2026-05-19
வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர்.
குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்சன ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது.
சிறு குழந்தைகள் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதனால் சமூகத்தில் எழும் பிரச்சினைகளில் தலையிடுமாறு இதற்கு முன்னர் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளருக்கு (உள்நாட்டு விவகாரங்கள்) வழங்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். இதற்கு அமைய வெளிநாடுகளுக்குப் பணியாற்றச் சென்ற பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலராக இருந்தாலே இந்தக் கொடுப்பனவு ஏற்புடையது என்றும், இதனை நடைமுறைப்படுத்த முதற்கட்டமாக ரூ.10 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதேநேரம், இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இதன் பின்னர் மாவட்ட செயலகங்களின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மிகவும் சாதகமான இந்தப் பணி குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இங்கு தெரிவித்தார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய பெண் பொலிஸ் அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதுவரையில் 50 பெண் பொலிஸ் பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதற்கும், 2600 பெண் கான்ஸ்டபில்களை இணைத்துக் கொள்வதற்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது. அத்துடன், தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு சமூக ஊடகங்களில் பிரசார நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீ லங்கா பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் பேசும் குடும்ப நல சுகாதார சேவையாளர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றை நிவர்த்தி செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். தமிழ் மொழியில் கல்வி பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையைப் பூர்த்தி செய்த மாணவ மாணவியர் இது தொடர்பில் கவனம் செலுத்துவது பற்றி விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படும் இந்நாட்டு சிறுவர்கள் பற்றிய சகல தகவல்களையும் சேகரித்து தேசிய தகவல் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தலையீட்டுடன் தகவல் கட்டமைப்பைத் தயாரிக்கும் பணி இடம்பெற்று வருவதாகவும், இவ்வருட இறுதிக்குள் இதனைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீதியை விரைவில் நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் இதன் பின்னரான சூழ்நிலைகளை முகாமைத்துவம் செய்வதற்கு சகல நிறுவனங்களும் உடனடியாக ஒன்றிணைந்த முறையில் செயற்பட வேண்டிதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. இதற்கு அமைய, பிரதேச செயகங்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, ஸ்ரீலங்கா பொலிஸ் உள்ளிட்ட சகல நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளை ஒரு குழுவாக ஒன்றிணைத்து செயற்படுத்த வேண்டும் என்றும் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அல்லது ஏனைய சம்பவங்கள் தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது அவசர நடவடிக்கை குறித்து விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும். அத்துடன், வட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரிவிக்க முடியும் என்றும், கூடிய விரைவில் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்தல், சகல முன்பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவை இலவசமாக வழங்குதல் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பங்களிப்புடனான ஓய்வூதியம் வழங்குவது ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளை அடுத்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க சேவையில் உள்ள பெண்களின் இடமாற்றங்ளின் போது காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள், முன்பள்ளி மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அதேபோல, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், இது தொடர்பில் குழு குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.ரி. வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-10-15
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் கௌரவ பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இங்கு பெருந்தோட்டத்துறையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். பெருந்தோட்டக் காணிகளில் பயன்படுத்தாத பகுதிகளைப் பயன்படுத்துவது, பெருந்தோட்டங்களில் உள்ள மக்களுக்கு காணப்படும் காணிப் பிரச்சினை, வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-10-15
கொழும்பு துறைமுக நகரில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு (BSI) வழங்கப்பட்டுள்ள அங்கீகாரங்கள், எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 08) பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்தில், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீடுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோருடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலிண சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களாக (BSI) அண்மையில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வணிகங்கள் மற்றும் எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இங்கு முன்வைக்கப்பட்டதுடன், துறைமுக நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவற்றின் விற்பனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.கொழும்பின் பிரதான வர்த்தக வலயத்திற்கு அண்மித்த பகுதியில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 1.12 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 9 காணித்துண்டுகள் இதுவரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 6 காணித்துண்டுகளைக் குத்தகைக்கு விடுவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.அத்துடன், அரசாங்கத்திற்குச் சொந்தமான 4 காணித்துண்டுகளை, மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் ஏழில் ஒரு பங்கிற்குச் சமமான அளவில், சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான காணித்துண்டுகள் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் விளக்கமளித்தனர்.இந்தக் காணிகள் 99 வருட காலப்பகுதிக்குக் குத்தகைக்கு வழங்கப்படுவதுடன், ஒரு சதுர மீற்றரின் சராசரி பெறுமதி 3,000 அமெரிக்க டொலர்களாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மொத்தக் குத்தகைத் தொகையில் 1 சதவீதத்திற்குச் சமமான 398 மில்லியன் ரூபா இதுவரை ஆணைக்குழுவிற்குக் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.துறைமுக நகரில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பயனாளி உரிமையாளர்களை அடையாளம் காணுதல், வெளிநாட்டு முதலீடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குமுறைச் செயன்முறைகள் தொடர்பிலும் குழு ஆராய்ந்தது.அதேவேளை, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் அவர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு சுமார் 14,300 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட தகவல்களைக் கருத்திற்கொண்டு, அவர்களைக் கண்காணிப்பதற்கான நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.துறைமுக நகரில் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் நாட்டின் சர்வதேச நற்பெயரைப் பாதுகாப்பதற்கும் உரிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புத் திட்டங்களில் வீடுகளை வாங்குவதற்கு எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களால் முன்கூட்டியே செலுத்தப்படும் பணத்தின் (Pre-Sale Deposits) பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழு விளக்கம் கோரியது. இதன்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் அத்தகைய பணம் குறித்த திட்டங்களுக்காகவே பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் மற்றும் அப்பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் எஸ்க்ரோ (Escrow) கணக்கு முறைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், துறைமுக நகருக்குக் கிடைத்துள்ள உண்மையான வெளிநாட்டு முதலீட்டின் அளவு, அங்கீகரிக்கப்பட்ட வணிகங்களின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பான தகவல்களும் குழுவில் கலந்துரையாடப்பட்டன.
2026-10-14
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்துவது தொடர்பான பொதுமக்களின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்ற விசேட குழுவிடமர் சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்னவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அண்மையில் கூடியபோதே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள 31 முன்மொழிவுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பாக முன்னர் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற குழுக்களின் அறிக்கைகளையும் ஆழமாக மீளாய்வு செய்து அறிக்கையிடுவதற்கான நிபுணர்கள் குழுவில், சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சாமிந்த அபேசிங்க, எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினர் கலாநிதி கே.தவலிங்கம், மற்றும் வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த விசேட குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்ன குறிப்பிடுகையில், முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் மற்றும் கருப்பொருள்கள் தொடர்பில் தனித்தனியான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.தற்போது அரசியல் கட்சிகளினாலும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அத்துடன் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள அனைத்து கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் மீளாய்வு செய்து, இரண்டு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையொன்றை பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், நாட்டின் பிரஜைகள் மற்றும் பொதுமக்களுக்கு தமது திருத்தங்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதேவேளை, தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட காலத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவும் குழு தீர்மானித்துள்ளது. அத்துடன், பொது மக்களின் கருத்துக்களை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்தவர்கள் விரும்பினால் அவர்களின் தனிப்பட்ட முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியும் என்றும் குழு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தின் பின்னர் குழுவின் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கௌரவ பிரதியமைச்சர்களான சட்டத்தரணி சுனில் வட்டகல, முனீர் முலாபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, ஜே.சி.அலவத்துவல, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயக்கொடி, சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-10-08
NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறுதி தணிக்கை அறிக்கை தொடர்பில், அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த 06ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில், NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் கண்டறியப்பட்ட அசாதாரண நிலைமைகள், கணக்காய்வு செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் அது தொடர்பான தணிக்கை அறிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, அர்கம் இலியாஸ் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அலககட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், சம்பிக ஹெட்டிஆராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.இங்கு, இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் கணக்காய்வு தராதரங்கள் கண்காணிப்பு சபையானது (SLAAMB) மேற்கொண்ட விசாரணையின் கண்டறிதல்கள் மற்றும் Deloitte Touche Tohmatsu India LLP நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளை அடையாளம் காண்பதில் வெளியக கணக்காய்வாளர்கள் தவறியமை தொடர்பிலும் குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.குறித்த நிதி முறைகேடுகள் தொடர்பில் நிறுவன நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பாக சிரேஷ்ட முகாமைத்துவத்தின் பொறுப்புக்கூறல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், NDB வங்கியின் கணிசமான பங்குகள் அரச மற்றும் பொதுமக்கள் நிதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதால், இவ்வாறான நிதி முறைகேடுகளினால் அரச நிதி மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.நிதி முறைமையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக LankaPay ஊடாக மத்தியப்படுத்தப்பட்ட மோசடி கண்காணிப்பு முறைமையொன்றை நிறுவுவதற்கான முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு வங்கியிலும் இடம்பெறும் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்காக வங்கி மட்டத்தில் மோசடி கண்காணிப்பு முறைமைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதன்படி, NDB வங்கியில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பான இறுதிக் கணக்காய்வு அறிக்கையில் பின்வரும் அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:1) இந்தக் கணக்காய்வு 2016.04.01 முதல் 2026.03.31 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ரூ. 13,639,664,684/- (ரூ. 13.6 பில்லியன்) பெறுமதியான மோசடி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நிதித் தாக்கம் இந்தக் கணக்காய்வு அறிக்கையில் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.2) 2026.09.29 அன்று மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தலின்படி, மோசடி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நிதித் தாக்கம் பின்வருமாறு:2025.01.01க்கு முன்னைய காலப்பகுதிக்கு – ரூ. 1.5 பில்லியன்2025ஆம் ஆண்டில் – ரூ. 9.6 பில்லியன்2026.03.31இல் முடிவடைந்த காலாண்டுக்கு – ரூ. 2.5 பில்லியன்3) 2026.04.06 அன்று NDB வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப வெளிப்படுத்தலுடன் ஒப்பிடுகையில், அறிவிக்கப்பட்ட மோசடி தொகை ரூ. 13.2 பில்லியனிலிருந்து ரூ. 13.6 பில்லியனாக ரூ. 0.4 பில்லியனால் அதிகரித்துள்ளது. 2026.06.22 திகதியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் 2026.06.26 அன்று NDB வங்கியினால் வெளிப்படுத்தப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில், இந்த மேலதிக மோசடி தொகை ரூ. 60 மில்லியனாகும்.4) இந்த மோசடி சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முன்னர் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்களில் குறிப்பிடப்பட்டிருந்தமை இறுதிக் கணக்காய்வு அறிக்கையினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.5) CEFT பரிவர்த்தனைகளைச் செயற்படுத்துதல், அடிப்படை வங்கியியல் முறைமையில் (Core Banking System) பயனர் மட்டத்திலான செயற்பாடுகள் (User Activities) மற்றும் பயனர் அணுகல் தகவல்களை (User Credentials) நிர்வகித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய NDB வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பில் காணப்பட்ட பல குறைபாடுகள் இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், பரிவர்த்தனை கண்காணிப்பு (Transaction Monitoring), நாளாந்த கணக்கிணக்கம் (Reconciliation), நிதி இணக்கப்பாடு (Compliance), உள்ளகக் கணக்காய்வு, கிளை வலையமைப்பு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு இடர் முகாமைத்துவம் (Operational Risk Management) உள்ளிட்ட பல செயற்பாட்டுத் துறைகளிலும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.6) வங்கியின் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் காணப்படும் நிர்வாகக் கட்டுப்பாட்டு முறைகள், நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகளை வலுப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகள் இந்தக் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.