E   |   සි   |  

2025-09-17

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அரசுரிமையை சரியான முறையில் அறவிடாமையால் பல கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு – சரியான பொறிமுறையை தயாரித்து சட்டத்தைத் திருத்துமாறு கோப் குழு அறிவுறுத்தல்

  • கல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட வெடிபொருட்களின் அளவுக்கு ஏற்ப அரசுரிமையைக் கணக்கீடு செய்வது எந்தளவுக்கு நியாயமானது – கேள்வி எழுப்பியது குழு 
  • அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப் பத்திரத்தை வெளியிடுவதில் காணப்படும் பிரச்சினை குறித்தும் அவதானம்
  • திரிவானா மற்றும் பளிங்கு ஏற்றுமதியின் முறைகேடுகள் குறித்தும் அவதானம்

 

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அரசுரிமையை சரியான முறையில் அறவிடாமையால் அரசாங்கத்திற்கு பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்பட்டிருப்பது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) அண்மையில் தெரியவந்தது. 

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (செப். 12) கூடியபோதே இந்த விபரம் வெளியாகியது. 

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்குத்தொடுவாவ தோட்டத்தில் மணல் அகழ்வுக்காக தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கி 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரையில் பணியகத்தினால் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒப்பந்த காரரினால் 36531 முதல் 45561 கியூப் வரையிலான மணலை அகற்றியுள்ளபோதும், 1564 கியூப் மணலுக்கு மாத்திரமே அரசுரிமையாக ரூ.686,464 ரூபா செலுத்தப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். ஜீ.எஸ்.எம்.பி டெக்னிகல் சேர்வயர் (தனியார்) நிறுவனத்தினால் 2024 டிசம்பர் 19ஆம் திகதி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட மணலின் அளவு மதிப்பீட்டு அறிக்கையின்படி இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைய ரூ 12 மில்லியனுக்கும் அதிகமான அரசுரிமை இழக்கப்பட்டிருப்பதாக குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. 

அத்துடன், கருங்கல்லை உடைக்கும்போது கல் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள வெடிபொருட்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு குறித்த கல்குவாரிக்கான அரசுரிமை அறவிடப்படுகின்றமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அகற்றப்படும் கருங்கல்லின் உண்மையான அளவைக் கணக்கிட முடியாது என்றும், இதன் மூலம் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுகிறது என்றும் குழு சுட்டிக்காட்டியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கருங்கல் குவாரிகள் மூலம் கருங்கல் பெரிய அளவில் உடைக்கப்பட்டாலும் அரசுக்கு சிறிய அளவு வருமானம் மட்டுமே கிடைக்கிறது என்பதை குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு அமைய அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது மாத்திரமன்றி, அதனை கண்காணிப்பதற்கு வலுவான பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோப் குழு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளை வலியுறுத்தியது.

கனிம வளங்களை பிரித்தெடுப்பதற்கு முன்னர் ஆய்வு அனுமதிகளை வழங்குவதற்கான பொறிமுறையில் உள்ள கடுமையான குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய அமைப்பின் கீழ் ஆய்வு அனுமதிகளைப் பெறும் பல நிறுவனங்கள் அந்த அனுமதிகளை மற்ற நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், உண்மையில் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் தெரியவந்தது. ஆய்வுக்குப் பின்னர் தரவு பணியகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதன் துல்லியத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 1993 முதல் பணியகம் 450 க்கும் மேற்பட்ட ஆய்வுகளுக்கு  அனுமதிகளை வழங்கியுள்ளது என்றும், அவற்றில் 43 தற்போது செயற்பாட்டில் உள்ளன என்றும் தெரியவந்தது.

இதற்கு அமைய தற்பொழுது காணப்படும் நடைமுறையின் ஊடாக சரியான முறையில் விஞ்ஞான ரீதியான அகழ்வுப் பணிகள் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லையென்றும், இந்நாட்டின் கனிம வளங்கள் குறித்த ஆய்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட பின்னர் அதன் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு முறைமை இல்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி, மேலோட்டமான தீர்வுகளுக்குப் பதிலாக, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு புதிய வழிமுறை மற்றும் மூலோபாயத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று  இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு தொடர்பில் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 5 நிறுவனங்களுக்கு 9 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 10 – 13 வருடங்களுக்கு மேலாக இந்த நிறுவனங்கள் கனிம மணல் உள்ள பகுதிகளைக் கண்டறியாமல் உள்ளமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட இந்த 5 நிறுவனங்களும் அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. ஆய்வுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் நீண்ட காலமாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் குறித்த பகுதியை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், இதனால் கனிமங்களை ஆய்வுசெய்ய விரும்பும் பிற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுவதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக 195 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தடைப்பட்டுள்ளதாகவும், அது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சுரங்கங்கள், கனிப்பொருட்கள் சட்டத்திற்கு அமைய கனிம மணல் ஆய்வுகளின் பின்னர் கனிமம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கின்றபோதும் 2025 ஓகஸ்ட் 11ஆம் திகதியாகும் போது 3150 அனுமதிப்பத்திரங்களுக்கான மறுசீரமைப்புத் தொடர்பில் பணியகம் நடவடிக்கை எடுக்கவில்லையென்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கனிம அகழ்வுக்கு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது புனரமைப்புக்குப் பாதுகாப்புக் கட்டணம் அறவிடப்படுகின்றபோதும்,  புனரமைப்புக்குப் பதிலாக அந்தப் பணத்தை விட்டுக்கொடுப்பது லாபகரமானது என்று சுரங்கத் தொழிலாளர்கள் கருதுவதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாத சுரங்க அனுமதி வைத்திருப்பவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், திரிவானா ஏற்றுமதி குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திரிவாண மற்றும் பளிங்கு (Clear Quartz) சட்டவிரோத கடத்தல் மேற்கொள்ளப்படுவதாகவும், பணியகத்திற்குள் உள்ள சிலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பளிங்குகளின் ஏற்றுமதியை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் கீழ் வைத்திருப்பதன் மூலம் மற்ற திரிவானாக்களை சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கடந்த கால வரலாற்றில் சட்ட விதிகளின்படி சரியான திட்டத்தின்படி செயற்படாத ஒரு நிறுவனம் என்பதை விசாரணைகள் தெளிவாகக் காட்டுகின்றன என்றும் குழு சுட்டிக்காட்டியது. தற்போதுள்ளதை விட அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு பெரிய தேசிய பணியைச் செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக, சரியான தொலைநோக்குடன் கூடிய முறையான திட்டத்தின்படி இந்நிறுவகம் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதன்படி, கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றத்தை கோப் குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹுமான், சமிந்த விஜேசிறி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான மற்றும்  சமிந்த ஹெட்டிஆரச்சி ஆகியோரும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித்த உடுவலவ, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-01

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கைசார் முன்மொழிவுகள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிப்பு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.  ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக  நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.


2026-09-01

கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்படும் “Voice to Policy” நிகழ்ச்சி செப்டெம்பர் 05ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8   என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.


2026-08-21

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான “Voice to Policy” நிகழ்ச்சி ஓகஸ்ட் 29ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின்  இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா  அவர்களும் இதில் கலந்துகொண்டார்.


2026-08-18

உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி

உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks