2026-04-28
இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் உயர்கல்வி, சமய மற்றும் கலாசார மையங்கள், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளைக் கொண்ட வீடுகள், தொழில்முயற்சிக்கான கடன் வசதிகள் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், 2024/2025-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களில் 143 இயலாமையுடைய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2025/2026-ஆம் ஆண்டில் 203 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 25 முதல் 50 மில்லியன் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறைந்த வருமானம் கொண்ட இயலாமையுடைய மாணவர்களுக்கு மாதம் ரூ. 5,000 மேலதிக உதவித்தொகையை வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது. மேலும், பல பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் இயலாமையுடைய மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான முன்னோட்ட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தரமான சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும், விபத்துகள் காரணமாக இயலாமையுடைய நபர்களாக்கப்படும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் போன்ற உதவி சாதனங்களை வழங்கும் திட்டத்தை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இங்கு தெரிவித்தது.
அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் உயரதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இயலாமையுடைய நபர்கள் மத வழிபாட்டுத் தலங்களை அணுகுவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து ஒன்றியத்தின் தலைவர், அமைச்சின் அதிகாரிகளுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கமைய சமய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இயலாமையுடைய நபர்கள் அணுகக் கூடிய வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக, மத்திய கலாச்சார நிதியம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வீடு, கட்டுமானம் மற்றும் நீர்வளங்கள் அமைச்சு மேல்மாகாணத்தில் இயலாமையுடைய நபர்களின் வீட்டு வசதிகளுக்காக ரூ.500 மில்லியனை ஒதுக்கியிருப்பதாகவும், 2026ஆம் ஆண்டு 9,700 வீடுகளை அமைப்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. மேலும், இயலாமையுடைய நபர்களுக்காக விசேட கடன் திட்டமொன்றை கடைப்பிடிக்கவும், அவர்களின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு 'மாதிரித் திட்டத்தை'த் தயாரிப்பதற்கும் அமைச்சு இணக்கம் தெரிவித்தது.
இயலாமையுடைய நபர்களின் விசேட தேவைகளைக் கருத்தில் கொண்டு நெகிழ்வான மாதிரியில் வீடுகளை அமைப்பதற்கு அமைச்சு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், வங்கிகளுக்கும், இயலாமையுடைய தொழில்முனைவோருக்கும் இடையில் நம்பிக்கை தொடர்பான இடைவெளி காரணமாக கடன்பெறுவதில் சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டனர். இதற்கு அமைய இயலாமையுடைய நபர்களுக்காக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறு ஒன்றியத்தின் தலைவர் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
புதிய தயாரிப்புகளை வணிகமயமாக்குவதில் இயலாமையுடைய நபர்களுக்கு உதவும் ஆய்வுகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு கவனம் செலுத்துவாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்குத் தேவையான சாதனங்களைத் தயாரிக்க ஆராய்ச்சி குழுக்களை ஊக்குவிக்கவும், அவற்றை சந்தைக்குக் கொண்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
இதற்கு மேலதிகமாக, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு பாராளுமன்ற விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா, சுற்றுச்சூழல் போன்ற அமைச்சுக்களின் அதிகாரிகளும் ஒன்றியத்தில் தமது அமைச்சுசார்ந்த திட்டங்களை முன்வைத்தனர்.
ஒவ்வொரு அமைச்சினாலும் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தை ஆறு மாதங்களில் மீண்டும் மீளாய்வு செய்யவும் ஒன்றியம் தீர்மானித்தது.
இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான டி.கே. ஜெயசுந்தர, ஜகத் மனுவர்ண ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன், இயலாமையுடைய பெண்களின் தேசிய ஒன்றியம், இலங்கை செவிப்புலனற்றோர் சங்கம், இயலாமையுடைய இளைஞர்களுக்கான வலையமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர். அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-10-14
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்துவது தொடர்பான பொதுமக்களின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்ற விசேட குழுவிடமர் சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்னவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அண்மையில் கூடியபோதே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள 31 முன்மொழிவுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பாக முன்னர் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற குழுக்களின் அறிக்கைகளையும் ஆழமாக மீளாய்வு செய்து அறிக்கையிடுவதற்கான நிபுணர்கள் குழுவில், சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சாமிந்த அபேசிங்க, எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினர் கலாநிதி கே.தவலிங்கம், மற்றும் வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த விசேட குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்ன குறிப்பிடுகையில், முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் மற்றும் கருப்பொருள்கள் தொடர்பில் தனித்தனியான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.தற்போது அரசியல் கட்சிகளினாலும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அத்துடன் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள அனைத்து கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் மீளாய்வு செய்து, இரண்டு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையொன்றை பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், நாட்டின் பிரஜைகள் மற்றும் பொதுமக்களுக்கு தமது திருத்தங்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதேவேளை, தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட காலத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவும் குழு தீர்மானித்துள்ளது. அத்துடன், பொது மக்களின் கருத்துக்களை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்தவர்கள் விரும்பினால் அவர்களின் தனிப்பட்ட முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியும் என்றும் குழு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தின் பின்னர் குழுவின் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கௌரவ பிரதியமைச்சர்களான சட்டத்தரணி சுனில் வட்டகல, முனீர் முலாபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, ஜே.சி.அலவத்துவல, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயக்கொடி, சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-10-08
NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறுதி தணிக்கை அறிக்கை தொடர்பில், அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த 06ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில், NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் கண்டறியப்பட்ட அசாதாரண நிலைமைகள், கணக்காய்வு செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் அது தொடர்பான தணிக்கை அறிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, அர்கம் இலியாஸ் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அலககட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், சம்பிக ஹெட்டிஆராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.இங்கு, இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் கணக்காய்வு தராதரங்கள் கண்காணிப்பு சபையானது (SLAAMB) மேற்கொண்ட விசாரணையின் கண்டறிதல்கள் மற்றும் Deloitte Touche Tohmatsu India LLP நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளை அடையாளம் காண்பதில் வெளியக கணக்காய்வாளர்கள் தவறியமை தொடர்பிலும் குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.குறித்த நிதி முறைகேடுகள் தொடர்பில் நிறுவன நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பாக சிரேஷ்ட முகாமைத்துவத்தின் பொறுப்புக்கூறல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், NDB வங்கியின் கணிசமான பங்குகள் அரச மற்றும் பொதுமக்கள் நிதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதால், இவ்வாறான நிதி முறைகேடுகளினால் அரச நிதி மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.நிதி முறைமையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக LankaPay ஊடாக மத்தியப்படுத்தப்பட்ட மோசடி கண்காணிப்பு முறைமையொன்றை நிறுவுவதற்கான முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு வங்கியிலும் இடம்பெறும் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்காக வங்கி மட்டத்தில் மோசடி கண்காணிப்பு முறைமைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதன்படி, NDB வங்கியில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பான இறுதிக் கணக்காய்வு அறிக்கையில் பின்வரும் அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:1) இந்தக் கணக்காய்வு 2016.04.01 முதல் 2026.03.31 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ரூ. 13,639,664,684/- (ரூ. 13.6 பில்லியன்) பெறுமதியான மோசடி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நிதித் தாக்கம் இந்தக் கணக்காய்வு அறிக்கையில் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.2) 2026.09.29 அன்று மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தலின்படி, மோசடி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நிதித் தாக்கம் பின்வருமாறு:2025.01.01க்கு முன்னைய காலப்பகுதிக்கு – ரூ. 1.5 பில்லியன்2025ஆம் ஆண்டில் – ரூ. 9.6 பில்லியன்2026.03.31இல் முடிவடைந்த காலாண்டுக்கு – ரூ. 2.5 பில்லியன்3) 2026.04.06 அன்று NDB வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப வெளிப்படுத்தலுடன் ஒப்பிடுகையில், அறிவிக்கப்பட்ட மோசடி தொகை ரூ. 13.2 பில்லியனிலிருந்து ரூ. 13.6 பில்லியனாக ரூ. 0.4 பில்லியனால் அதிகரித்துள்ளது. 2026.06.22 திகதியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் 2026.06.26 அன்று NDB வங்கியினால் வெளிப்படுத்தப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில், இந்த மேலதிக மோசடி தொகை ரூ. 60 மில்லியனாகும்.4) இந்த மோசடி சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முன்னர் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்களில் குறிப்பிடப்பட்டிருந்தமை இறுதிக் கணக்காய்வு அறிக்கையினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.5) CEFT பரிவர்த்தனைகளைச் செயற்படுத்துதல், அடிப்படை வங்கியியல் முறைமையில் (Core Banking System) பயனர் மட்டத்திலான செயற்பாடுகள் (User Activities) மற்றும் பயனர் அணுகல் தகவல்களை (User Credentials) நிர்வகித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய NDB வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பில் காணப்பட்ட பல குறைபாடுகள் இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், பரிவர்த்தனை கண்காணிப்பு (Transaction Monitoring), நாளாந்த கணக்கிணக்கம் (Reconciliation), நிதி இணக்கப்பாடு (Compliance), உள்ளகக் கணக்காய்வு, கிளை வலையமைப்பு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு இடர் முகாமைத்துவம் (Operational Risk Management) உள்ளிட்ட பல செயற்பாட்டுத் துறைகளிலும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.6) வங்கியின் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் காணப்படும் நிர்வாகக் கட்டுப்பாட்டு முறைகள், நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகளை வலுப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகள் இந்தக் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
2026-10-05
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதில், குறித்த ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்காக WFD நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆதரவு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், இளம் தலைமுறையினரை அரசியல் செயற்பாடுகள், கொள்கை வகுத்தல் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வருகை தந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, தேர்தல்களுக்குப் பின்னரும் இளைஞர்களை தொடர்ச்சியாக அரசியல் மற்றும் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களுடன் இணைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், இளைஞர்கள் எதிர்கொள்ளும் தொழிலின்மை உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இளைஞர் தலைமைத்துவத்தையும் அவர்களின் அரசியல் பங்கேற்பையும் மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
2026-10-05
1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அங்கவீனமுற்ற ஆட்களின் உரிமைகள் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டமொன்றை இயற்றுவது தொடர்பில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அர்களின் தலைமையில் அண்மைபில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், 1996 ஆம் ஆண்டு மேற்குறித்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த 30 வருட காலப்பகுதியில், இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை இயற்றுவதன் அவசியம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தை (UN CRPD) இலங்கை 2016 ஆம் ஆண்டு அங்கீகரித்திருந்த போதிலும், அந்த சமவாயத்துக்கு அமைவான உள்நாட்டு சட்டமொன்றை இதுவரை உருவாக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சரவைத் தீர்மானங்களை மேற்கொண்டு இச்சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனைத் தயாரிக்கும் போது ஆரம்பகால நோக்கங்களுக்கும் தற்போதைய சட்டமூலத்திற்கும் இடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முக்கியமானது எனவும் மன்றத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய பேரவையின் உறுப்பினர்களைக் கொண்ட உபகுழுவினால் தமது அவதானிப்புகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட மாதிரி சட்டமூலம், சட்டவரைவு தயாரிப்புத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், அத்திணைக்களத்தினால் மீளத் தயாரிக்கப்பட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சட்டமூலம் தொடர்பில் தேசிய பேரவையின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.இதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகளையும் கருத்திற்கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அவதானிப்புகளின் அடிப்படையில் இந்தச் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் அனைத்து தரப்பினரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன், ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்திற்கு (UN CRPD) அமைவாக சுயாதீன கண்காணிப்பு பொறிமுறையொன்றை நிறுவுவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.புதிய சட்டங்களை இயற்றும் போதும் கொள்கைகளை வகுக்கும் போதும் “எங்களைப் பற்றிய முடிவுகளை எங்களைத் தவிர்த்து எடுக்க வேண்டாம்” என்ற அடிப்படையில், ஆபத்தான நிலைமைகளில் உள்ள சமூகத்தின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் பங்கேற்பையும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்கான தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.அத்துடன், ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்கு பொருத்தமான தொழில் வாய்ப்புகளை வழங்குதல், சமமான தொழில் நிபந்தனைகள் மற்றும் ஊதியத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துதல், பணியிடங்களில் நியாயமான வசதிகளை ஏற்படுத்துதல், அரச சேவையில் ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்பு ஒதுக்கீடு தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை முன்மொழிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை வலுப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.தற்போதைய சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கும் சர்வதேச தரநிலைகளுக்கும் ஏற்ப, ஆபத்தான நிலைமைகளில் உள்ள சமூகத்தின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நிலையான சட்டக் கட்டமைப்பொன்றை துரிதமாக உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார ஆகியோர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.மேலும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள், சட்டவரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய பேரவையின் சட்டமூலத் தயாரிப்பு உபகுழுவின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.