பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-04-02
செய்தி வகைகள் : செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுவினர் கௌரவ சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களை இன்று (ஏப். 02) சந்தித்தனர். 2026 மார்ச் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதிவரை சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன்வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் பாராளுமன்றத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி பிரிவுத் தலைவர் இவான் பாபர்ஜயோஜியோ மற்றும் சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொருளியலாளர்களும் இத்தூதுக் குழுவில் அடங்கியிருந்தனர்.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை சபாநாயகர் பாராட்டினார். பத்தாவது பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வலுவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சட்டவாக்கமாக அமைந்துள்ளது என்றும், இயலாமையுடைய சமூகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாக்கமாகவும் அமைந்துள்ளது எனவும் வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்திற்கு இலங்கை முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை மீள் உறுதிப்படுத்திய சபாநாயகர், வலுவான நிதியியல் மற்றும் பணக் கொள்கையைப் பேணுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பொது நிதி முகாமைத்துவச் சட்டம், ஊழல் எதிர்ப்புச் சட்டம் போன்ற முக்கிய சட்டங்களை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட அவர், நிதி ஒழுக்கத்தையும் நல்லாட்சியையும் உறுதி செய்வதற்கு இந்தக் கட்டமைப்புகள் முக்கியமானவை என்றும் தெரிவித்தார்.
பொது நிதி வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதியான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக பாராளுமன்ற கற்கை நிலையமொன்றை அமைப்பதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். இந்தத் திறன் விருத்தி முயற்சிகளில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பையும் அவர் கோரியிருந்தார்.
நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இலங்கையின் செயற்பாடுகளில் வலுவான நிலையில் இருப்பதாகவும், நாடு பொருளாதார ரீதியில் சாதகமான பாதையில் பயணித்து வருவதாகவும் இவான் பாபர்ஜயோஜியோ தெரிவித்தார். சட்டவாக்கம் மற்றும் கொள்கைகளை மேற்பார்வை செய்வதில் பாதுகாவலன் என்ற ரீதியில் பாராளுமன்றத்தின் வகிபாகத்தையும் அவர் வலியுறுத்தினார். நிலைபேறான மறுசீரமைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையினால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய தாக்கம், தித்வா புயல் தாக்கத்தின் பின்னரான நிவாரணம், மீட்சி மற்றும் மீள்கட்டுமான முயற்சிகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடான சந்திப்பிலும் சர்வதேச நாணய ஒன்றியத்தின் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர். இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, திலித் ஜயவீர, (கலாநிதி) எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில், புயல் தாக்கத்திலிருந்தான மீட்சியில் காணப்படும் சவால்கள் மற்றும் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உள்ளிட்ட தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்து கட்சித் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். வரிகளை சீர்செய்தல், பணவீக்க முகாமைத்துவம், வெளிவாரியான அழுத்தங்கள் மற்றும் பேரண்டப் பொருளாதாரத்தின் நிலைப்புத் தன்மையை உறுதி செய்வதற்கான நீடித்த கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தேவை போன்ற முக்கிய விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டன.
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுவினருக்கு பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks