பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-04-29
செய்தி வகைகள் : குழு செய்திகள்
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
இந்தக் குழு அதன் தலைவர் கௌவர அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் கூடியபோதே அதிகாரிகள் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தனர். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்து நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சம்பத் கொத்துவேகொட உள்ளிட்ட அதிகாரிகள் இக்குழுவில் கலந்துகொண்டனர்.
இயற்கை அனர்த்த சூழ்நிலையின் போது வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன செயற்படும் முறை குறித்து இங்கு விளக்கம் கோரப்பட்டது.
நடைமுறையில் உள்ள பொறிமுறையின் குறைபாடுகளையும், தொடர்புடைய தொழில்நுட்ப சாதனங்களின் குறைபாடுகளையும் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கிக் கூறினர்.
அத்துடன், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை எதிர்காலத்தில் குழு முன்னிலையில் அழைப்பதற்கும், இந்த நிறுவனங்கள் முதலில் செயற்படும் முறைகள் குறித்து விளக்கம் கோருவதற்கும், தேவை ஏற்படின் இந்த நிறுவனங்களைத் தனித்தனியாக அழைத்து தித்வா சூறாவளி தாக்கம் குறித்து வினவுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான (வைத்தியர்) பிரசன்ன குணசேன, மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, அன்டன் ஜயக்கொடி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அநுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோகினீ குமாரி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபாலகம, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-05-15
கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையிலான இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தூதுக் குழுவினர் மே 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பையேற்று இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெண்களை வலுவூட்டுவது, பாராளுமன்ற விவகாரங்கள், சமூக அபிவிருத்தி மற்றும் பாலின உணர்வுடனான ஆளுகை போன்ற விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கும் அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால பாராளுமன்ற, கலாசார மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கமாகும். இந்திய பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய இலங்கைத் தூதுக் குழுவினர், லோக் சபாவின் சபாநாயகர் கௌரவ ஓம் பிர்லா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பில் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.இந்தியாவின் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில், இலங்கைத் தூதுக் குழுவினர் இந்திய மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கௌரவ அமைச்சர் அன்னபூர்ணா தேவியுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இச்சந்திப்பில் பெண்களை வலுவூட்டும் திட்டங்கள், சிறுவர் நலன்புரி முயற்சிகள், பாலின உணர்திறன் மிக்க கொள்கைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள், சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.இலங்கைத் தூதுக் குழுவினர் டில்லி பொலிஸ் கமிஷனரைச் சந்தித்து கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தனர். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பது, அவை தொடர்பில் பின்பற்றக் கூடிய வினைத்திறனான மூலோபாயத் திட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் சமூக ரீதியான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பெண்களைத் தலைமையாகக் கொண்ட சுய உதவிக் குழுக்கள் மற்றும் இந்திய வணிக மற்றும் கைத்தொழில் பெண்கள் அமைப்பின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளையும் இத்தூதுக் குழுவினர் சந்தித்தனர்.இந்திய பாராளுமன்றத்தின் ஜனநாயகத்துக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விரிவான நிகழ்ச்சிகளிலும் இத்தூதுக் குழுவினர் பங்குபற்றுகின்றனர். இந்திய பாராளுமன்ற முறைமை, குழு முறைமை, பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இதில் ஆராயப்படுவதுடன், பெண்களை முன்னுரிமையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விடயங்களை இந்தியா கையாழும் முறைமைகள் பற்றியும் கலந்துரையாடப்படும்.புதுடில்லி முதலமைச்சருடனான சந்திப்பு, தாஜ் மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை உள்ளிட்ட கலாசார, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான விஜயம் என்பவற்றிலும் இவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.பாலின சமத்துவம், பெண்களை வலுவூட்டல், சமூக ஒருங்கிணைப்பை முன்னெடுக்க பாராளுமன்ற ஈடுபாடு மற்றும் பொதுமக்கள் தொடர்பு என்பவற்றின் மூலம் நடவடிக்கைகளை எடுப்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் முக்கிய பங்காற்றி வருகின்றது.உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைத் தூதுக் குழுவில் கௌரவ பெண் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜேரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) சமிந்திரானி கிரியல்ல, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சதுரி கங்கானி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தை, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவேல், (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) கீதா ஹேரத் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.இக்குழுவில் பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர, உதவி பிரதான உத்தியோகத்தர் ஹஷ்மி பெர்னாந்து, சிரேஷ்ட பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சமிலா நிசங்க, சிரேஷ்ட உதவி பாராளுமன்ற ஒழுங்கு மரபு உத்தியோகத்தர் ரணில் நாணயக்கார ஆகியோரும் இணைந்துள்ளனர்.
2026-05-15
அரசுடமை நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு உள்ளகக் கணக்காய்வு நடைமுறை அவசியமானது – அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறைத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய கோப் குழுவின் தலைவர் கௌரவ (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தெரிவிப்புஅரசுடமை நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு உள்ளகக் கணக்காய்வு நடைமுறைகள் அவசியம் என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் கௌரவ (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தெரிவித்தார். அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறை தலைவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார். அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித்துறைத் தலைவர்களை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அனுசரணையுடன் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் ஸ்ரீ ஜயவரத்தனபுர கோட்டே மொனாக் இப்பீரியல் ஹோட்டலில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இங்கு கருத்துத் தெரிவித்த கோப் குழுவின் தலைவர், அரசுடமை நிறுவனத்துறையில் காணப்படும் ஒழுங்கீனங்களைத் தவிர்ப்பதற்கான தலையீடு அவசியம் என்றும், அரசுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகள் என்ற ரீதியில் உயர்ந்த செயல்திறன் காண்பிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். சகல அரசுடமை நிறுவனங்களின் தலைவர்களையும் வரவழைத்து வெற்றிகரமான செயலமர்வு நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், நிதி ஒழுக்கம் மற்றும் உள்ளகக் கணக்காய்வு செயன்முறையை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் நிதித் துறைத் தலைவர்களை அழைத்து விளக்கமளிக்கத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.அத்துடன், 457 அரசுடமை நிறுவனங்கள் காணப்படுவதால் அனைத்து நிறுவனங்களையும் கோப் குழுவுக்கு அழைத்து விசாரணை நடத்துவது நடைமுறைச் சாத்தியம் இல்லையென்பதால், அந்நிறுவனங்களின் செயலாற்றுகையைப் பரிசீலனை செய்ய டிஜிட்டல் முறைமையொன்றை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினர்.“அரசாங்க கணக்காய்வு மற்றும் அரசாங்க நிறுவனங்களின் வகிபாகம், பொறுப்பு மற்றும் ஒத்துழைப்பு” தொடர்பில் கணக்காய்வாளர் தலைமையதிபதி சமுத்திகா ஜயரத்ன இங்கு விளக்கமளித்தார். அரசுடமை நிறுவனங்களின் நிதியங்கள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதால் அவை தொடர்பில் உரிய நிதி ஒழுக்கம் மற்றும் உள்ளகக் கணக்காய்வுகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் கணக்காய்வுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.குறும்பலாப்பிட்டிய, “பொது மக்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த உள்ளகக் கணக்காய்வின் வகிபாகம்” எனும் தலைப்பில் விளக்கமளித்தார். கோப் மற்றும் கோபா குழுக்களின் ஆலோசகர், முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி சரத் மாயாதுன்னே அவர்கள், “பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறுவதில் அரசுடமை நிறுவனங்களின் பங்கு” எனும் தலைப்பில் விளக்க உரை நிகழ்த்தினார். அரசுடமை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான அவகாசமும் இங்கு வழங்கப்பட்டது. உள்ளக கணக்காய்வாளர் பதவியை குறித்த நிறுவனத்தின் தலைவரின் கீழ் நியமிப்பதற்கு பதிலாக, அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையிடும் சுயாதீன பதவியாக மாற்றுவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா, 300ற்கும் அதிகமான அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.
2026-05-08
இலங்கை பாராளுமன்ற பணியாளர்களின் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் “லிட்டில் ரூட்ஸ்” பகல் நேர பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி என்பன கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ‘கொவிஜன மந்திரய’ வளாகத்தில் அண்மையில் (மே 06) உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தினால் (ACWF) இலங்கைப் பாராளுமன்றத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000,000 யுவான் பெறுமதியான (ஏறத்தாழ ரூ.43 மில்லியன்) உபகரணங்களைப் பயன்படுத்தி “லிட்டில் ரூட்ஸ்” புதிய பகல் நேரப் பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தமது தொழில்சார் கடமைகளை நிறைவேற்றும் அதேநேரம், பிள்ளைகளின் கல்வி மற்றும் சிறுவர் பராயத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாதுகாப்புடன்கூடிய, அவர்களை ஊக்கமளிக்கக் கூடிய சூழலை வழங்குவதே இந்தப் புதிய பகல் நேர பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளியின் பிரதான நோக்கமாகும்.“லிட்டில் ரூட்ஸ்” பகல் நேர பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி, இலங்கை பாராளுமன்றம், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாக உருவாகியுள்ளது. முதற்கட்டமாக இது பாராளுமன்ற பணியாளர்கள் மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணியாளர்களுக்காகத் திறக்கப்பட்டு, பின்னர் ஏனைய நிறுவனங்களுக்கும் விஸ்தரிப்பதே எதிர்பார்ப்பாகும்.இந்த நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன கௌரவ அமைச்சர் கே.டீ.லால் காந்த, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, வெகுசன ஊடக கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, பாராளுமன்றத்தின் குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் சமன்மலி குணசிங்க, இலங்கைக்கான சீன தூதரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் ஜி லிலி (Ji Lili), இரண்டாவது செயலாளர் ஜியாங் சாங் (Jiang Chang), பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மேலும், பாராளுமன்றத்தின் அதிகாரிகள், அமைச்சுக்களின் அதிகாரிகள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
2026-04-28
இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் உயர்கல்வி, சமய மற்றும் கலாசார மையங்கள், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளைக் கொண்ட வீடுகள், தொழில்முயற்சிக்கான கடன் வசதிகள் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், 2024/2025-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களில் 143 இயலாமையுடைய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2025/2026-ஆம் ஆண்டில் 203 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 25 முதல் 50 மில்லியன் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறைந்த வருமானம் கொண்ட இயலாமையுடைய மாணவர்களுக்கு மாதம் ரூ. 5,000 மேலதிக உதவித்தொகையை வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது. மேலும், பல பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் இயலாமையுடைய மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான முன்னோட்ட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தரமான சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும், விபத்துகள் காரணமாக இயலாமையுடைய நபர்களாக்கப்படும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் போன்ற உதவி சாதனங்களை வழங்கும் திட்டத்தை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இங்கு தெரிவித்தது.அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் உயரதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இயலாமையுடைய நபர்கள் மத வழிபாட்டுத் தலங்களை அணுகுவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து ஒன்றியத்தின் தலைவர், அமைச்சின் அதிகாரிகளுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கமைய சமய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இயலாமையுடைய நபர்கள் அணுகக் கூடிய வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக, மத்திய கலாச்சார நிதியம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.வீடு, கட்டுமானம் மற்றும் நீர்வளங்கள் அமைச்சு மேல்மாகாணத்தில் இயலாமையுடைய நபர்களின் வீட்டு வசதிகளுக்காக ரூ.500 மில்லியனை ஒதுக்கியிருப்பதாகவும், 2026ஆம் ஆண்டு 9,700 வீடுகளை அமைப்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. மேலும், இயலாமையுடைய நபர்களுக்காக விசேட கடன் திட்டமொன்றை கடைப்பிடிக்கவும், அவர்களின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு 'மாதிரித் திட்டத்தை'த் தயாரிப்பதற்கும் அமைச்சு இணக்கம் தெரிவித்தது.இயலாமையுடைய நபர்களின் விசேட தேவைகளைக் கருத்தில் கொண்டு நெகிழ்வான மாதிரியில் வீடுகளை அமைப்பதற்கு அமைச்சு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், வங்கிகளுக்கும், இயலாமையுடைய தொழில்முனைவோருக்கும் இடையில் நம்பிக்கை தொடர்பான இடைவெளி காரணமாக கடன்பெறுவதில் சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டனர். இதற்கு அமைய இயலாமையுடைய நபர்களுக்காக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறு ஒன்றியத்தின் தலைவர் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.புதிய தயாரிப்புகளை வணிகமயமாக்குவதில் இயலாமையுடைய நபர்களுக்கு உதவும் ஆய்வுகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு கவனம் செலுத்துவாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்குத் தேவையான சாதனங்களைத் தயாரிக்க ஆராய்ச்சி குழுக்களை ஊக்குவிக்கவும், அவற்றை சந்தைக்குக் கொண்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இதற்கு மேலதிகமாக, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு பாராளுமன்ற விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா, சுற்றுச்சூழல் போன்ற அமைச்சுக்களின் அதிகாரிகளும் ஒன்றியத்தில் தமது அமைச்சுசார்ந்த திட்டங்களை முன்வைத்தனர்.ஒவ்வொரு அமைச்சினாலும் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தை ஆறு மாதங்களில் மீண்டும் மீளாய்வு செய்யவும் ஒன்றியம் தீர்மானித்தது.இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான டி.கே. ஜெயசுந்தர, ஜகத் மனுவர்ண ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன், இயலாமையுடைய பெண்களின் தேசிய ஒன்றியம், இலங்கை செவிப்புலனற்றோர் சங்கம், இயலாமையுடைய இளைஞர்களுக்கான வலையமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர். அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks