பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-11-26
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக, ஆசிரியர் இடமாற்றங்கள், பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்தல், முன்பள்ளிக் கல்வி, பாடசாலை மதிய உணவுத் திட்டம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
குறித்த குழு, கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கும்போது எதிர்கொள்ளப்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, ஆசிரியர் இடமாற்றச் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் தூர வரையறையானது, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் போன்ற மாவட்டங்களிலுள்ள தொலைதூரப் பாடசாலைகள் தொடர்பில் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துவதால், அந்த வரையறையை மீளாய்வு செய்யுமாறு இடமாற்றச் சபைக்கு அறிவிக்கக் குழு தீர்மானித்தது.
அத்துடன், சில தேசியப் பாடசாலைகளில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வேறு தேசியப் பாடசாலைகள் இல்லாத காரணத்தினால் இடமாற்றம் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, இடமாற்றங்களுக்காக மாத்திரம் தேசியப் பாடசாலைகளுக்கும் மாகாணப் பாடசாலைகளுக்கும் இடையில் ஆசிரியர்களை இடமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரியர்களின் சேவைக் காலம் தொடர்பான தகவல்களைச் சில பாடசாலைகள் சரியாகச் சமர்ப்பிக்காமை மற்றும் ஆசிரியர் தரவுக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய, உரிய தகவல்களை மறைப்பதாகச் சந்தேகிக்கப்படும் பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று பரிசோதிப்பதுடன், ஆசிரியர் தரவுக் கட்டமைப்பிலுள்ள தகவல்களைப் புதுப்பித்து, சேவைக் காலத்தைச் சரியாகக் கணக்கிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வட மாகாணத்திற்கான ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்குப் பதிலாக, 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய கொள்கையொன்றைத் தயாரிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
பாடசாலைகளில் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் பாடசாலைகளிடம் கையளிக்கப்படாத கட்டடங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, குளியாபிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் அது பாடசாலையிடம் கையளிக்கப்படாத காரணத்தினால், அதன் ஒலிக் கட்டுப்பாட்டுப் பலகைகள் மற்றும் குளிரூட்டல் கட்டமைப்புகள் சேதமடைந்து வருவதால், இது தொடர்பில் தனியான விசாரணையொன்றை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட மட்டத்தில் பாடசாலை அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. வவுனியா மாவட்டத்தின் செம்பலங்குளம் மற்றும் தாஜனிக்குளம் பாடசாலைகளிலுள்ள விசேட கல்விப் பிரிவுகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மாகாண நிதி ஒதுக்கீடுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பப் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட ஐந்து பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ள 21 திட்டங்களில் 12 திட்டங்களுக்கான மதிப்பீடுகளை அங்கீகரித்து நிதி ஒதுக்கீடுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்கான முறையான பொறிமுறையொன்று இல்லாமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. முன்பள்ளிக் கல்வி தொடர்பில் மாகாண சபைகளுக்கும் உரிய அமைச்சுக்களுக்கும் இடையில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் நிர்வாக மற்றும் கண்காணிப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மதிய உணவுத் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் முறையாகப் பின்பற்றப்படாமை மற்றும் உணவின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கிடையில், பாடசாலைகளில் நிலவும் மனித வளம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட “இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் நிலவும் மனித வளங்களின் போதிய பயன்பாட்டின்மையை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை” பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்னவினால் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பாடசாலைகளின் மனித வளங்கள் தொடர்பில் உபகுழுவினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை, எதிர்கால நடவடிக்கைகளுக்காகப் பரிந்துரைப்பது தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.
குழுக் கூட்டத்தில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய தரப்பினரும் கலந்துகொண்டனர்.
2026-11-26
2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் வருடாந்தக் கூட்டத்தில் இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திராணி கிரிஎல்ல கலந்துகொண்டார்.மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், நேபாளம், மாலைதீவு, தாய்வான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கருத்துகளையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன்போது, பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது மலேசியப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்ததுடன், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வழிகாட்டல் சுற்றுப்பயணத்தின் மூலம் அந்நாட்டின் பாராளுமன்ற மரபுகள், ஜனநாயகச் செயற்பாடுகள் மற்றும் சட்டவாக்கப் பணிகள் தொடர்பில் பெறுமதியான புரிதலைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன், மலேசியப் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைச் சந்திப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.மேலும், மலேசியாவுக்கான ஜேர்மனியத் தூதுவர் தங்கியிருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தமையும் இந்த விஜயத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாக அமைந்தது. இது சர்வதேச நட்புறவையும் இராஜதந்திர உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.இந்த விஜயத்தின் ஊடாக, பிராந்திய பெண் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதொரு வாய்ப்பு ஏற்பட்டது.
2026-11-25
மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்தி, அரச நிதியை வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் வலியுறுத்தினார்.நிதியாண்டின் ஆரம்பம் முதலே அமைச்சுக்களும் நிறுவனங்களும் தமக்குரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தை மாதாந்தம் மீளாய்வு செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.கடன் உறுதிக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ள சந்தர்ப்பங்களில் மாத்திரமே ஆண்டின் இறுதியில் பயன்படுத்தப்படாத நிதியை அடுத்த ஆண்டுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவ்வாறான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத சந்தர்ப்பங்களில், குறித்த நிதி ஒதுக்கீடுகள் மீண்டும் திறைசேரிக்குத் திரும்புவதால், அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்ட அறிக்கைப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, மாவட்ட மட்டத்தில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம், பெரும்போக நெல் அறுவடையை முகாமைத்துவம் செய்தல் மற்றும் களஞ்சியசாலைகளில் எஞ்சியுள்ள நெல் கையிருப்புகளை அடுத்த பெரும்போக அறுவடை கிடைப்பதற்கு முன்னர் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நெல் கையிருப்புகளை அரிசியாக மாற்றி நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துதல் அல்லது கால்நடைத் தீவனம் உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற மாற்று வழிகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.மேலும், முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக வரிச் சலுகைகளை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவது அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தற்போது முதலீட்டாளர் ஒருவருக்கு காணியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 18 மாதங்கள் தேவைப்படுவது முதலீடுகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, அரச காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை முதலீட்டுச் சபையின் கீழ் அல்லது விசேட காணி வங்கியொன்றின் கீழ் ஒப்படைத்து, முதலீட்டின் அளவு, வேலைவாய்ப்புகள் மற்றும் தேசியப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் துரிதமாகக் காணிகளை வழங்குவதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இதற்கு மேலதிகமாக, கிரிப்டோகரன்சி ஒழுங்குபடுத்தல், காப்புறுதி மற்றும் கொடுக்கல் வாங்கல் துறைகளின் டிஜிட்டல் மயமாக்கல், கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளும் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில் கௌரவ தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-11-25
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் (PSTA) தொடர்பில், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைக் கேட்டறிந்தது.குறித்த குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் அண்மையில் (நவ. 23) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் குழுவில் தமது கருத்துகளை முன்வைத்தனர்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்வது தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ள போதிலும், அதற்குப் பதிலாகப் புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதன் அவசியம் மற்றும் அதன் உள்ளடக்கம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக, சட்டமூலத்தைத் தயாரித்த குழுவினர், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர் இங்கு வலியுறுத்தினர்.சட்டமூலத்தைத் தயாரிக்கும் செயற்பாட்டின்போது விரிவான பொதுமக்கள் பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மேலும் பல சுற்றுக் கலந்துரையாடல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ குழுவின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித் பி. பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, முஜிபுர் ரஹ்மான், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், எம்.கே.எம். அஸ்லம், சந்தன சூரியஆரச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க ஆகியோரும், குழுவின் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
2026-11-23
உத்தேச புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் விசேட கூட்டமொன்று, தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த தலைமையில் அண்மையில் (நவ. 18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.தற்போதைய மற்றும் எதிர்கால உலகத் தொழிற் சந்தைக்கு ஏற்ற வகையில் இலங்கையின் தொழிலாளர் சட்டக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டு வரும் உத்தேச புதிய தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. தற்போது நடைமுறையிலுள்ள பிரதான தொழிலாளர் சட்டங்களை ஆராய்ந்து, அவற்றை ஒருங்கிணைத்து புதிய சட்டக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இதன் நோக்கமென அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தினர்.உத்தேச புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் நான்கு பிரதான துறைகளின் கீழ் தயாரிக்கப்படுவதாகவும், அதற்கமைய தொழிலாளர் தரநிலைகள், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, தொழில்துறை பிணக்குகள் மற்றும் உறவுகள், தொழிற்சங்க உரிமைகள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.தொழில் ஒப்பந்தங்களுக்கான கட்டமைப்பு, வேலை நேரம், விடுமுறை மற்றும் மேலதிக நேரம் தொடர்பான பிரதான ஏற்பாடுகள், மகப்பேற்றுப் பாதுகாப்பு, தந்தைவழி விடுமுறை, அத்துடன் வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பது தொடர்பான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.அத்துடன், பகுதிநேர ஊழியர்களின் உரிமைகள், தொழில் ஒப்பந்தங்களை முறைப்படுத்துதல், ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்புப் பயன்கள் மற்றும் பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துதல் தொடர்பான முன்மொழியப்பட்ட சட்ட ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.முன்மொழியப்பட்டுள்ள தொழிலாளர் தரநிலைகள் சட்டமூலத்தின் கீழ் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நான்கு அத்தியாயங்களும், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக தொழில் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான labourmin.gov.lk ஊடாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர்.முன்மொழியப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களைத் தயாரிக்கும் செயற்பாட்டில் தொழிற்சங்கங்கள், தொழில் வழங்குநர்கள், ஊழியர் பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின் கருத்துகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தக் கூட்டத்தில் தொழில் பிரதி அமைச்சர் கௌரவ மஹிந்த ஜயசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தொழில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks