01

E   |   සි   |  

2025-10-30

செய்தி வகைகள் : செய்திகள் 

கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில்

  • உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கு பங்களிக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்கும் வகையில் கல்வி முறை மாற்றப்படும் - பிரதமர் தெரிவிப்பு
  • சட்டத்தை மதிக்காத ஒருவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது – பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டு

 

கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயகலகம் அமைந்துள்ள பழைய பாராளுமன்றத்தின் சபா மண்டபத்தில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய மற்றும் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஒக். 28) நடைபெற்றது.

கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்த நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில், கல்லூரியும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, கல்வி என்பது வெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல எனக் குறிப்பிட்டார். உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கு பங்களிக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதற்கு மாணவர்களுக்கு சுமையாக இல்லாமல் இருக்கும் வகையில் கல்வி முறையைப் படிப்படியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை பிரதமரிடம் நேரடியாக முன்வைப்பதற்கும் இங்கு வாய்ப்புக் கிடைத்தது.

மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, சட்டத்தை மதிக்கும் ஒருவர் ஒருபோதும் சட்டமியற்றுபவர் ஆக முடியாது என்று தெரிவித்தார். சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பல தசாப்தங்களாக நாட்டின் பாராளுமன்றமாகப் பயன்படுத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சபாமண்டபத்தில்  இருந்து இந்நிகழ்ச்சியை நடத்த முடிந்தது மாணவர்களுக்கு ஒரு சிறப்பு மரியாதை என்றும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறித்து மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. சர்வேஸ்வரன், சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன் கமகே ஆகியோர், பிராந்திய மட்டத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து சலுகைகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் குறித்து மாணவர்களுக்குத் தெரிவித்தனர்.

மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்ததையடுத்து பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, மகாமாயா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் சசிகலா சேனாதீர, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-03

பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 01) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் நிலையியற் கட்டளை 119இன் கீழான தீர்மானம் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.ஜூன் 10ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம், நிதி (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறும்.ஜூன் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தில் சட்டத்தின் கீழான கட்டளை என்பன அங்கீகரிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள், குறைநிரப்பு மதிப்பீடு என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. அதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பாக 2026.05.20 அன்று ஆரம்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதம் தொடர்ச்சியாக இரண்டாவது நாள் முன்னெடுக்கப்படும். மேலும், கௌரவ தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் வேண்டுகோளின்படி,  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் தற்போதைய நாணயக் கொள்கை மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  நிகழ்ச்சியொன்றை எதிர்வரும் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


2026-06-03

பிரியாவிடை பெற்றுச்செல்லும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கைக்கான பிரதி இந்திய  உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்தியஞ்சல் பாண்டே அவர்கள் பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு பிரியாவிடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இணைந்துகொண்டார்.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும், சட்டவாக்கங்களுக்கிடையில் காணப்படும் நீண்டகால உறவுகளையும் வலுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு பிரதி உயர்ஸ்தானிகர், கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தரர். இரு நாட்டு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மற்றும் ஈடுபாடுகளுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற அதிகரிரகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.கலாநிதி பாண்டே அவர்கள், இலங்கையில் வழங்கிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டிய கௌரவ சபாநாயகர், கடுமையான நேரங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக தித்வா சூறாவளித் தாக்கத்தின் பின்னரான சூழல் மற்றும் மத்திய கிழக்கில் தற்பொழுது காணப்படும் நிலைமையால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிப்பதற்கு இந்தியா வழங்கும் உதவிகளையும் அவர் பாராட்டினார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கும் சபாநாயகர் நன்றி பாராட்டினார்.அத்துடன், கலாநிதி பாண்டே அவர்கள், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இலங்கையில் பதவி வகித்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்குப் பிரதி சபாநாயகர் நன்றி தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கலாநிதி பாண்டே அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதி சபாநாயகர், இரு நாடுகளுக்குமிடையிலான சட்டவாக்கங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும்  நன்றியைத் தெரிவித்தார்.இந்தச் சந்திப்பில் கலாநிதி பாண்டே அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு கௌரவ சபாநாயகர் மற்றும் கௌரவ பிரதி சபாநாயகர் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


2026-06-02

வெசாக் அலங்காரங்களால் ஒளிரும் பாராளுமன்றம்

புத்த பெருமானின் முப்புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் தினத்தைக் கொண்டாடும் விதமாக இலங்கை பாராளுமன்ற வளாகம் வாரஇறுதி நாட்களில் வெசாக் விளக்குகளினால் ஒளிமயமாகக் காட்சியளித்தது.வெவ்வேறு வர்ணங்களைக் கொண்ட வெசாக் கூடுகள், ஒளிமயமான விளக்குகள், பௌத்த கொடிகள் உள்ளிட்டவற்றால் பாராளுமன்ற வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அவை பார்ப்பவர்களுக்கு ஆன்மீகரீதியான புத்துணர்ச்சியையும், ஆறுதலையும் அளித்தன.இந்த அலங்காரங்கள் ஊடாக பௌத்த மதத்தில் போதிக்கப்படும் அன்பு, கருணை, ஒற்றுமை மற்றும் ஒழுக்க விழுமியங்கள் என்பன குறித்து சமூகத்திற்கு நினைவூட்டப்பட்டதுடன், வெசாக் பண்டிகையின் உண்மையான நோக்கமும் மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இரவு நேரத்தில் மின்விளக்குகள் மற்றும் வெசாக் கூடுகளினால் ஜொலித்த அலங்காரங்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு தனி அழகையளித்தன.இனம், மதம் மற்றும் கலாசாரம் கடந்த பௌத்த மதத்தின்  உலகளாவிய செய்தியும், அமைதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதின் முக்கியத்துவமும் இந்த வெசாக் அலங்காரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.அத்துடன், இலங்கை பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா போதி மரத்தைச் சுற்றியும் விளக்குகள்  ஏற்றப்பட்டிருந்தன. இந்த மதச் சடங்குகளின் போது, புத்த பகவானின் ஸ்ரீ தர்மம் நினைவுகூரப்பட்டதுடன், நாட்டிற்கும் மக்களுக்கும் அமைதி, செழிப்பு மற்றும் நன்மை உண்டாக வேண்டிய பிரார்த்தனைகளும் முன்வைக்கப்பட்டன.வெசாக் பண்டிகையின் ஒளிமயமான பிரகாசத்துடன் மிளிர்ந்த இலங்கை பாராளுமன்றம், பௌத்த கலாச்சாரத்தின் பெருமிதத்தையும் அதன் ஆன்மீக பாரம்பரியத்தின் மதிப்பையும் தனித்துவமான முறையில் வெளிப்படுத்தியது.


2026-05-30

கௌரவ சபாநாயகர் அவர்களின் வைகாசி வெசாக் தினச் செய்தி

ஸ்ரீ புத்த ஆண்டு 2570 ஆவது சம்புத்த மும்மங்களங்களை நினைவுபடுத்தும் உன்னதமான வைகாசி விசாக புண்ணிய தினம் இன்றைய தினமாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு மாத்திரமன்றி, இலங்கை மக்களாகிய நமக்கும் இன்றைய தினம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏனெனில், நமது நாட்டின் சமூக, கலாசார விழுமியங்களின் பாரம்பரியமும் அடித்தளமும் பௌத்த தர்மத்தின் மீதே தங்கியுள்ளது. இம்முறை வைகாசி விசாக தினத்தின் கருப்பொருள் "அபித்தரதே கல்யாணே" (Abhittharetha Kalyane) என்பதாகும். அதாவது "பொது நலனுக்காக விரைவாக அணிதிரள்வோம்" என்பதாகும். பொது மக்களின் நல்வாழ்விற்காக அனைத்தையும் துறந்து, தனது வாழ்நாளை அர்ப்பணித்த நமது உன்னத சாஸ்தாவான கௌதம புத்த பெருமானின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறக்கூடிய மிக உயர்ந்த முன்மாதிரியும் இதுவேயாகும். இலங்கை ஒரு நாடு என்ற ரீதியில் கடந்த காலங்களில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தங்களின் போது, எமது இலங்கை தேசம் பாதிக்கப்பட்ட சக மனிதர்களின் நலனுக்காக ஒன்றிணைந்து நின்ற விதம், எமது சமூகத்தில் உறைந்துள்ள இந்த பௌத்த மத விழுமியங்களை மிகச்சிறப்பாகப் பிரதிபலித்தது என்றும் நான் நம்புகிறேன்.எனவே, புத்த பெருமான் போதித்த உன்னதமான ஆன்மீகச் செய்திக்கு இணங்க நமது வாழ்க்கையைக் கொண்டுசெல்லும் போது, எப்போதும் பொது மக்களின் நல்வாழ்விற்காக நாம் செயலாற்ற வேண்டும். பாதிக்கப்படும் சக மனிதர்களுக்காகவும், பொதுச் சமூகத்தின் நன்மைக்காகவும் செயலாற்றக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தின் ஒரு தூணாக சமயம் திகழ்கிறது. அதற்காகச் சமயத்திற்குள்ளும் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகையதொரு சமய விழிப்புணர்வின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும், அதன் வழியே மிகவும் ஆரோக்கியமானதொரு சமூகத்தை நாம் சுவீகரித்துக்கொள்ள முடியும் என்றும் நான் நம்புகிறேன்.அதற்கிணங்க, இந்த உன்னதமான மும்மங்கள தினத்தில், முழுச் சமூகமாகப் பொது நலனுக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதியோடு அணிதிரளுமாறு அழைப்பு விடுப்பதுடன், இன்றைய வைகாசி விசாகப் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி உரித்தாகட்டும்...!வைத்தியர் ஜகத் விக்ரமரத்னசபாநாயகர்இலங்கைப் பாராளுமன்றம்






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது. | தனியுரிமைக் கொள்கை

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks