logo

E   |   සි   |  

2026-02-12

செய்தி வகைகள் : செய்திகள் 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 7வது ஆசிய பிராந்திய மாநாடு மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆசிய, தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களின் இணைந்த இரண்டாவது மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத் தூதுக்குழு பங்கேற்பு

பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி நகரில் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 7வது ஆசிய பிராந்திய மாநாடு மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆசிய, தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களின் இணைந்த இரண்டாவது மாநாட்டில் கௌரவ பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர். இது “பாராளுமன்றங்களின் எதிர்காலம் : நம்பிக்கை, உள்ளடக்கம், புத்தாக்கம் மற்றும் சமாதானம் என்பவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மறுவரையறை செய்தல்” என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சிந்து மாநில சட்டமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைப் பாராளுமன்றத் தூதுக் குழுவில் கௌரவ வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலகட, சுஜீவ திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் அங்கம் வகித்தனர். பெப்ரவரி 03ஆம் திகதி இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பாகிஸ்தானின் தேசிய பேரவையின் கௌரவ சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் பங்கேற்றார். இந்த மாநாடு பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் இருந்து பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய சட்டமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  தலைமைதாங்கும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது.

“சமாதானம் மற்றும் ஜனநாய நம்பிக்கை : நல்லிணக்கத்திற்கான இயந்திரமாகப் பாராளுமன்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், சமீபத்திய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களைத் தொடர்ந்து ஜனநாயக நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பிய இலங்கையின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நவீன பாராளுமன்றங்கள் மக்களின் குரல்களை செவிமடுக்கும், உரையாடல்களை ஊக்குவிக்கும், வெளிப்படைத் தன்மையின் ஊடாகப் பொறுப்புக் கூறலைப் பலப்படுத்தும், குழுக்களை மேற்பார்வை செய்யும், ஊழலுக்கு எதிரான பொறிமுறை, இளைஞயோரின் பங்களிப்பு போன்றவற்றை வலுப்படுத்தும் நிறுவனங்களாக செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அத்துடன், நீடித்த சமாதானம் மற்றும் ஜனநாயகத்தின் நிலைத்தன்மைக்கு அத்தியாவசியமான அடித்தளங்களாக நல்லிணக்கமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“பாராளுமன்றக் கல்வி : நாளாந்த வாழ்க்கையில் ஜனநாயகக் கொள்கைகளை ஆழமாகப் பதியச்செய்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றுமொரு அமர்வில் இலங்கையின் கட்டமைக்கப்பட்ட பிரஜைகள் கல்வி அமைப்பு, மாணவர் பாராளுமன்றங்கள், இளைஞர் பாராளுமன்ற முயற்சிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் நடவடிக்கைகள் குறித்து பிரதி சபாநாயகர் விளக்கமளித்தார். பாடசாலை மட்டம் முதல் பெரியோர் வரையில் நாட்டுப் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தின் ஆட்சி மற்றும் பாராளுமன்றப் பொறுப்புக்கூறல் குறித்து கல்வி வழங்குவது மிகவும் முக்கியம்வாய்ந்தது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“சமாதானம் நிறைந்த மற்றும் ஒற்றுமையான சமூகங்களின் முன்னணியாகப் பாராளுமன்றங்கள் : போலியான செய்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல்களின் அதிகரிப்பு”,  “உய்வுக்கான சட்டமியற்றல் : காலநிலைகளுக்கு முகங்கொடுத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் குரல்கள்”, “பாலினம், தொழில்நுட்பம் மற்றும் நம்பிக்கை : ஒன்லைன் வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் துறையின் கையாளல்” என்ற தலைப்புக்களில் இடம்பெற்ற அமர்வுகளில் கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலக்கட, சுஜீவ திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் கலந்துகொண்டு, பங்களித்தனர்.

இறுதிநாள் அமர்வில் நன்றியுரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், ஆசிய பிராந்தியத்தின் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியம், பொதுநலவாய ஒன்றியத்தின் சிந்து கிளை, பாகிஸ்தான் தேசிய பேரவை போன்றவை வழங்கிய சிறப்பான விருந்தோம்பல் மற்றும் ஏற்பாடுகளுக்கு நன்றி பாராட்டினார். இந்த மாநாடு கலந்துரையாடல்களுக்கும், கற்றல்களுக்கும் மதிப்பு மிக்க மேடையாக அமைந்தது என்று குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தின் மதிப்புக்களைப் பாதுகாப்பதில் வலுவான பாராளுமன்றங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன், கராச்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பொதுநலவாய நாடுகளின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் முன்கொண்டு செல்லப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக ஆட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாதிக்கம், பாராளுமன்ற பொறுப்புக் கூறல், உள்ளடங்கலான நிர்வாகம், பொறுப்புவாய்ந்த புத்தாக்கம், நீடித்த சமாதானம் ஆகியவற்றிற்கான தங்களின் கூட்டு அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில் கராச்சி பிரகடனத்தை அனைத்துப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர். பொதுமக்கள் நம்பிக்கையின் சரிவு, தவறான மற்றும் வழுவான தகவல்களின் பரவல், சமூக ஒதுக்கல், காலநிலை பாதிப்புக்குட்படும் நிலை மற்றும் அதிவேக தொழில்நுட்ப மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்காக ஒத்துழைப்பும் பாராளுமன்ற இராஜதந்திர முயற்சிகளும் அவசியம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். இதனை முன்னெடுக்க வெளிப்படைத்தன்மை, பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் முன்னோக்குப் பார்வை கொண்ட பாராளுமன்றங்கள் இன்றியமையாதவை என்ற பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதாக இம்மாநாடு முடிவுக்கு வந்தது.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks