பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-03-30
செய்தி வகைகள் : செய்திகள்
இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் 2026 மார்ச் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை சீன மக்கள் குடியரசின் ஹைனான் மாகாணத்தில் நடைபெற்ற ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் (Boao Forum for Asia Annual Conference 2026) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்தத் தூதுக் குழுவில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான ஜயலத் பெரேரா ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.
2026 மார்ச் 25ஆம் திகதி கௌரவ சபாநாயகர், ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் தலைவர் கௌரவ பான்கீ - மூன் மற்றும் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜாங் ஜுன் அவர்களையும் சந்தித்தார். அதிகரித்து வரும் உலகளாவிய நிலையற்ற தன்மையின் இக்காலத்தில், ஆசியாவில் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கு ஆசியாவிற்கான போவோ மன்றத்தின் முக்கியத்துவத்தை பான் கி-மூன் இச்சந்திப்பில் வலியுறுத்தினார். தற்போதைய சவால்களை எதிர்கொள்ள வலுவான அரசியல் தலைமை அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இலங்கையின் பிராந்தியப் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் தான் இலங்கைக்கு மேற்கொண்டமையை நினைவுகூர்ந்த பான் கி-மூன், மோதலுக்குப் பின்னர் அந்நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தையும் பாராட்டினார்.
பிராந்தியம் மற்றும் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள சிக்கலான சவால்களை நிவர்த்தி செய்வதற்கு கலந்துரையாடல்கள், ஒத்துழைப்புக்கள் மற்றும் கொள்கை ரீதியிலான தலைமைத்துவங்களின் அவசியம் முக்கியமானது என்பதை கௌரவ சபாநாயகர் இங்கு வலியுறுத்தினார். போவோ மன்றம் மற்றும் அதன் நிறுவனர்களின் பயனுள்ள ஈடுபாட்டின் பங்கையும், அமைதி மற்றும் பன்முகத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதில் பான் கி-மூனின் உலகளாவிய தலைமைத்துவத்தையும் சபாநாயகர் பாராட்டினார். இலங்கையின் அனுபவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், ஒரு நிலையான மற்றும் செழிப்பான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் நல்லிணக்கம், அனைவரினதும் உள்ளடக்கம் மற்றும் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் மதிப்பை வலியுறுத்தினார். மேலும், ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். காலநிலை மாற்றம் மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கு மேம்படுத்தப்பட்ட உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியத்தைச் சுடு்டிக்காட்டிய அவர், சமாதானமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கூட்டு நடவடிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்பு ஆகியவை இன்றியமையாதவை என்றும் வலியுறுத்தினார்.
2026 மார்ச் 26 திகதி கௌரவ சபாநாயகர் அவர்கள், “பகிரப்பட்ட எதிர்காலத்தை வடிவமைத்தல் : புதிய போக்குகள், புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய கூட்டாண்மைகள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மாநாட்டின் முதன்மை அமர்வில் உரையாற்றினார். புவிசார் அரசியல் சூழ்நிலைகள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, காலநிலை மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் விரைவான முன்னேற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில், பன்முகத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல், தொழில்நுட்பத்தின் அறநெறி சார்ந்த ஆளுகை, காலநிலை மாற்றம் தொடர்பில் விரைவான மாற்று நடவடிக்கைகள் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றின் அவசியத்தையும் சபாநாயகர் வலியுறுத்தினார். கூட்டாண்மை, புத்தாக்கம் மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் மூலம் உலகளாவிய முன்னேற்றத்தை வழிநடத்தும் ஒரு மையமாக ஆசியாவிற்கு குறிப்பிடத்தக்க ஆற்றல் உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கையில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களைக் குறிப்பிட்ட சபாநாயகர், பேரண்டப் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், வலுவான ஆளுகையை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் டிஜிட்டல் மற்றும் முதலீட்டுக்கு உகந்த பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் எடுத்துரைத்தார். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றுலா, டிஜிட்டல் சேவைகள், சரக்குப் போக்குவரத்து மற்றும் மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்படுமாறு பிராந்தியப் பங்காளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் தலைவர் கௌரவ ஜாவோ லிஜி அவர்கள் பிரதான அமர்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கௌரவ சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங், அஜர்பைஜான் தேசிய சட்டமன்றத்தின் கௌரவ சபாநாயகர் ஜாஹிபா கஃபரோவா மற்றும் கஜகஸ்தானின் கௌரவ முதல் துணைப் பிரதமர் ரோமன் ஸ்க்லியார் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டிற்கு இணையாக, கௌரவ சபாநாயகர் அவர்கள், சீனாவின் தேசிய காங்கிரஸ் நிலைக் குழுவின் தலைவர் கௌரவ ஜாவோ லேஜி அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலையும் நடத்தினார். சபாநாயகராக சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகப்பூர்வ பயணம் இது என்பதைக் குறிப்பிட்ட சபாநாயகர், இது நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பட்டுப் பாதைத் திட்டத்தின் கீழ் வர்த்தகம் மற்றும் கலாசார பரிமாற்றங்கள் ஊடாக 2,000 வருடங்களுக்கு மேலான காலத்தில் நீண்டகால ஒத்துழைப்பு காணப்படுகின்றமையையும் சபாநாயகர் இங்கு நினைவுகூர்ந்தார். குறிப்பாக, தித்வா புயலுக்குப் பிறகு சீனா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதால், இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளைப் பெறும் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக சீனா திகழ்கிறது என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். சீன நாட்டினருக்கான விசா இல்லாத அனுமதி இதற்கு சாதகமாகப் பங்களித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சீன தேசிய காங்கிரசின் நிலைக் குழுத் தலைவர் ஜாவோ லெஜி, இருதரப்புப் பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கை நாட்டினருக்கு விசா இல்லா முறைமை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
2001-ல் நிறுவப்பட்ட ஆசியாவுக்கான போவோ மன்றம் ஆசியா மற்றும் அதற்கப்பால் உள்ள அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் கல்வித்துறையினரிடையே உரையாடலுக்கான ஒரு உயர்மட்டத் தளத்தை வழங்கும் ஒரு அரசு சாரா மற்றும் இலாப நோக்கற்ற சர்வதேச அமைப்பாகும். பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய உலகமயமாக்கல் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் இந்த மன்றத்தின் 25-வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு குறிக்கிறது.
ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் வருடாந்த மாநாடு, உலகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை ஒன்றிணைத்து, முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கும், வளர்ச்சிக்கான பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் ஒரு முன்னணி தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks