logo

02

E   |   සි   |  

2026-03-20

செய்தி வகைகள் : செய்திகள் 

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்தை சபாநாயகர் இன்று (மார்ச் 20) சான்றுரைப்படுத்தினார்.

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் மூலம் இலங்கைக்குள் பணக் கடன் வழங்கும் தொழிலையும், நுண்நிதித் தொழிலையும் ஒழுங்குபடுத்துவது மற்றும் மேற்பார்வை செய்வது வலுவான சட்ட ஏற்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு புதியதொரு ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பணக்கடன் வழங்கும் தொழிலினதும், நுண்நிதித் தொழிலினதும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும், 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்குமான ஏற்பாடுகள் இதன்மூலம் செய்யப்பட்டுள்ளன. 
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் முதலாவது வாசிப்பிற்காக 2025 நவம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026 மார்ச் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் 2026ஆம் ஆண்டு 09ஆம் இலக்க நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் சட்டமாக இன்றுமுதல் (20) அமுலுக்கு வருகின்றது.



தொடர்புடைய செய்திகள்

2026-07-08

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் மீள ஸ்தாபிக்கப்பட்டது

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்கும் கூட்டம் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (ஜுலை 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாண்புமிகு அடெல் இப்ராஹிம் அவர்கள் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவுசெய்யப்பட்டதுடன், கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் அவர்கள் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமிவேல் அவர்கள் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள், பாராளுமன்ற இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான பொறிமுறையாக விளங்குகின்றனக் குறிப்பிட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் இவை பெறுமதிவாய்ந்த தளமாக அமைகின்றன எனத் தெரிவித்தார்.இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவானது பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், இந்த பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய ஒத்துழைப்பு வாய்ப்புக்களை உருவாக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாண்புமிகு அடெல் இப்ராஹிம் அவர்கள், அரசியல், பொருளாதாரம், கலாசாரம், கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை மற்றும் எகிப்து இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்த பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் முக்கிய பங்காற்றும் எனத் தெரிவித்தார்.அதேநேரம், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கும் இலங்கைக்கான எகிப்து தூதுவர் அடெல் இப்ராஹிம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.இதில், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-07-07

புதிய கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள் இன்றையதினம் (ஜுலை 07) கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்.கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற இந்த நல்லெண்ண சந்திப்பின்போது, தேசிய பாதுகாப்பையும் கடல்சார் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கை கடற்படை வகிக்கும் பங்கு, அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடர்பாக விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.புதிய கடற்படைத் தளபதிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், இலங்கையின் கடல்சார் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், மக்களின் நலனுக்காகவும் இலங்கை கடற்படை ஆற்றி வரும் சிறப்பான சேவையைப் பாராட்டினார். வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பில் வெற்றிகரமாகப் பணியாற்றுவதற்கான வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டார்.இதன்போது கருத்துத் தெரிவித்த வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், சபாநாயகரின் வாழ்த்துகளுக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், தேசிய பாதுகாப்பையும் கடல்சார் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் பொறுப்பை கடற்படை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றும் எனக் குறிப்பிட்டார்.இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, ஏனைய நாடுகளுடனும் நடுநிலையான இராஜதந்திர உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது எனவும் கடற்படைத் தளபதி வலியுறுத்தினார்.மேலும், இலங்கை கடற்படை வணிக நோக்கில் படகுகள் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதன் மூலம் நாட்டிற்கு வருவாய் ஈட்டுவதற்கும் உள்நாட்டு தொழில்துறையை மேம்படுத்துவதற்கும் காணப்படும் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வடக்கு மாகாணத்தின் தீவுப் பகுதிகளை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்பட இலங்கை கடற்படை தயாராக இருப்பதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.


2026-07-03

பாராளுமன்றம் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டன.பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள புதன்கிழமை தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை (188ஆம் அத்தியாயம்) தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2482/03 மற்றும் 2482/04 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூலை மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணிவரை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் 2468/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி, (235ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2480/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 ஆகிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் என்பவற்றுக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் பின்னர் பி.ப 3.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் வெளிநாட்டிற்குப் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை பற்றிய விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூலை மாதம் 09ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பணம் தூய்தாக்கதல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒழுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் என்பவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூலை மாதம் 10ஆம்  திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்தனியார் உறுப்பினர் பிரேரணைநலின் பண்டார ஜயமஹ அவர்கள்எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உரிமம் அளிக்கும் செயன்முறையை ஒழுங்குபடுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்.உபுல் கித்சிறி அவர்கள்இரத்தினபுரி மாவட்டத்தில் கொலொன்ன பிரதேச செயலகத்திற்குரிய மடுவன்வெல பிரபுமனை (வலவ்வ) முதற்கொண்டு இலங்கையின் புராதன பெறுமதி வாய்ந்த தலங்களைப் பாதுகாத்தல்.(கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள்“இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல்.சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ அவர்கள் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, தொழில் அபிவிருத்தி மற்றும் தனிநபர் சமூக அபிவிருத்தியின் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் (Student Counsellor) ஒருவரை நியமித்தல்.ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்கள்“ரட்டவிருவன்” (புலம்பெயர் வீரர்கள்) என்றழைக்கப்படும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை வகுத்தல்.ருவன்திலக்க ஜயகொடி அவர்கள்இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பிலுள்ள உணவகங்களில் மாணவர்களுக்கு பாதகமான உணவு வகைகளை விற்பனை செய்வதை நிறுத்துவதற்கான வழிமுறையொன்றை உருவாக்குதல்.றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்கள்     யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறைச் சேவைகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல்.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.


2026-07-02

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் 'தியவன்னா பௌத்த பக்தி கீதம்', தன்சல் மற்றும் மத சொற்பொழிவு நிகழ்வுகள்

தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு பாராளுமன்ற பணியாளர்களும், பாராளுமன்ற பணியாளர் பெளத்தச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த “தியவன்னா பௌத்த பக்தி கீதம்” நிகழ்வு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.பாராளுமன்றத்தின் அனைத்து திணைக்களங்கள் மற்றும் இணைந்த சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்களின் பங்களிப்புடன் இந்த பௌத்த பக்தி கீதம் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள், இலங்கையின் கலாசாரம் அடிப்படையில் பெளத்த தத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்கள் நாகரிகமான சமூகமாக உருவெடுப்பதற்கு பெளத்த தத்துவம் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நல்லொழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி மட்டுமன்றி, சிந்தனைகள் மற்றும் மனப்பாங்குகளின் அபிவிருத்தியும் அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துரைத்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள், இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாராளுமன்ற பணியாளர்களில் பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பங்களிப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டார். கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமையையும் அவர் நினைவுகூர்ந்தார்.இந்நிகழ்வில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரும், பாராளுமன்ற பணியாளர்கள், இலங்கைப் பொலிஸ் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் இணைந்த சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இதனுடன் இணைந்ததாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தினால் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஐஸ்கிறீம் தன்சல் வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் நுகசெவன நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற இந்த ஐஸ்கிறீம் சதன்சல் வழங்கும் நிகழ்வை கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி மற்றும் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.இதேவேளை, பெசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெளத்தச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தர்ம சொற்பொழிவு நிகழ்வொன்றும் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. குருநாகல் பிரதான சங்கநாயக்கர், வணக்கத்திற்குரிய இராஜாங்கனை சுமனசார தேரர் இந்த தர்மச் சொற்பொழிவை வழங்கினார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks