பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-07-08
செய்தி வகைகள் : செய்திகள்
பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்கும் கூட்டம் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (ஜுலை 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாண்புமிகு அடெல் இப்ராஹிம் அவர்கள் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.
இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவுசெய்யப்பட்டதுடன், கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் அவர்கள் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமிவேல் அவர்கள் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள், பாராளுமன்ற இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான பொறிமுறையாக விளங்குகின்றனக் குறிப்பிட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் இவை பெறுமதிவாய்ந்த தளமாக அமைகின்றன எனத் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவானது பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், இந்த பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய ஒத்துழைப்பு வாய்ப்புக்களை உருவாக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாண்புமிகு அடெல் இப்ராஹிம் அவர்கள், அரசியல், பொருளாதாரம், கலாசாரம், கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை மற்றும் எகிப்து இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்த பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் முக்கிய பங்காற்றும் எனத் தெரிவித்தார்.
அதேநேரம், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கும் இலங்கைக்கான எகிப்து தூதுவர் அடெல் இப்ராஹிம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-07-28
பால் பண்ணையாளர்களைக் கட்டியெழுப்பும் தேசிய பால் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக கௌரவ கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வாய்மூல விடைக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆராச்சி அவர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதியமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.தேசிய பால் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 325 Dairy Hub சங்களின் ஊடாக பால் பண்ணையாளர்களை அபிவிருத்தியடையச் செய்வதற்கும், வருடாந்தம் பால் உற்பத்தியை 410 மில்லியன் லீற்றர் முதல் 1,200 மில்லியன் லீற்றர் வரை அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இனப்பெருக்க பண்ணைகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையின் நிக்கவெரட்டிய பால் பண்ணை அபிவிருத்தி செய்யப்படுவதாகவும், மாகாண விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களங்களின் ஊடாக நிகழ்ச்சித்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக தேசிய வரவுசெலவுத்திட்டத்திலிருந்து 2026ஆம் ஆண்டில் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2026-07-24
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மேலதிக வாக்குகளால் இன்று (ஜுலை 24) பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று காலை 11.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிராக 2026 ஜூலை 21ஆம் திகதி எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா பிரேரணை கௌரவ சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
2026-07-24
இலங்கைக்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் கௌரவ கீ சென்ஹொங் அவர்கள், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (ஜுலை 23) சந்தித்தார்.தூதுவரை வரவேற்ற கௌரவ சபாநாயகர், இலங்கையில் தூதுவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு தூதுவர் வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தூதுவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அவரது சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவின் அடையாளமாக அமைந்துள்ளது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.இலங்கைக்கு பல்வேறு துறைகளில் சீன அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு கௌரவ சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கு சீனா வழங்கி வரும் அசைக்க முடியாத நட்பும் ஆதரவும் காரணமாக, கிராமப்புற சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் மதிப்பையும் அன்பையும் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வென்றிருப்பதாகத் தெரிவித்தார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் சார்பில், தூதுவரின் மதிப்புமிக்க சேவைக்கும் இலங்கை–சீனா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கும் கௌரவ சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். அதேவேளை, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ச்சியடையும் என நம்பிக்கை வெளியிட்டார்.அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பிலும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், இனவாதம் அல்லது பாகுபாட்டிற்கு எந்தவித இடமும் இல்லாத வகையில் செயல்படுவதற்கும், அனைத்துப் பிரஜைகளையும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்துவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர் கீ சென்ஹொங், தனது பதவிக்காலம் முழுவதும் தனக்கும் தூதரகத்திற்கும் வழங்கப்பட்ட ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் கௌரவ சபாநாயகருக்கும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் நன்றி தெரிவித்தார்.சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய தூதுவர், எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை மக்கள் தனக்கு வழங்கிய அன்பு, அக்கறை மற்றும் விருந்தோம்பலுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், இலங்கை எப்போதும் தனது இரண்டாவது தாய்நாடு போன்று இருக்கும் எனக் குறிப்பிட்டார்.இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலில், இலங்கை–சீனா இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. குறிப்பாக, இலங்கையின் போக்குவரத்துத் துறை மற்றும் நாட்டில் வளர்ந்து வரும் மின்சார வாகன (EV) சந்தை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் நிலையான அபிவிருத்தி முயற்சிகளுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவையும் கௌரவ சபாநாயகர் கோரினார்.இச்சந்திப்பைத் தொடர்ந்து சீனத் தூதுவருக்கு, கௌரவ சபாநாயக அவர்கள் மதியபோசன விருந்துபசாரமொன்றை வழங்கினார். அதன் பின்னர், தூதுவரும் அவரது குழுவினரும் சபாநாயகரின் கலரியிலிருந்து சபை அமர்வுகளைப் பார்வையிட்டனர். அப்போது சபைக்குத் தலைமைதாங்கிய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள், கௌரவ சீனத் தூதுவரையும் அவரது குழுவினரையும் சபையின் சார்பில் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சீனத் தூதுவரின் துணைவியார் ஜின் குயின், அமைச்சு ஆலோசகரும் பிரதி சீனத் தூதுவருமான சூ யான்வேய் மற்றும் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் சாங் லுடிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-07-23
இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பொதுச் சேவை நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு நிகழ்வு கடந்த ஜூலை 22ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் தலைமையில், மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சட்ட மாணவர்கள் 250க்கும் மேற்பட்டோர் பாராளுமன்றத்தின் பொது மக்கள் கலரிக்கு வருகை தந்து, பாராளுமன்ற அமர்வுகளை அவதானித்தனர்.இதற்கு மேலதிகமாக, சட்டவாக்கச் செயற்பாடு, பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் பாராளுமன்ற பொதுமக்கள் வெளித்தொடர்பு சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், புதிய அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியானது இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அதுலசிறி சமரகோன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks