logo

E   |   සි   |  

2026-01-21

செய்தி வகைகள் : செய்திகள் 

அனைவருடனும் இணைந்து தைப்பொங்கலைக் கொண்டாவது பொதுவான மனிதநேயத்தின் சக்தியையும், ஒரு தேசமாக ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது - பாராளுமன்றத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு

பாராளுமன்றத்தில் அனைவருடனும் இணைந்து உண்மையான உற்சாகத்துடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் ஊடாக மனிதகுலத்தின் உண்மையான அழகும், இலங்கை தேசத்தின் ஒற்றுமையும் பிரதிபலிக்கின்றது என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தெரிவித்தார். ஒரு நாட்டில் அதன் மக்கள் தங்களுடைய கலாசார பன்முகத் தன்மையைப் பாதுகாத்து ஒரே தேசமாக ஒன்றிணையும்போதே அந்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 15ஆம் திகதி கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு பாராளுமன்றத்தில் இன்று (ஜன. 21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, விவசாயம் மற்றும் இயற்கையின் மீது இலங்கையர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான கொண்டாட்டமாகும் என்றார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் பாராளுமன்றப் பணியாளர்கள், பல்வேறு மத மற்றும் கலாச்சார பின்னணிகளைக் கொண்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தைப் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் இதுபோன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது ஒரு தனித்துவமான வாய்ப்பு என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்)  ஸ்ரீ பவானந்தராஜா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க கௌரவ சபாநாயகரின் வழிகாட்டிலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ் கலாசாரம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அதற்கான மதிப்புக்களை  ஊக்குவித்தல், தமிழ் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மதித்தல் மற்றும் இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மைக்குள் ஒரு தேசிய அடையாளத்தை வளர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பூஜைகளுடன் ஆரம்பமான இன்றைய நிகழ்வில் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வளாகத்தில் தைப்பொங்கல் இடம்பெற்றது. தமிழ் கலாசார நடனங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்வை மேலும் மெருகூட்டியிருந்தன.

இந்த நிகழ்வில் மயூராபதி கோவிலின் பிரதான குருக்கள், கௌரவ  பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, கௌரவ சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் முனீர் முலாபர், கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, திணைக்களங்களின் தலைவர்கள், பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks