௌரவ சமந்தா கேசபோன் அழைப்பு விடுத்தார். பிரான்ஸ் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகளைப் பார்வையிடுமாறும் அவர் சபாநாயகருக்கு அழைப்பு விடுத்ததுடன், இது பிரான்ஸின் சட்டமன்ற மரபுகளை நேரடியாகக் காண்பதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமையும் எனத் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks