பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-09-21
நாடு முழுவதிலும் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் (ATI) நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உபகுழு அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் கூடியது.
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (SLIATE) தற்போதைய தொழிற்பாடுகள், வளப் பயன்பாடு, மாணவர் தக்கவைப்பு மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப பாடநெறிகளை அமைத்தல் ஆகியவை குறித்து ஆராய்வதற்காக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப் - COPE) இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாப்பலகம அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ATI நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான பரிந்துரைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, SLIATE அமைப்பிடம் உள்ள வளங்கள் போதியளவில் பயன்படுத்தப்படாமை, காலாவதியான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடங்கள், அத்துடன் சம்பள மற்றும் கொடுப்பனவு முரண்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், சில ATI நிறுவனங்களின் நிர்வாகப் பிரச்சினைகள், அதிகளவிலான மாணவர்-விரிவுரையாளர் விகிதம், விடுதி வசதிக் குறைபாடு, வாழ்க்கைச் செலவு மற்றும் மாணவர் நலன்புரிப் பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் பாடநெறிகளை பாதியிலேயே கைவிட்டுச் செல்லுதல் போன்ற பிரச்சினைகள் குறித்தும் அந்நிறுவனங்களின் மாணவர்களும் அதிகாரிகளும் குழுவிடம் தெளிவுபடுத்தினர்.
வேலைவாய்ப்புச் சந்தையில் HND தகைமைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் அந்நிறுவனங்கள் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், HND பாடநெறிகளை பட்டப்படிப்பு மட்டம் வரை தரம் உயர்த்துதல், பாடத்திட்டங்களைப் புதுப்பித்தல், கைத்தொழில் துறையுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2026-09-21
சிறைச்சாலைகளில் காணப்படும் கடுமையான நெரிசலைக் குறைப்பதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொடுத்தல், சிறு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்படும் நபர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல் மற்றும் தொலைதூர தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவாகச் செயற்படுத்துவதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக அவர்களின் தலைமையில் கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவிலான நெரிசலுக்கு, தண்டனை பெற்ற கைதிகளை விட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை பெருமளவில் செல்வாக்குச் செலுத்துவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதன் காரணமாக அவர்களுக்கு பிணை பெற முடியாமல் நீண்டகாலம் விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன், சில சந்தேகநபர்கள் 18 மாதங்கள் முதல் 02 வருடங்கள் வரையிலான காலப்பகுதிக்கு இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் இன்றி விளக்கமறியலில் உள்ளதாக இங்கு வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.அத்துடன், குறைந்தளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நபர்களை நேரடியாக சிறையிலடைப்பதற்குப் பதிலாக, மருத்துவப் பரிசோதனையின் பின்னர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பக்கூடிய வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் உள்ள புனர்வாழ்வு நிலையங்கள் மற்றும் பயிற்சி வசதிகளை விரிவுபடுத்துவதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.நான்கு வருடங்களுக்கும் குறைந்த தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் அபராதப் பணத்தை செலுத்த முடியாமல் உள்ள சிறு குற்றவாளிகளை சேவை அல்லது பணி முகாம்களுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சிறு குற்றங்கள் தொடர்பில் பிணைப் பணத்தை மீளச்செலுத்த முடியாமல் உள்ள நபர்களின் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவந்து அவர்களை பொத்தமான பணி முகாம்களுக்கு அனுப்புவதன் மூலம் சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க முடியும் என வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், கைதிகளை நீதிமன்றங்களுக்கு நேரில் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக தொலைதூரத் தொழில்நுட்பம் மற்றும் காணொளி இணைப்புகள் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தொடர்புடுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. தினசரி கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போது பெருமளவிலான சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட வேண்டியுள்ளதால், இம்முறையைச் செயற்படுத்துவதன் மூலம் உத்தியோகத்தர் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு அபாயத்தையும் குறைத்துக்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்காகத் தேவையான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துவதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.முதியவர்கள், பூரண இயலாமையுடை மற்றும் நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவைப்படும் கைதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், மருத்துவக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் நிலவும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக அவர்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிப்பதன் அவசியமும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட்டது.ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் சிறையிலுள்ள தாய்மார்களின் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காக விசேட நீதிமன்ற நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான யோசனையொன்றும் இங்கு முன்வைக்கப்பட்டது. அந்தத் தாய்மார்களில் கைதிகள் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஆகிய இரு பிரிவினரும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சிறு குழந்தைகள் சிறைச்சாலை சூழலில் நீண்டகாலம் கழிப்பது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வழக்குகளை விரைவாக விசாரணை செய்து தண்டனை விதிப்பது அல்லது விடுவிக்கும் நடைமுறையொன்று அவசியம் என வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.சிறைச்சாலை அமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், சிறைச்சாலைகளின் பழமையான மற்றும் பாழடைந்த கட்டடங்களை விரைவாக புனரமைத்து பயன்பாட்டிற்கு எடுப்பதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது. மில்லேவ/ஹொரண புதிய சிறை வளாகத்தைக் நிர்மாணித்தல், சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிலவும் சிறைச்சாலையின் கொள்ளளவை அதிகபட்சமாகப் பயன்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், கடுமையான நெரிசல் நிலவும் சிறைச்சாலைகளிலுள்ள தடுப்புக்காவலர்களை ஒப்பீட்டளவில் நெரிசல் குறைவான சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.சிறைச்சாலை அதிகாரிகளின் பற்றாக்குறை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தடுப்புக்காவலர்களை அழைத்துச் செல்லும்போது மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவலர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்போது பெருமளவிலான அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்படுவது உத்தியோகத்தர் பற்றாக்குறையை மேலும் தீவிரப்படுத்துவதாக வெளிப்படுத்தப்பட்டது. அதற்கமைய, தொலைதூர நீதிமன்ற நடைமுறையைச் செயற்படுத்துவதுடன் மருத்துவமனைகளில் தடுப்புக்காவலர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட வார்டுகளை மீண்டும் பயன்படுத்துவதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.வெளிப்புறப் பாதுகாப்பிற்காக தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பொலிஸ் மற்றும் முப்படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்வது, சிறைச்சாலை அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் அவர்களுக்கு ஏற்படும் உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதுடன் சமூகத்திற்கு திரும்பும் நபர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக சமுதாயஞ்சார் சீர்திருத்தம் மற்றும் தொடர் கண்காணிப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது.
2026-09-18
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மற்றும் சனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றிற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பைப் பாராட்டி, இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுகத் வசந்த த சில்வா அவர்களுக்கு பொதுநலவாய 2026 புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருது (CPA New Parliamentarian Award 2026) கிடைத்துள்ளது.தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நேற்று (செப். 17) நடைபெற்ற 69 ஆவது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இவ்விருது அவருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.2024 ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது விழிப்புலனற்ற பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தவிசாளராகச் செயற்பட்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்குப் பங்காற்றியுள்ளார்.பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறை ரீதியான சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் இவர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மாற்றுத்திறனாளிகளைப் பங்கேற்கச் செய்து இலங்கையின் முதலாவது தேசிய பங்கேற்பு வரவுசெலவுத் திட்ட ஆலோசனையை நெறிப்படுத்தியமை அவற்றுள் பிரதானமாகும்.
2026-09-17
இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-09-17
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks