2026-11-25
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் (PSTA) தொடர்பில், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைக் கேட்டறிந்தது.
குறித்த குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் அண்மையில் (நவ. 23) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் குழுவில் தமது கருத்துகளை முன்வைத்தனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்வது தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ள போதிலும், அதற்குப் பதிலாகப் புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதன் அவசியம் மற்றும் அதன் உள்ளடக்கம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக, சட்டமூலத்தைத் தயாரித்த குழுவினர், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர் இங்கு வலியுறுத்தினர்.
சட்டமூலத்தைத் தயாரிக்கும் செயற்பாட்டின்போது விரிவான பொதுமக்கள் பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மேலும் பல சுற்றுக் கலந்துரையாடல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ குழுவின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித் பி. பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, முஜிபுர் ரஹ்மான், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், எம்.கே.எம். அஸ்லம், சந்தன சூரியஆரச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க ஆகியோரும், குழுவின் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
2026-11-25
மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்தி, அரச நிதியை வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் வலியுறுத்தினார்.நிதியாண்டின் ஆரம்பம் முதலே அமைச்சுக்களும் நிறுவனங்களும் தமக்குரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தை மாதாந்தம் மீளாய்வு செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.கடன் உறுதிக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ள சந்தர்ப்பங்களில் மாத்திரமே ஆண்டின் இறுதியில் பயன்படுத்தப்படாத நிதியை அடுத்த ஆண்டுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவ்வாறான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத சந்தர்ப்பங்களில், குறித்த நிதி ஒதுக்கீடுகள் மீண்டும் திறைசேரிக்குத் திரும்புவதால், அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்ட அறிக்கைப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, மாவட்ட மட்டத்தில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம், பெரும்போக நெல் அறுவடையை முகாமைத்துவம் செய்தல் மற்றும் களஞ்சியசாலைகளில் எஞ்சியுள்ள நெல் கையிருப்புகளை அடுத்த பெரும்போக அறுவடை கிடைப்பதற்கு முன்னர் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நெல் கையிருப்புகளை அரிசியாக மாற்றி நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துதல் அல்லது கால்நடைத் தீவனம் உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற மாற்று வழிகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.மேலும், முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக வரிச் சலுகைகளை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவது அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தற்போது முதலீட்டாளர் ஒருவருக்கு காணியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 18 மாதங்கள் தேவைப்படுவது முதலீடுகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, அரச காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை முதலீட்டுச் சபையின் கீழ் அல்லது விசேட காணி வங்கியொன்றின் கீழ் ஒப்படைத்து, முதலீட்டின் அளவு, வேலைவாய்ப்புகள் மற்றும் தேசியப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் துரிதமாகக் காணிகளை வழங்குவதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இதற்கு மேலதிகமாக, கிரிப்டோகரன்சி ஒழுங்குபடுத்தல், காப்புறுதி மற்றும் கொடுக்கல் வாங்கல் துறைகளின் டிஜிட்டல் மயமாக்கல், கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளும் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில் கௌரவ தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-11-23
உத்தேச புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் விசேட கூட்டமொன்று, தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த தலைமையில் அண்மையில் (நவ. 18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.தற்போதைய மற்றும் எதிர்கால உலகத் தொழிற் சந்தைக்கு ஏற்ற வகையில் இலங்கையின் தொழிலாளர் சட்டக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டு வரும் உத்தேச புதிய தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. தற்போது நடைமுறையிலுள்ள பிரதான தொழிலாளர் சட்டங்களை ஆராய்ந்து, அவற்றை ஒருங்கிணைத்து புதிய சட்டக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இதன் நோக்கமென அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தினர்.உத்தேச புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் நான்கு பிரதான துறைகளின் கீழ் தயாரிக்கப்படுவதாகவும், அதற்கமைய தொழிலாளர் தரநிலைகள், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, தொழில்துறை பிணக்குகள் மற்றும் உறவுகள், தொழிற்சங்க உரிமைகள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.தொழில் ஒப்பந்தங்களுக்கான கட்டமைப்பு, வேலை நேரம், விடுமுறை மற்றும் மேலதிக நேரம் தொடர்பான பிரதான ஏற்பாடுகள், மகப்பேற்றுப் பாதுகாப்பு, தந்தைவழி விடுமுறை, அத்துடன் வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பது தொடர்பான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.அத்துடன், பகுதிநேர ஊழியர்களின் உரிமைகள், தொழில் ஒப்பந்தங்களை முறைப்படுத்துதல், ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்புப் பயன்கள் மற்றும் பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துதல் தொடர்பான முன்மொழியப்பட்ட சட்ட ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.முன்மொழியப்பட்டுள்ள தொழிலாளர் தரநிலைகள் சட்டமூலத்தின் கீழ் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நான்கு அத்தியாயங்களும், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக தொழில் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான labourmin.gov.lk ஊடாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர்.முன்மொழியப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களைத் தயாரிக்கும் செயற்பாட்டில் தொழிற்சங்கங்கள், தொழில் வழங்குநர்கள், ஊழியர் பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின் கருத்துகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தக் கூட்டத்தில் தொழில் பிரதி அமைச்சர் கௌரவ மஹிந்த ஜயசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தொழில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-21
கல்வி, உயர்கல்விமற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2021–2023நிதியாண்டுகளுக்குரிய மூவாண்டு அறிக்கைகள், 2024 ஆம்ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை ஆகியவற்றை ஆராய்வதற்காக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர்ஹாசீம் தலைமையில் அண்மையில் (நவ. 19) பாராளுமன்றத்தில் கூடியஅரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் 2018–2021காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 72அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. இடைநடுவில் கைவிடப்பட்ட இந்த 72 திட்டங்களுக்காக 1,664 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது. அவற்றில் 35 திட்டங்கள் தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், 13 திட்டங்களின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், நான்கு திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஒப்பந்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக 20 திட்டங்களின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர். எவ்வாறாயினும், குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர். 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் தலா மூன்று தேசிய பாடசாலைகளை நிறுவும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் பௌதிக அபிவிருத்தி மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக சுமார் 1,600 மில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எவ்வாறாயினும், கொள்கை ரீதியான தீர்மானங்களின் அடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்காமலிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட நிதி மற்றும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. இதற்கிடையில், அமைச்சினால் கட்டளையிடப்பட்ட கணினித் தொகுதியொன்று தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு அமைவாக இல்லாத காரணத்தினால் பொறுப்பேற்கப்படவில்லை என்பதுடன், அதற்கான கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரியவந்தது. இது தொடர்பில் விநியோகஸ்தரினால் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. தேசிய கல்வி முகாமைத்துவத்தகவல் கட்டமைப்பின் (NEMIS)முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஆசிரியர் தகவல்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பீட்டுத் தரவுகளை உள்ளீடுசெய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில மாகாணங்களில் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இந்தக் கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும், இதனை நாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களுக்கும் தேசிய பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. மேலும், மூலதனஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவதில் மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் ஏற்படும் தாமதங்கள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை மற்றும்கேள்விப்பத்திர நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாகத் தடைகள்ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. கணக்காய்வு வினாக்களுக்குப் பதிலளிப்பதில்ஏற்படும் தாமதங்கள் தொடர்பிலும் விசாரணை செய்த குழு, அவற்றைத்துரிதமாகத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான நளின் ஹேவகே மற்றும் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, சந்தன சூரியாராச்சி, சானக மாதுகொட, ருவன்திலக ஜயகொடி, ஒஷானி உமங்கா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, வைத்தியர் ஜனக சேனாரத்ன, சுசந்த குமார நவரத்ன, லால் பிரேமநாத், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுனில் ரத்னசிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-21
‘அனைவருக்கும் ஏற்ற பாராளுமன்றமொன்றை உருவாக்குதல்’ எனும் தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச செயலமர்வை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கடந்த நவம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளிலில் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச பாராளுமன்றப் பிரதிநிதிகள், பாலின சமத்துவ நிபுணர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.அனைத்துப் பிரஜைகளினதும் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்கக்கூடிய, மேலும் உள்ளடக்கிய, பிரதிநிதித்துவம் மிக்க பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்வதே இந்தச் செயலமர்வின் நோக்கமாகும். சர்வதேச அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், சமமான பங்கேற்புக்குத் தடையாக உள்ள காரணிகளை ஆராய்வதற்கும், பாராளுமன்றச் செயற்பாடுகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் நடைமுறைகளில் பெண்கள் உள்ளிட்ட போதிய பிரதிநிதித்துவம் இல்லாத குழுக்களுக்கு அர்த்தமுள்ள வகையில் குரல் கொடுப்பதற்கான நடைமுறை அணுகுமுறைகளை அடையாளம் காண்பதற்கும் இந்தச் செயலமர்வு தளமொன்றை ஏற்படுத்தியது.இந்தச் செயலமர்வு குறிப்பாகப் பாராளுமன்ற மகளிர் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. உலகளாவிய ரீதியில் பாராளுமன்றங்களின் ஆற்றலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மைத் திட்டமான Inter Pares உடன் இணைந்து இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களை ஜனநாயகத்தில் வலுப்படுத்தும் முயற்சியின் கீழ் International IDEA நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.2026 நவம்பர் 19 ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் மாண்புமிகு சில்வியா ஹார்ட்லீஃப், International IDEA நிறுவனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் லீனா ரிக்கிலா தமாங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற மகளிர் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் சர்வதேசப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.நிகழ்வில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர், ஜனநாயகச் செயற்பாடுகளில் பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத ஏனைய சமூகத்தினரின் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த முக்கிய முயற்சியை ஏற்பாடு செய்வதில் பங்களிப்பு வழங்கிய பாராளுமன்ற மகளிர் உறுப்பினர்கள் ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம், Inter Pares, International IDEA மற்றும் அனைத்து பங்காளி நிறுவனங்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.பராமரிப்புப் பொருளாதாரத்தை அங்கீகரித்து அதனை வலுப்படுத்துதல், தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவுதல் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட துறைகளில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் முன்னெடுத்துவரும் முயற்சிகளையும் சபாநாயகர் பாராட்டினார்.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் உரையாற்றுகையில், அனைத்துப் பிரஜைகளினதும் குறிப்பாகப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், பாராளுமன்ற மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளில் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான பங்கேற்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.ஆரம்ப அமர்வில் உரையாற்றிய கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் சர்வதேச அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும், அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார். இந்தச் செயலமர்வை ஏற்பாடு செய்வதற்கு வசதியளித்த அனைத்து தரப்பினருக்கும் பங்காளி நிறுவனங்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசுகையில், உள்ளடக்கிய பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் சர்வதேச அனுபவங்களைப் பெற்றுக்கொள்வது, அறிவைப் பகிர்ந்துகொள்வது மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் மாண்புமிகு சில்வியா ஹார்ட்லீஃப் மற்றும் International IDEA நிறுவனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் லீனா ரிக்கிலா தமாங் ஆகியோர் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவம் மிக்க ஜனநாயக நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினர்.பாராளுமன்றத்தின் ஆற்றலை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்கள் உள்ளிட்ட போதிய பிரதிநிதித்துவம் இல்லாத குழுக்கள் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், உள்ளடக்கிய பாராளுமன்ற நிர்வாகத்தை முன்னேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு, அனுபவப் பகிர்வு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதன் பெறுமதியையும் வலியுறுத்தினர்.பெண்களின் குரல்கள், அனுபவங்கள் மற்றும் கண்ணோட்டங்கள் பாராளுமன்றச் செயற்பாடுகள், அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் தேசிய மட்டத் தீர்மானம் மேற்கொள்ளும் நடைமுறைகளில் அர்த்தமுள்ள வகையில் பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துவதில் பாராளுமன்றங்களின் வகிபாகம் இந்தச் செயலமர்வின் முக்கிய கருப்பொருளாக அமைந்தது. குறிப்பாக, இன மற்றும் மத சிறுபான்மையினரைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இயலாமையுடைய பெண்கள் உள்ளிட்ட போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.பாலின உணர்வுடனான வரவு செலவுத் திட்டமிடல் தொடர்பான நடைமுறை அணுகுமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தேசிய வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் பொதுக் கொள்கைகள் பெண்கள் மற்றும் ஆண்களின் வெவ்வேறான தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அனுபவங்களை எவ்வாறு சிறந்த முறையில் கவனத்திற்கொள்ள முடியும் என்பதை ஆராய்வதற்கு இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளித்தது. பொதுநிதி வளங்கள் மற்றும் கொள்கைத் தீர்மானங்கள் ஊடாக அதிக சமத்துவத்தையும் சமூக உள்ளடக்கத்தையும் உறுதிப்படுத்துவதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள முக்கிய பொறுப்பு குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த அமர்வுகளில் கலந்துகொண்டு தமது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்றப் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களுடன் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பும் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தச் செயலமர்வின் மூலம் கிடைத்தது.இச்செயலமர்வில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில், அயர்லாந்து செனட் சபையின் உறுப்பினரும் அயர்லாந்து மகளிர் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவியுமான செனட்டர் அலிசன் கொமின், ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தின் முன்னாள் தலைமை அதிகாரி மாண்புமிகு அலிசன் ஜோன்ஸ்டன், மலேசிய செனட்டர் கௌரவ கலாநிதி ஜுபித்ரி பின் ஜோஹா, சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரமோனா விஜயராசா மற்றும் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற ஆய்வாளர்கள் மற்றும் வரவுசெலவுத் திட்ட நிபுணர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.பெண் மேயர்கள், பிரதி மேயர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்தச் செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கைப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்ச்சித்திட்டத்தில் அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.