04

E   |   සි   |  

2026-01-13

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக்குவதற்கு தற்பொழுது காணப்படும் அளவுகோல்களைத் திருத்தவும் – அரசாங்க நிதி பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

  • சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நலன்புரி மற்றும் வலுவூட்டல் திட்டங்கள் உள்ளிட்ட சகல நலன்புரித் திட்டங்கள் தொடர்பில் சுயாதீன மதிப்பாய்வை மேற்கொள்ளவும் – அரசாங்க நிதி பற்றிய குழு அறிவுறுத்தல்


அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை மிகவும் வினைத்திறன் மிக்கதாக்குவதற்கு தற்பொழுது காணப்படும் அளவுகோல்களைத் திருத்துமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால், நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்பொழுது அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்யப் பயன்படும் 22 அளவுகோல்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் தோன்றியிருப்பதால், எதிர்காலத்தில் அஸ்வெசும பயனாளிகளின் தெரிவைப் புதிய அளவுகோல்களுக்கு அமைய மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜன. 08) பாராளுமன்றத்தில் கூடியபோதே  இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. 

அன்றையதினம் 2025.12.15ஆம் திகதி 2467/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2002ஆம் ஆண்டு 24ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின்  09வது பிரிவின் கீழ் அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை நீடிப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நன்மைகளைப் பெற்ற நிலைமாறும் நிலையில் உள்ளவர்கள், பாதிப்புக்கு உட்படக்கூடியவர்கள், வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் போன்ற பிரிவுகளில் நிலைமாறும் நிலையில் உள்ளவர்களுக்கான சலுகைகள் 2025 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளன. இதற்கமைய அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தத்தின் ஊடாக பாதிப்புக்கு உட்படக்கூடியவர்கள், வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் ஆகிய பிரிவுகளுக்கு மாத்திரம் இத்திட்டம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் எதிர்பாராத பேரிடர் சூழ்நிலையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூகப் பொருளாதார பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு 2025.12.31ஆம் திகதியுடன் முடிவடையவிருக்கும் பாதிப்புக்கு உட்படக்கூடிய பிரிவுக்கான கொடுப்பனவு 2026ஆம் ஆண்டு யூன் மாதம் வரையில் நீடிப்பதற்கும் முன்மொழியப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இயலாமையுடைய நபர்கள், சிறுநீரக நோய்க்கான உதவிகளைப் பெறுபவர்கள் மற்றும் முதியோருக்கான உதவி பெறுகின்றவர்களுக்கான சலுகைகள் மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து அத்திணைக்களத்தின் அதிகாரிகளிடம் குழு கேட்டறிந்தது. இருபது இலட்சம் குடும்பங்களைப் படிப்படியாக வலுவூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கான சம்பளங்களை வழங்குதல் உள்ளிட்ட நிர்வாகச் செயற்பாடுகளுக்கு வருடாந்தம் செலவாகும் மொத்தத் தொகை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. அண்ணளவாக வருடாந்தம் 22 பில்லியன் ரூபா செலவு செய்யப்படுவதாகவும், 2026ஆம் ஆண்டில் சம்பளம் மற்றும் வலுவூட்டல் நடவடிக்கைகளுக்காக 27.38 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வலுவூட்டல் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் பெருந்தொகையான நிதி சம்பளம் உள்ளிட்ட செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கேள்வியெழுப்பினார். அத்துடன், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூக வலுவூட்டல் திட்டங்கள் குறித்த ஏதேனும் பின்தொடர்தல்கள் அல்லது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்றும் குழுவின் தலைவர் வினவினார். எனினும், அவ்வாறான மதிப்பாய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வலுவூட்டல் திட்டங்கள் உள்ளிட்ட சகல நலன்புரித் திட்டங்களையும் சுயாதீன மதிப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான நிஷாந்த ஜயவீர, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பளிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன் மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-04-02

சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பது குறித்து பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடல்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்படும் பீடி இலைகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேநேரம், பீடி கைத்தொழில் உள்ளவர்களைப் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு வலியுறுத்தியது.பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.பீடி உற்பத்திக்குப் பயன்படும் இலைகளை இறக்குமதி செய்வதற்கு வரி அறவிடப்படும் நிலையில், பெருந்தொகையான இலைகள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுகின்றமை இங்கு தெரியவந்தது. இதனைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக பீடி இலைகள் காரணமாக அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வரி வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பதற்கான பல்வேறு வழிகள் பற்றி குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை இறக்குமதி செய்து இத்தொழிலில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான தேவையை குழு வலியுறுத்தியது. அத்துடன், சட்டவிரோத பீடி இலைகளைப் பயன்படுத்தி பீடி தொழில் மேற்கொள்பவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிடமுடியாத நிலை இருப்பதால் இதனைத் தடுத்து, அரசாங்கத்திற்கு உரிய வரி வருமானத்தை ஈட்டுவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாக கௌரவ பிரதியமைச்சர்கள் சதுரங்க அபேசிங்க, ருவான் ரணசிங்க, எரங்க வீரரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்செய் பெரேரா, (கலாநிதி) நன்தன மில்லகல்ல, திலின சமரக்கோன், நிலந்தி ஹொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், நிதி அமைச்சு, உண்ணாட்டரசிறைத் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-04-02

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (மார்ச் 20) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.எஸ்.துய்யகொந்தா (ஓய்வு) அவர்களின் நியமனத்திற்கும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளராக எல்.மொஹமட் நவவி அவர்களின் நியமனத்திற்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எம்.டி.ரி.விக்ரமசிங்க அவர்களின் நியமனத்திற்கும், துறைமுகங்கள் மற்றும் சிவிர் விமான சுவைகள் அமைச்சின் செயலாளராக டபிள்யூ.டபிள்யூ.எஸ்.மங்கள அவர்களின் நியமத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியது.


2026-03-31

உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற தூதுக்குழு இந்தியாவுக்கு ஆய்வுப் பயணம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்று 2026 மார்ச் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை புதுடில்லிக்கு பாராளுமன்ற ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.இந்த இலங்கைத் தூதுக் குழுவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சியின் முதற்சோலாசான் கஜயந்த கருணாதிலக, நலீன் பண்டார ஜயமஹ, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, (சட்டத்தரணி) கீதா ஹேரத், கே.இளங்குமரன், கிங்ஸ் நெல்சன், தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் உள்ளடக்கியிருந்தனர். குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற பணியாளர்களான உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.பி.சந்தன மற்றும் பிரதான உத்தியோகத்தர் எஸ்.டபிள்யூ.ரி.ஆர்.டி. சில்வா மற்றும் பாராளுமன்ற அதிகாரி டபிள்யூ.கே.ஏ.எம்.எம்.எம்.அர்த்தனாயக்க ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.மார்ச் 22ஆம் திகதி புதுடில்லியைச் சென்றடைந்த தூதுக் குழுவினர் மறுதினம் முதல் உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினர். இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்த இக்குழுவினர், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரேர்னா ஸ்தல் பூங்காவில் மலரஞ்சலி செலுத்தினர். இவர்கள் லோக் சபாவின் கௌரவ சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை குறித்து தெளிவுபடுத்தும் அமர்வொன்றும் நடத்தப்பட்டது. இதில் நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் சட்டமியற்றும் செயல்முறைகள் பற்றிய மதிப்புமிக்க புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது.  மேலும், இக்குழுவினர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நிலைக்குழு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நிலைக்குழு ஆகியவற்றுடனும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினர்.மார்ச் 24ஆம் திகதி இலங்கைத் தூதுக் குழுவினர் “PM Gati Shakti” தேசிய திட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் குறித்த தொடர் அமர்வுகளில் பங்கேற்றனர். அத்துடன், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அதிகாரசபை, இந்தியாவின் சூரிய வலுசக்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்திய தொழில் கூட்டமைப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இரு நாடுகளின் பாராளுமன்ற உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினருடனும் இலங்கைத் தூதுக் குழுவினர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.மார்ச் 25ஆம் திகதி இந்தியாவின் நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் உள்ள சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இத்தூதுக் குழுவினர் புதுடில்லி மெட்ரோ ரயில் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நகர்புற ஆளுகை, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் பொருத்தமான நகர்புற அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து ஆய்வுசெய்யும் நோக்கில் புதுடில்லி மாநகரசபையின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றிய கலந்துரையாடலிலும் இவர்கள் ஈடுபட்டனர். அத்துடன், பாரிய அளவிலான நீர் விநியோக முகாமைத்துவம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் குறித்து ஜல் சக்தி அமைச்சின் கீழ் உள்ள ஜல் ஜீவன் திட்டத்தின் அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருந்தனர்.மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், இலங்கைத் தூதுக்குழுவினர் அடல் சேது பாலம், ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் நவி மும்பை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் தளங்களைப் பார்வையிட்டனர். மேலும், இத்தூதுக்குழுவினர் பவர் எக்ஸ்சேஞ்ச் இந்தியா லிமிடெட் நிறுவனத்தைப் பார்வையிட்டதோடு, மகாராஷ்டிர மாநிலத்தின் கௌரவ முதலமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.இதேவேளை, இலங்கைத் தூதுக்குழுவினர் மார்ச் 27ஆம் திகதி Gateway of India மற்றும் Elephanta Caves உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்களைப் பார்வையிட்டனர். மேலும், இத்தூதுக்குழுவினர் மகாராஷ்டிர சட்டசபையின் கௌரவ சபாநாயகர் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி மற்றும் தொழில்துறைத் துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.இந்தப் பாராளுமன்ற ஆய்வுப் பயணத்தில் இலங்கைத் தூதுக்குழுவின் பங்கேற்பின் மூலம், இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பின் வாயிலாக உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தித் துறைகளில் நிறுவனத் திறனை மேம்படுத்துவதற்கும், அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், சிறந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தனது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. 


2026-03-30

தொல்பொருளியல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்

2026 ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை குறித்த விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் குழு கவனம் செலுத்தியதுதொல்பொருளியல் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இங்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் ஆராயப்பட்டது.2021-2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டன.2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி இக்குழு கூடியபோது தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள் இன்னும் குழுவிற்கு வழங்கப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது. அதன்படி, வர்த்தமானி அறிவித்தலில் தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள், அவற்றை வர்த்தமானியில் வெளியிடாதமைக்கான காரணங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள காலம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழுவிற்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.இதேவேளை, அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய மத்திய கலாசார நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானத்தில் 25% தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் அந்த ஒதுக்கீட்டை விடக் குறைவான தொகையையே கோரியுள்ளதாகத் தெரியவந்தது. எனவே, அமைச்சரவையின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்தத் தொகை எஞ்சியிருப்பதாகவும், எதிர்காலத்தில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியில் இத்தொகையைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.திணைக்களத்தில் நிலவும் வாகனங்களுக்கான பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வாகனத் தட்டுப்பாடு காரணமாக செயலாற்றுகைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக குழு தெரிவித்தது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹெக்டர் அப்புஹாமி, சானக மாதுகொட, சந்தர சூரிஆரச்சி மற்றும் ருவன்தில ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks