01

E   |   සි   |  

2025-10-31

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழு ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இலங்கை பாராளுமன்றத்தின் உயர்மட்டக் குழுவினர் 2025 ஒக்டோபர் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர். இந்த விஜயமானது இரு பாராளுமன்றங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஜனநாயக ஆட்சியமைப்பை முன்னேற்றுதல், நிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டமைந்தது.

இந்தக் குழுவில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ அமைச்சரும் ஆளும் கட்சியின் முதற்கோலாசானுமாகிய (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சரும் இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவருமான (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சரும், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சவித்ரி போல்ராஜ் மற்றும் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இந்த விஜயத்தை ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றம் (WFD) ஒழுங்கு செய்ததுடன், ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் இதற்கு நிதியளித்திருந்தது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கௌரவ அன்ரூ பற்றிக் அவர்களும் இந்தக் குழுவுடன் இணைந்துகொண்டார். இந்த விஜயத்தில் வினைத்திறனான சட்டம், மேற்பார்வை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.  

சட்டம் இயற்றப்பட்டதன் பின்னரான பரிசீலனை (Post-Legislative Scrutiny - PLS) அதாவது சட்டமியற்றுபவர்கள் சட்டங்கள் இயற்றிய பின்னர் அவற்றின் அமுலாக்கம் மற்றும் தாக்கத்தை முறையாக மீளாய்வு செய்வதன் மூலம் அவற்றின் நோக்கம் அடையப்பெற்றுள்ளதா என்பதையும் பிரஜைகளின் நலன்களுக்கு ஏற்றதாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யும் செயல்முறை பற்றி பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. இத்தகைய வழிமுறைகள் எவ்வாறு பொறுப்புக்கூறல் மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளை மேம்படுத்துகின்றன என்பன பற்றி ஆராயும் வகையில் இலங்கை தூதுக்குழுவினர் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், குழு அதிகாரிகள் மற்றும் மேற்பார்வை அமைப்புகளுடன் விரிவாகக் கலந்துரையாடினர்.

இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் பொதுச் சபையின் சபாநாயகர் ஓய்வுபெற்ற கௌரவ சர் லிண்ட்ஸே ஹோய்ல், வெளிநாட்டு, பொதுநலவாயம் மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் (FCDO) இந்து-பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் சீமா மல்ஹோட்ரா மற்றும் பொதுச் சபையின் நடைமுறைக் குழுவின் தலைவர் கேட் ஸ்மித் ஆகியோருடன் உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தினர். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சரும், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சவித்ரி போல்ராஜ், பாராளுமன்ற நடவடிக்கை மூலம் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்துவது குறித்த ஒரு விசேட கலந்துரையாடலுக்காக இங்கிலாந்து பிரதமரின் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான விசேட தூதுவர், கௌரவ பரோனஸ் ஹேரியட் ஹார்மன் அவர்களையும் சந்தித்தார்.

இலங்கை பாராளுமன்றத்தின் சட்ட மீளாய்வு செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயும் வகையில் லண்டன் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் (Institute of Advanced Legal Studies) கல்விசார் நிபுணர்களையும் தூதுக்குழுவினர் சந்தித்தனர். WFD இன் பிரதம நிறைவேற்று அதிகாரி அந்தோனி ஸ்மித் மற்றும் WFD குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் குரேஷி உட்பட ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் குழு உறுப்பினர்களுடனும், இரண்டு நிறுவனங்களுக்கிடையேயான தற்போதைய ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது மேலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இந்த விஜயம் இரு பாராளுமன்றங்களும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஜனநாயக நிர்வாகம், நிறுவன ஒருமைப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவதற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஒரு பெறுமதிவாய்ந்த வாய்ப்பை வழங்கியது. அத்துடன், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை முன்னேற்றுவதில் பாராளுமன்றங்களின் பிரதான பங்கைப் பரஸ்பரம் அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்த இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த நட்புறவை இது மேலும் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.



தொடர்புடைய செய்திகள்

2026-06-03

பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 01) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் நிலையியற் கட்டளை 119இன் கீழான தீர்மானம் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.ஜூன் 10ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம், நிதி (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறும்.ஜூன் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தில் சட்டத்தின் கீழான கட்டளை என்பன அங்கீகரிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள், குறைநிரப்பு மதிப்பீடு என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. அதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பாக 2026.05.20 அன்று ஆரம்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதம் தொடர்ச்சியாக இரண்டாவது நாள் முன்னெடுக்கப்படும். மேலும், கௌரவ தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் வேண்டுகோளின்படி,  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் தற்போதைய நாணயக் கொள்கை மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  நிகழ்ச்சியொன்றை எதிர்வரும் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


2026-06-03

பிரியாவிடை பெற்றுச்செல்லும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கைக்கான பிரதி இந்திய  உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்தியஞ்சல் பாண்டே அவர்கள் பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு பிரியாவிடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இணைந்துகொண்டார்.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும், சட்டவாக்கங்களுக்கிடையில் காணப்படும் நீண்டகால உறவுகளையும் வலுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு பிரதி உயர்ஸ்தானிகர், கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தரர். இரு நாட்டு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மற்றும் ஈடுபாடுகளுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற அதிகரிரகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.கலாநிதி பாண்டே அவர்கள், இலங்கையில் வழங்கிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டிய கௌரவ சபாநாயகர், கடுமையான நேரங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக தித்வா சூறாவளித் தாக்கத்தின் பின்னரான சூழல் மற்றும் மத்திய கிழக்கில் தற்பொழுது காணப்படும் நிலைமையால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிப்பதற்கு இந்தியா வழங்கும் உதவிகளையும் அவர் பாராட்டினார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கும் சபாநாயகர் நன்றி பாராட்டினார்.அத்துடன், கலாநிதி பாண்டே அவர்கள், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இலங்கையில் பதவி வகித்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்குப் பிரதி சபாநாயகர் நன்றி தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கலாநிதி பாண்டே அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதி சபாநாயகர், இரு நாடுகளுக்குமிடையிலான சட்டவாக்கங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும்  நன்றியைத் தெரிவித்தார்.இந்தச் சந்திப்பில் கலாநிதி பாண்டே அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு கௌரவ சபாநாயகர் மற்றும் கௌரவ பிரதி சபாநாயகர் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


2026-06-02

வெசாக் அலங்காரங்களால் ஒளிரும் பாராளுமன்றம்

புத்த பெருமானின் முப்புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் தினத்தைக் கொண்டாடும் விதமாக இலங்கை பாராளுமன்ற வளாகம் வாரஇறுதி நாட்களில் வெசாக் விளக்குகளினால் ஒளிமயமாகக் காட்சியளித்தது.வெவ்வேறு வர்ணங்களைக் கொண்ட வெசாக் கூடுகள், ஒளிமயமான விளக்குகள், பௌத்த கொடிகள் உள்ளிட்டவற்றால் பாராளுமன்ற வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அவை பார்ப்பவர்களுக்கு ஆன்மீகரீதியான புத்துணர்ச்சியையும், ஆறுதலையும் அளித்தன.இந்த அலங்காரங்கள் ஊடாக பௌத்த மதத்தில் போதிக்கப்படும் அன்பு, கருணை, ஒற்றுமை மற்றும் ஒழுக்க விழுமியங்கள் என்பன குறித்து சமூகத்திற்கு நினைவூட்டப்பட்டதுடன், வெசாக் பண்டிகையின் உண்மையான நோக்கமும் மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இரவு நேரத்தில் மின்விளக்குகள் மற்றும் வெசாக் கூடுகளினால் ஜொலித்த அலங்காரங்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு தனி அழகையளித்தன.இனம், மதம் மற்றும் கலாசாரம் கடந்த பௌத்த மதத்தின்  உலகளாவிய செய்தியும், அமைதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதின் முக்கியத்துவமும் இந்த வெசாக் அலங்காரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.அத்துடன், இலங்கை பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா போதி மரத்தைச் சுற்றியும் விளக்குகள்  ஏற்றப்பட்டிருந்தன. இந்த மதச் சடங்குகளின் போது, புத்த பகவானின் ஸ்ரீ தர்மம் நினைவுகூரப்பட்டதுடன், நாட்டிற்கும் மக்களுக்கும் அமைதி, செழிப்பு மற்றும் நன்மை உண்டாக வேண்டிய பிரார்த்தனைகளும் முன்வைக்கப்பட்டன.வெசாக் பண்டிகையின் ஒளிமயமான பிரகாசத்துடன் மிளிர்ந்த இலங்கை பாராளுமன்றம், பௌத்த கலாச்சாரத்தின் பெருமிதத்தையும் அதன் ஆன்மீக பாரம்பரியத்தின் மதிப்பையும் தனித்துவமான முறையில் வெளிப்படுத்தியது.


2026-05-30

கௌரவ சபாநாயகர் அவர்களின் வைகாசி வெசாக் தினச் செய்தி

ஸ்ரீ புத்த ஆண்டு 2570 ஆவது சம்புத்த மும்மங்களங்களை நினைவுபடுத்தும் உன்னதமான வைகாசி விசாக புண்ணிய தினம் இன்றைய தினமாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு மாத்திரமன்றி, இலங்கை மக்களாகிய நமக்கும் இன்றைய தினம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏனெனில், நமது நாட்டின் சமூக, கலாசார விழுமியங்களின் பாரம்பரியமும் அடித்தளமும் பௌத்த தர்மத்தின் மீதே தங்கியுள்ளது. இம்முறை வைகாசி விசாக தினத்தின் கருப்பொருள் "அபித்தரதே கல்யாணே" (Abhittharetha Kalyane) என்பதாகும். அதாவது "பொது நலனுக்காக விரைவாக அணிதிரள்வோம்" என்பதாகும். பொது மக்களின் நல்வாழ்விற்காக அனைத்தையும் துறந்து, தனது வாழ்நாளை அர்ப்பணித்த நமது உன்னத சாஸ்தாவான கௌதம புத்த பெருமானின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறக்கூடிய மிக உயர்ந்த முன்மாதிரியும் இதுவேயாகும். இலங்கை ஒரு நாடு என்ற ரீதியில் கடந்த காலங்களில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தங்களின் போது, எமது இலங்கை தேசம் பாதிக்கப்பட்ட சக மனிதர்களின் நலனுக்காக ஒன்றிணைந்து நின்ற விதம், எமது சமூகத்தில் உறைந்துள்ள இந்த பௌத்த மத விழுமியங்களை மிகச்சிறப்பாகப் பிரதிபலித்தது என்றும் நான் நம்புகிறேன்.எனவே, புத்த பெருமான் போதித்த உன்னதமான ஆன்மீகச் செய்திக்கு இணங்க நமது வாழ்க்கையைக் கொண்டுசெல்லும் போது, எப்போதும் பொது மக்களின் நல்வாழ்விற்காக நாம் செயலாற்ற வேண்டும். பாதிக்கப்படும் சக மனிதர்களுக்காகவும், பொதுச் சமூகத்தின் நன்மைக்காகவும் செயலாற்றக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தின் ஒரு தூணாக சமயம் திகழ்கிறது. அதற்காகச் சமயத்திற்குள்ளும் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகையதொரு சமய விழிப்புணர்வின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும், அதன் வழியே மிகவும் ஆரோக்கியமானதொரு சமூகத்தை நாம் சுவீகரித்துக்கொள்ள முடியும் என்றும் நான் நம்புகிறேன்.அதற்கிணங்க, இந்த உன்னதமான மும்மங்கள தினத்தில், முழுச் சமூகமாகப் பொது நலனுக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதியோடு அணிதிரளுமாறு அழைப்பு விடுப்பதுடன், இன்றைய வைகாசி விசாகப் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி உரித்தாகட்டும்...!வைத்தியர் ஜகத் விக்ரமரத்னசபாநாயகர்இலங்கைப் பாராளுமன்றம்






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது. | தனியுரிமைக் கொள்கை

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks