logo

02

E   |   සි   |  

2026-05-30

செய்தி வகைகள் : செய்திகள் 

கௌரவ சபாநாயகர் அவர்களின் வைகாசி வெசாக் தினச் செய்தி

ஸ்ரீ புத்த ஆண்டு 2570 ஆவது சம்புத்த மும்மங்களங்களை நினைவுபடுத்தும் உன்னதமான வைகாசி விசாக புண்ணிய தினம் இன்றைய தினமாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு மாத்திரமன்றி, இலங்கை மக்களாகிய நமக்கும் இன்றைய தினம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏனெனில், நமது நாட்டின் சமூக, கலாசார விழுமியங்களின் பாரம்பரியமும் அடித்தளமும் பௌத்த தர்மத்தின் மீதே தங்கியுள்ளது. 

இம்முறை வைகாசி விசாக தினத்தின் கருப்பொருள் "அபித்தரதே கல்யாணே" (Abhittharetha Kalyane) என்பதாகும். அதாவது "பொது நலனுக்காக விரைவாக அணிதிரள்வோம்" என்பதாகும். பொது மக்களின் நல்வாழ்விற்காக அனைத்தையும் துறந்து, தனது வாழ்நாளை அர்ப்பணித்த நமது உன்னத சாஸ்தாவான கௌதம புத்த பெருமானின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறக்கூடிய மிக உயர்ந்த முன்மாதிரியும் இதுவேயாகும். இலங்கை ஒரு நாடு என்ற ரீதியில் கடந்த காலங்களில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தங்களின் போது, எமது இலங்கை தேசம் பாதிக்கப்பட்ட சக மனிதர்களின் நலனுக்காக ஒன்றிணைந்து நின்ற விதம், எமது சமூகத்தில் உறைந்துள்ள இந்த பௌத்த மத விழுமியங்களை மிகச்சிறப்பாகப் பிரதிபலித்தது என்றும் நான் நம்புகிறேன்.

எனவே, புத்த பெருமான் போதித்த உன்னதமான ஆன்மீகச் செய்திக்கு இணங்க நமது வாழ்க்கையைக் கொண்டுசெல்லும் போது, எப்போதும் பொது மக்களின் நல்வாழ்விற்காக நாம் செயலாற்ற வேண்டும். பாதிக்கப்படும் சக மனிதர்களுக்காகவும், பொதுச் சமூகத்தின் நன்மைக்காகவும் செயலாற்றக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தின் ஒரு தூணாக சமயம் திகழ்கிறது. அதற்காகச் சமயத்திற்குள்ளும் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகையதொரு சமய விழிப்புணர்வின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும், அதன் வழியே மிகவும் ஆரோக்கியமானதொரு சமூகத்தை நாம் சுவீகரித்துக்கொள்ள முடியும் என்றும் நான் நம்புகிறேன்.

அதற்கிணங்க, இந்த உன்னதமான மும்மங்கள தினத்தில், முழுச் சமூகமாகப் பொது நலனுக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதியோடு அணிதிரளுமாறு அழைப்பு விடுப்பதுடன், இன்றைய வைகாசி விசாகப் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி உரித்தாகட்டும்...!

வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன
சபாநாயகர்
இலங்கைப் பாராளுமன்றம்



தொடர்புடைய செய்திகள்

2026-07-24

பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்

இலங்கைக்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் கௌரவ கீ சென்ஹொங் அவர்கள், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (ஜுலை 23) சந்தித்தார்.தூதுவரை வரவேற்ற கௌரவ சபாநாயகர், இலங்கையில் தூதுவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு தூதுவர் வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தூதுவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அவரது சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவின் அடையாளமாக அமைந்துள்ளது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.இலங்கைக்கு பல்வேறு துறைகளில் சீன அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு கௌரவ சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கு சீனா வழங்கி வரும் அசைக்க முடியாத நட்பும் ஆதரவும் காரணமாக, கிராமப்புற சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் மதிப்பையும் அன்பையும் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வென்றிருப்பதாகத் தெரிவித்தார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் சார்பில், தூதுவரின் மதிப்புமிக்க சேவைக்கும் இலங்கை–சீனா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கும் கௌரவ சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். அதேவேளை, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ச்சியடையும் என நம்பிக்கை வெளியிட்டார்.அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பிலும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், இனவாதம் அல்லது பாகுபாட்டிற்கு எந்தவித இடமும் இல்லாத வகையில் செயல்படுவதற்கும், அனைத்துப் பிரஜைகளையும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்துவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர் கீ சென்ஹொங், தனது பதவிக்காலம் முழுவதும் தனக்கும் தூதரகத்திற்கும் வழங்கப்பட்ட ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் கௌரவ சபாநாயகருக்கும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் நன்றி தெரிவித்தார்.சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய தூதுவர், எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை மக்கள் தனக்கு வழங்கிய அன்பு, அக்கறை மற்றும் விருந்தோம்பலுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், இலங்கை எப்போதும் தனது இரண்டாவது தாய்நாடு போன்று இருக்கும் எனக் குறிப்பிட்டார்.இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலில், இலங்கை–சீனா இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. குறிப்பாக, இலங்கையின் போக்குவரத்துத் துறை மற்றும் நாட்டில் வளர்ந்து வரும் மின்சார வாகன (EV) சந்தை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் நிலையான அபிவிருத்தி முயற்சிகளுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவையும் கௌரவ சபாநாயகர் கோரினார்.இச்சந்திப்பைத் தொடர்ந்து சீனத் தூதுவருக்கு, கௌரவ சபாநாயக அவர்கள் மதியபோசன விருந்துபசாரமொன்றை வழங்கினார். அதன் பின்னர், தூதுவரும் அவரது குழுவினரும் சபாநாயகரின் கலரியிலிருந்து சபை அமர்வுகளைப் பார்வையிட்டனர். அப்போது சபைக்குத் தலைமைதாங்கிய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள், கௌரவ சீனத் தூதுவரையும் அவரது குழுவினரையும் சபையின் சார்பில் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சீனத் தூதுவரின் துணைவியார் ஜின் குயின், அமைச்சு ஆலோசகரும் பிரதி சீனத் தூதுவருமான சூ யான்வேய் மற்றும் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் சாங் லுடிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-07-23

திறந்த பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு விஜயம்

இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பொதுச் சேவை நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு நிகழ்வு கடந்த ஜூலை 22ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் தலைமையில், மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சட்ட மாணவர்கள் 250க்கும் மேற்பட்டோர் பாராளுமன்றத்தின் பொது மக்கள் கலரிக்கு வருகை தந்து, பாராளுமன்ற அமர்வுகளை அவதானித்தனர்.இதற்கு மேலதிகமாக, சட்டவாக்கச் செயற்பாடு, பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் பாராளுமன்ற பொதுமக்கள் வெளித்தொடர்பு சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், புதிய அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியானது இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அதுலசிறி சமரகோன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


2026-07-22

பூரண மனிதநேயத்தை நோக்கி பயணிக்க அறிவும் இதயமும் விழிப்புடன் இருக்க வேண்டும் –குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர

பூரண மனிதநேயத்தை நோக்கி பயணிப்பதற்கு, தன்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அறிவு மாத்திரமன்றி இதயமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கைப் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.‘நான்’ என்ற கருத்தை விட ‘நாம்’ என்ற கருத்தில் ஒத்துழைப்பு, அன்பு, கருணை மற்றும் பரிவுணர்வு ஆகியன காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.கிரிபத்கொட விஹாரமஹாதேவி மகளிர் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே குழுக்களின் பிரதித் தவிசாளர் இதனைத் தெரிவித்தார்.பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும் ஜனநாயக ஆட்சி முறையின் செயற்பாடுகள் தொடர்பான புரிதலையும் மாணவியருக்கு வழங்கும் நோக்கில் கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த குழுக்களின் பிரதித் தவிசாளர், கல்வியின் ஊடாக பிள்ளைகளுக்கு சமூகத்துடன் இணைந்து செயற்படும் திறன், விழுமியங்களை அடையாளம் காணும் திறன் மற்றும் பொறுப்புமிக்க பிரஜைகளாக வளர்வதற்குத் தேவையான திறன்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் கருத்துக்களை மேற்கோள் காட்டிய அவர், மனிதனின் பூரணத்துவத்திற்காக தனக்கும், பிறருக்கும் மற்றும் இயற்கைக்கும் இடையிலான உறவுகளைச் சிறந்த முறையில் பேணுவது அத்தியாவசியமானது என வலியுறுத்தினார்.இந்த உறவுகள் சீர்குலைவதன் காரணமாக தனிநபர்களிடையே தன்னம்பிக்கை வீழ்ச்சி, சமூகத்தில் அவநம்பிக்கை, வெறுப்பு மற்றும் மோதல்கள் அதிகரித்தல், அத்துடன் சுற்றுச்சூழல் அழிவு மற்றும் காலநிலை நெருக்கடி தீவிரமடைதல் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையிலும் வாக்காளர்களிலும் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பதால், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்கும் வகையில் மாணவிகள் தயாராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஜனநாயக விழுமியங்களை நடைமுறையில் அனுபவிப்பதற்கான முக்கியமான வாய்ப்பாக மாணவர் பாராளுமன்றம் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.அதேநேரம், “எதிர்காலத் தலைமைத்துவமும் மாணவர் பாராளுமன்றமும்” என்ற தலைப்பில் உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள், ஜனநாயகம், மக்கள் இறைமை, பாராளுமன்றத்தின் வகிபாகம், சட்டவாக்கச் செயன்முறை, குழுக்கள், பாராளுமன்ற ஒன்றியங்கள், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கினார்.ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான சேவைகளை பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாணவர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். மேலும், மாணவர் அமைச்சர்களினால் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பாடசாலை அதிபர் திருமதி எம். எல். என். எம். தமயந்தியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.ஜனாதிபதி செயலகமும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத் தொடரின் மற்றுமொரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகள், விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


2026-07-21

மாணவர் பாராளுமன்றம் தொடர்பில் அல்-ஹிதாயா கல்லூரியில் செயலமர்வு

மாணவர் பாராளுமன்றம் தொடர்பில் மாணவர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று கொழும்பு – 10 அல்-ஹிதாயா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும், குறித்த கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு கல்லூரியின் அதிபர் திருமதி ஏ.எஃப்.சரூக் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.இந்தச் செயலமர்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதான நூலகர் எஸ்.எல். ஸியாத் அஹமட் பாராளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கினார்.தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரி ஏ.எஸ்.எம்.யஸ்ரி மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் அதனை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி நடைமுறையிலான முன்னுதாரணங்களுடன் விரிவான விளக்கத்தை வழங்கினார். இச்செயலமர்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் மாணவர் பாராளுமன்றம் குறித்துத் தமக்குக் காணப்படும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக்கொண்டனர். 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks