2026-04-10
இலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது. இங்கு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன், 2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.04.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இங்கு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த விடயங்கள் வெளிப்பட்டதுடன், 2025 டிசம்பர் 31ஆம் திகதிவரையில் பூர்த்திசெய்யப்படாத விசாரணைகளின் எண்ணிக்கை1538 என்பதும் தெரியவந்தது. இவற்றில் ரூ.69,999,317 பெறுமதியான 40 நிதி மோசடி குறித்த விசாரணைகள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதும், இந்த விசாரணைகள் 2007 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றவை என்பதும் தெரியவந்தது. விசாரணை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும், அதன் காரணமாகவே விசாரணைகள் தாமதமாவதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் பதிலளித்தனர். விசாரணைகளில் தாமதம் காணப்பட்டாலும், 2016ஆம் ஆண்டு டிசம்பரில் நிலுவையிலிருந்த விசாரணைகளின் எண்ணிக்கை 2711 என்றும், இது தற்பொழுது 1538 ஆகக் குறைந்துள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சில விசாரணைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இங்கு குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழு பரிந்துரைத்தது.
அஞ்சல் தலையைமகம் மற்றும் 14 மாவட்ட அலுவலகங்களில் பணியாளரின் வருகை மற்றும் புறப்படுகை என்பவற்றைப் பதிவு செய்வதற்காகப் பொருத்தப்பட்டுள்ள கைவிரல் அடையாள இயந்திரத்தில் புறப்படும் நேரம் 16.15 எனப் பதிவாகியுள்ள போதும், சம்பந்தப்பட்ட பணியாளர்களின் புறப்படும் நேரம் இரவு 7,8,9,10 என பதிவேடுகளில் பதிவுசெய்து தலைமையகத்தின் பணியாளர்கள் 2023ஆம் ஆண்டில் 57,919,684 ரூபாவையும், 2024ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரையில் 7,024,144 ரூபாவையும், 14 மாவட்ட அலுலகங்களில் உள்ள பணியாளர்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் யூன் வரையில் 373,874,705 ரூபாவையும் மேலதிக நேரக் கொடுப்பனவாகப் பெற்றுக் கொண்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், பணியாளர்களுக்கு 4000/5000 வெற்றிடங்கள் காணப்படுவதால் பணியில் உள்ளவர்கள் மேலதிக நேரம் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகச் சுட்டிக்காட்டினர். எனவே, இந்தக் கொடுப்பனவுகள் தவறானவை அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, மேலதிக நேரக் கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணியமர்த்தி, அவர்களுக்குச் சம்பளம் வழங்கலாம் என்று குழு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் குழு தெரிவித்தது. அத்துடன், இந்த விடயத்தை உள்ளடக்கியதாக அறிக்கையொன்றை கையளிக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
அதேநேரம், இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அச்சகப் பிரிவினால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக 2015ஆம் ஆண்டில் 500 வெளியீட்டுப் பிரதிகளை அச்சிடுவதற்கு ரூ.2,697,300வும், நினைவேடுகளை அச்சிடுவதற்கு ரூ.1,092,656 செலவிட்டபோதும், 2025 நவம்பர் மாதம் நடத்திய கணக்காய்வு விசாரணையின் போது குறித்த வெளியீடுகள் சரியான தரத்தில் அச்சிடப்படவில்லையென்பதால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படாமல் அச்சகப் பிரிவில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது. இது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குழு தெரிவித்தது.
மேலும், 2024 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, காலமான, ஓய்வுபெற்ற, இடைநீக்கம் செய்யப்பட்ட, இராஜினாமா செய்த மற்றும் பிற அதிகாரிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைக் கடன் ரூ. 61,225,431 ஆக இருந்தது. இதில், 5 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவைக் கடன் ரூ. 20,679,788 ஆகும். அதன்படி, இந்தப் பணத்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 17 கோரிக்கைக் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். அதன்படி, சம்பந்தப்பட்ட தொகை எவ்வாறு வசூலிக்கப்படவுள்ளது என்பதை விளக்கும் வகையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
மூன்று மாதங்களுக்குள் இலங்கை அஞ்சல் திணைக்களத்தை மீண்டும் அழைக்கவிருப்பதாகக் கூறி குழுவின் தலைவர் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
இக்குழுக் கூட்டத்தில் கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நளின் ஹேவகே, தினிந்து சமன் ஹென்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சானக மாதுகொட, ஜே.சி.அலவத்துவல, சந்தன சூரியஆரய்ச்சி, ருவன்திலக ஜயகொடி, ஒஷானி உமங்கா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சாகரிகா அத்தாவுட, டி.கே. ஜயசுந்தர, அஜந்த கம்மத்தகே மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-09-25
புதிய தூதுவர், உயர்ஸ்தானிகர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகிய மூன்று நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான இலங்கையின் புதிய தூதுவராக அன்சுல் பானு ஜான் அவர்களின் நியமனத்திற்கும், கனடாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சந்தன ரோஹண குமார அம்பகொல்ல அவர்களின் நியமனத்திற்கும் உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.மேலும், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக நுசித் குமாரதுங்க அவர்களை நியமிப்பதற்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
2026-09-24
சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களது கண்ணியம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தேசிய ஊடக வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது. கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களின் சிறந்த நலனுக்கு முன்னுரிமை வழங்குதல், உண்மைத்தன்மை மற்றும் நியாயத்தன்மையைப் பேணுதல், அத்துடன் சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் தேவையற்ற வகையில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்தல் ஆகியவை இந்த் தேசிய வழிகாட்டியின் பிரதான நோக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அத்துடன், இயலாமையுடைய சிறுவர்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடலின்போது அவர்களது கண்ணியம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதனிடையே, தமிழ் மொழி பேசும் பிரதேசங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக தமிழ் மொழியைப் பயன்படுத்தக்கூடிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்து பயிற்றுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பெண்களும் சிறுவர்களும் தமது முறைப்பாடுகளை முன்வைக்கும்போது எதிர்கொள்ளும் மொழிசார் சிரமங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.நாடு முழுவதும் இயங்கும் சிறுவர் இல்லங்களின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பை முறையாக மேற்கொள்வதற்காக மத்தியப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியமும் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்தின் பொறுப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.மேலும், ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வது தொடர்பில் காணப்படும் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தொழில்நுட்பக் குழுவொன்றின் ஊடாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகளை மீளச் செலுத்தும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், 2027ஆம் ஆண்டளவில் அனைத்து முன்பள்ளிகளுக்கும் பொதுவான தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுவான பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைமையொன்றை ஏற்படுத்துதல் மற்றும் முன்பள்ளிகளில் காணப்படும் உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளில் காணப்படும் தாமதங்களைக் குறைப்பதற்காக சட்ட வைத்திய அறிக்கைகள் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல், சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான விசேட பொறிமுறையொன்றை உருவாக்குதல் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.சிறுவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனையை சட்டரீதியாகத் தடை செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-23
பாராளுமன்றத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்) ஆகிய சட்டமூலங்கள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் குறித்த குழு நேற்று (செப். 22) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டன.சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க அவர்கள் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டவரைவு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.2026.09.22 அன்று கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களினால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் குறித்தும் சட்டமா அதிபர் குழுவிற்கு விளக்கமளித்தார். அத்துடன், இரு சட்டமூலங்களுடனும் தொடர்புடைய விடயங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம் நீதித்துறையின் ஆற்றலை விரிவுபடுத்துதல், மேன்முறையீட்டு நீதிக்கான பிராந்திய மட்டத்திலான அணுகலை மேம்படுத்துதல், விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்தல், நீதிபதிகளின் அனுபவத்தைத் தக்கவைத்தல் மற்றும் நீதிபதிகளை நியமிக்கும் நிறுவன ரீதியான செயன்முறையை மேம்படுத்துதல் ஆகியவை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது. பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவையையும் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும், மாகாண மட்டத்திலான மேல் நீதிமன்றங்களின் நீதித்துறை ஆற்றலை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண மேல் நீதிமன்றங்கள் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் ஆரம்ப நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதுடன், 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குப் பின்னர் மாகாண சிவில் மேல் நீதிமன்றங்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன.இதன் விளைவாக வழக்குகள் குவிந்து காணப்படுவதும், அவற்றை நிறைவு செய்வதில் ஏற்படும் தாமதங்களும் காரணமாக மேலதிக நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்கள் மற்றும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிப்பதற்காக நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் 4ஆவது பிரிவைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது.சட்டரீதியான ஓய்வுபெறும் வயதெல்லைகளைத் திருத்துவதன் மூலம் அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதும் இந்தத் திருத்தங்களின் மற்றுமொரு நோக்கமாகும்.இதற்கமைய, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயதை 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, எம்.கே.எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், தர்மப்பிரிய விஜேசிங்க, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.டி. சூரியபண்டார மற்றும் சந்தன சூரியஆரச்சி ஆகியோரும், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம மற்றும் கயான் ஜனக ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-23
இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போது இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட குழு அண்மையில் பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த.த சில்வா, தினேஷ் ஹேமந்த மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போதும், அவர்களது இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைத்து பயன்படுத்தும் போதும் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டரீதியான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இங்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள், இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்ப வழங்கப்படும் மருத்துவப் பரிந்துரைகள் மற்றும் அதற்கமைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட மட்டத்தில் மேற்கொள்வது, பார்வைக் குறைபாடுடைய நபர்களுக்கான பார்வைப் பரப்பளவு உள்ளிட்ட மருத்துவத் தகைமைகளை கருத்திற்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கக்கூடிய வாகன வகைகளை விரிவுபடுத்துவது, வாகனங்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துவது மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.செவித்திறன் குறைபாடுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போதுள்ள சட்ட நிலைமை, விசேட அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் சைகை மொழி பெயர்ப்பாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஊனமுற்ற நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைக்கும் செயன்முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஒரு நபருக்கு பல வாகனங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், மருத்துவப் பரிசோதனை செயன்முறையை எளிமைப்படுத்துதல் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான இணையவழி முறைமையை மேம்படுத்துதல் தொடர்பிலும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள், பிரதேச மட்டத்தில் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு, இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்து உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.