பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
124/2020
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் வடக்கு மாகாணத்திற்குரிய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களது பிரதான தொழில்களில் ஒன்றாக கடற்றொழில் அமைந்துள்ளதென்பதையும்;
(ii) ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அதில் தங்கி வாழ்கின்றன என்பதையும்;
(iii) இந்திய றோலர் படகுகளின் காரணமாக மேற்படி மீனவர்களுக்கு நீண்டகாலமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் பொருட்டு கடலுக்குச் செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது என்பதையும்;
(iv) மேற்படி பிரதேசங்களிலிருந்து கடலுக்குச் செல்லும் இலங்கை மீனவர்களது படகுகளுக்கு இந்தியப் படகுகளால் சேதங்கள் ஏற்படுத்தப்படுகின்றன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், இந்திய றோலர் படகுகளின் சட்டவிரோதச் செயற்பாடுகளை நிறுத்தி எமது மீனவர்கள் வழக்கம்போல் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) (i) தென்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர் என்பதையும்;
(ii) அதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு தமது கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் தடைகள் ஏற்படுகின்றன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஈ) (i) தென்பகுதி மீனவர்கள் மேற்படி பிரதேசங்களில் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-22
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
அமைச்சு
கடற்றொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(அ) (i) ஆம்
(ii) ஆம்
(iii) ஆம்
(iv) ஆம்
புள்ளிவிபரத் தகவல்களுக்கு அமைவாக மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 45,000க்கும் அதிகமான குடும்பங்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதுடன், இரண்டு இலட்சம் பேர் வரை இவர்களைச் சார்ந்து வாழ்ந்து வருவதாக அறிய முடிகின்றது.
நீண்ட காலமாக சர்வதேச கடல் எல்லைச் சட்டத்தை மீறி இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், அதன்மூலமாக மேற்படி மாவட்டங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் கடற்றொழிலாளர்கள் இந்திய இழுவைப் படகுகளின்மூலம் சித்திரவதைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
(ஆ) ஆம்
வெளிநாட்டுக் கடற்றொழில் படகுகளைக் கைப்பற்றுவதற்கு இலங்கை கடற்படைக்கும் இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கும் சட்டரீதியான அதிகாரம் வழங்குவதற்கு இயலுமானவாறு, 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டம் 2017ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க, கடலடி இழுவை வலைக் கடற்றொழில் முறையைத் தடை செய்தல் மற்றும் 2018ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க, வெளிநாட்டுப் படகுகளை முறைப்படுத்தும் சட்டம் என்பவற்றால் திருத்தப் பட்டுள்ளது.
இதன் பிரதிபலனாக 2018, 2019 மற்றும் 2020 ஆகிய வருடங்களில் சுமார் 64 வெளிநாட்டுப் படகுகளுக்கும் வெளிநாட்டுக் கடற்றொழிலாளர்கள் 288 பேருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கில் கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் முறைகேடுகளுக்குத் தீர்வு காணும் நோக்குடன் 2016ஆம் வருடத்திலிருந்து 3 தடவை இந்திய - இலங்கை இணைந்த கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன. அத்துடன், இதில் வடக்கின் கடற்றொழில் சமூகத்தினருக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் மற்றும் சமுத்திர சூழலுக்கு அடிக்கடி ஏற்படுத்தப்படும் அழிவு பற்றியும் கலந்துரையாடப்பட்டு அதில் இணக்கம் காணப்பட்டாலும் இந்தியத் தரப்பினர் அதன்படி நடந்துகொண்டார்கள் என்பது குறித்து அவதானத்துக்கு வரவில்லை.
இவ்வாறு இந்திய இழுவைப் படகுகளின் சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கென மேலும் தேவையான ஒழுங்குவிதிகளை வகுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
(இ) (i) ஆம்
(ii) ஆம்
(ஈ) (i) ஆம்
(ii) நீண்டகாலமாக தென்னிலங்கையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பருவகாலங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதானது பழக்கப்பட்ட ஒரு நடைமுறையாக இருந்துள்ளது.
அதேபோன்று வடக்கு, கிழக்குக் கடற்றொழிலாளர் களுக்கும் ஏனைய பகுதிகளில் பருவகாலக் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் இருந்து வருகின்றன. ஆனால், யுத்தத்திற்குப் பிற்பட்ட காலத்தில் பல்வேறு பின்னணிகளுடன் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அப்பகுதிகளைச் சாராத கடற்றொழிலாளர்கள் சில உள்ளூர் நபர்களுடன் சோ்ந்து சட்டவிரோத மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்ட கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்க்கும் வகையில் எனது அமைச்சு தற்போது கடற்றொழில் தொடர்பான தேசியக் கொள்கையொன்றினை வகுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றது. இந்தக் கொள்கைத் திட்டத்தினை நாட்டின் அனைத்துக் கடற்றொழிலாளர் களினதும் அதுசார்ந்த ஏனைய வல்லுநர்களினதும் கலந்துரையாடலுக்கு உட்படுத்தி, அதனை மேலும் நடைமுறைச்சாத்தியமாக வலுப்படுத்தி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெறப்பட்டதும் அது கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும். அதன்போது, இத்தகைய பிரச்சினைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கேள்விகள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் வெற்றிகரமாகத் தீர்த்துவைக்கப்பட்டுள்ளன.
(உ) எழாது.
பதில் தேதி
2020-09-22
பதில் அளித்தார்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks