E   |   සි   |  

2025-02-28

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொரள்ளை மயானத்தின் உத்தியோகபூர்வ விடுதி மற்றும் அதற்கான காணியை 1994 ஆம் ஆண்டு முதல் மோசடியாகப் பயன்படுத்தி கொழும்பு மாநகரசபை ஊழியரொருவர் மலர்ச்சாலையொன்றை நடத்திவந்துள்ளார் – கோபா குழு விசாரணைகளில் தெரியவந்தது

  • சட்டவிரோத மலர்சாலையை தடைசெய்ய குழு அறிவுறுத்தல்
  • போலியான ஆவணங்களைக் காண்பித்து காணியின் உரிமையைப் பெறுவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததுடன், உயிர் அச்சுறுத்தல்கூட ஏற்பட்டது – கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மாநகர ஆணையாளர் விளக்கம்
  • சுற்றுச்சூழல் அறிக்கைகூட இன்றி  மலர்ச்சாலையை எவ்வாறு நடத்திச்செல்லப்படுகின்றது – கோபா குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வி
  • கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் வாகனங்களைத் தரித்து நிறுவத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் வேறு நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளது – கோபா குழுவில் வெளிப்பட்டது


கொழும்பு மாநகரசபைக்குச் சொந்தமான பொரள்ளை மயானத்தின் உத்தியோகபூர்வ விடுதியை மோசடியாகப் பயன்படுத்தி கொழும்பு மாநகரசபையின் ஊழியர் ஒருவர் மலர்சாலையொன்றை நடத்தி வந்தமை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) விசாரணைகளில் தெரியவந்தது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கடந்த பெப்ரவரி 25 மற்றும் 27ஆம் திகதிகளில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் தலைமையில் கூடியபோது இடம்பெற்ற விசாரணைகளிலேயே இந்த விடயம் வெளிப்பட்டது. இந்த இரு தினங்களிலும் கொழும்பு மாநகரசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பொரள்ளை மயானத்திற்குச் சொந்தமான காணியில் அனுமதி பெறப்படாத கட்டடத்தில் சட்டவிரோதமான முறையில் வர்த்தகச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் கொழும்பு மாநகரசபை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென கணக்காய்வாளர் நாயகம் முதலாவது நாளில் சுட்டிக்காட்டினார். 2023.07.06ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குறித்த கட்டடத்தை மீண்டும் கொழும்பு மாநகரசபைக்குப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட அறிவுறுத்தல் உள்ளடங்கலான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய கொழும்பு மாநகரசபையினால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டடத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் முன்னேற்றம் பற்றி எதுவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

மாநகரசபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பொரள்ளை மயானத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ விடுதி மற்றும் அதற்கான காணியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி முன்னெடுத்துவரும் வியாபார நடவடிக்கை குறித்து அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். குறித்த ஊழியர் இதற்கு முன்னர் பணியிடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நபர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த மலர்சாலை கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள மலர்சாலையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார். மலர்சாலையை நடத்திச் செல்வதற்கான அனுமதி பெறப்படாது சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மலர்சாலையாக இருந்தபோதும், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வியாபார நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பதிலளித்தனர். எனினும், சுற்றுச்சூழல் அறிக்கை இன்றி மலர்சாலையை எவ்வாறு நடத்திச் செல்ல முடியும் என குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். எனினும், அவ்வாறு அனுமதி பெறாமல் இயங்க முடியாது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, சட்டவிரோதமாக நடத்திச் செல்லப்படும் இந்த மலர்சாலையைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு குழுவினால் அறிவுறுத்தப்பட்டது.

கோபா குழுவில் ஆஜராகியிருந்த கொழும்பு மாநகரசபையின் அப்போதைய மாநகர ஆணையாளர் குறித்த சட்டவிரோத மலர்சாலை தொடர்பில் தன்னிடமிருந்த தகவல்களை குழுவில் சமர்ப்பித்தார். இந்தத் தகவலின் அடிப்படையில் குறித்த மலர்சாலை 1994ஆம் ஆண்டு முதல் நடத்திவரப்படுகின்றமை புலப்பட்டது. போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து குறித்த மலர்சாலை மற்றும் அதன் காணியின் உரிமையைப் பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட ஊழியர் எடுத்த முயற்சி தோல்வியடைந்திருப்பதாகவும், இது தொடர்பில் தான் மீண்டும் மீண்டும் நடவடிக்கை எடுத்தமையால் உயிர் அச்சுறுத்தலுக்குக் கூட எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் குழுவில் தெரிவித்தார்.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கை பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டது எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் மாநகர ஆணையாளர், 1994 முதல் 2020 வரையான காலப்பகுதியில் குறித்த கட்டடம் மற்றும் காணி மோசடியாகப் பயன்படுத்தப்பட்டமையால் கொழும்பு மாநகரசபைக்கு 41 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன், அரசாங்க ஊழியர் வியாபாரா நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்பதால் அவ்வப்போது குறித்த மலர்ச்சாலையின் பெயரை மோசடியாக மாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். குறித்த மலர்ச்சாலையை நடத்திச்செல்லும் கொழும்பு மாநகரசபை ஊழியர், கொவிட் தொற்றுநோய் காலப் பகுதியில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு 6 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கேட்டமை மற்றும் பொரள்ளை பொது மயானத்தினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டை மோசடியான முறையில் வழங்கியமைக்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்றும் குழுவில் தெரியவந்தது.

நீண்ட காலமாக மேற்கொள்ளப்படும் இந்த மோசடியான நடவடிக்கை தனி ஒரு நபரினால் மாத்திர மேற்கொள்ளக் கூடியது அல்ல என்றும் இதன் பின்னணியில் பல அதிகாரிகள் இருப்பார்கள் என்றும் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனவே பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குழு ஆலோசனை வழங்கியது. இதற்கு அமைய குறித்த நபரினால் அரசாங்க சொத்து மோசடியாக பயன்படுத்தப்பட்டு வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் மேல்மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதேநேரம், சட்டவிரோதமாக நடத்தப்படும் இந்த மலர்ச்சாலை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய முன்னாள் மாநகர ஆணையாளருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்த குழு, இந்தப் பாராட்டு அவரின் தனிப்பட்ட கோப்புக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.

அத்துடன், கொழும்பு மாநகர சபையின் கீழுள்ள வாகனத் தரிப்பிட வாடகை வருமானம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வரையில் வாகனத் தரிப்பிடத்திற்கான  ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய நிலுவைத் தொகை 580 மில்லியன் ரூபாய் என குழுவில் தெரிய வந்தது. எனினும்,  2025 ஆம் ஆண்டுக்கான வாகனத் தரிப்பிட ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும்போது நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய ஒப்பந்ததாரர்களை தெரிவு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலுவைத் தொகையை அறவிடுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினார் மேலும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்தமை கணக்காய்வு அறிக்கையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.  இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு பாரம்பரியமாக அவர்களின் அலுவலகங்களுக்கு அருகில் வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்தனர். அதன்படி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு தரப்பினருக்கு விற்றவர்களிடமிருந்து மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு குழுவின் தலைவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

கொழும்பு மாநகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட smart street lighting  திட்டம் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கொழும்பு மாநகர சபைக்கு எந்தப் பணமும் செலவாகாது என விவரிக்கப்பட்டபோதும், இதனால் கொழும்பு மாநகர சபைக்கு 2.45 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக முன்னாள் ஆணையாளர் குழுவில் தெரிவித்தார். திட்டத்தை நிர்வகித்து வந்த நிறுவனத்தின் சில நிபந்தனைகளுக்கு தான் உடன்படாததால், அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தன்னை மிரட்டி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கருத்தை வெளியிட்டதாக அவர் குழுவின் முன்னிலையில் குறிப்பிட்டார். அந்தக் காலப் பகுதியில் கொழும்பில் உள்ள ஒரு பாதுகாப்பு வலயத்திற்கான வீதி விளக்குகள் குறித்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தமையால் அதைப் பற்றி சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த விடயம் தீவிரமானது என்பதால் உடனடியாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்கு செலுத்தப்பட வேண்டிய வரி வருமான நிலுவைத் தொகை 500 கோடி ரூபாவிற்கு அதிகமாக உள்ளது என கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். கொழும்பு மாநகர சபையின் வரி வருவாயில் ஆண்டுதோறும் அதிகரிப்பு காணப்பட்டாலும், நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான முறையான கட்டமைப்பு இ்லலாமையால், வசூலிக்கப்பட வேண்டிய வரி நிலுவைத் தொகையும் வருடாந்தம் அதிகரித்து வருவதாக  கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலுவைத் தொகை பல வருடங்களாக அதிகரித்து வருவதாகவும், இந்தச் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு வரி செலுத்தப்பட வேண்டிய சொத்துக்கள் சரியான முறையில் அடையாளம் காணப்படுவது அவசியம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த சொத்துக்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், நிலுவைத் தொகையை செலுத்துபவர்கள் மற்றும் அந்தப் பணத்தின் அளவு குறித்து தெளிவான தகவல்கள் பெறப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்த வரி நிலுவையைச் சேகரிப்பதற்கான பொருத்தமான காலக்கெடுவை உள்ளடக்கிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு அமைய அடையாளம் காணப்பட்ட சொத்துக்கள் அமைந்துள்ள கொழும்பு கோட்டை பகுதியில் ஒரு மாதத்திற்குள் நிலுவைத் தொகையை வசூலிக்கும் திட்டத்தைத் தொடங்குமாறு குழு அறிவுறுத்தியது. கொழும்பின் பிற பகுதிகளில் உள்ள சொத்துக்களை அடையாளம் கண்டு, நிலுவையில் உள்ள தொகைகளை உடனடியாக வசூலிப்பதற்கான காலக்கெடுவுடன் கூடிய திட்டமொன்றை அறிக்கையாகத் தயாரித்து ஒரு வாரத்திற்குள் அதனைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

அதேநேரம், கொழும்பு மாநகரசபையின் கீழ் உள்ள தீர்க்கப்படாத காணிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. நில அளவைத் திணைக்களம் மற்றும் வெளித் தரப்பினரின் பங்களிப்புடன், இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளின் விடுவிப்பையும் உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலின் ஹேவகே, அன்டன் ஜயக்கொடி, சுகத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன்திலக ஜயக்கொடி,  சந்தன சூரியாராச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுட, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரட்ண, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, தினிந்து சமன், லால் பிரேமநாத் ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-04

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், கணக்காய்வு செயன்முறையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுதல், திறமையான மனித வளத்தைத் தக்கவைத்தல் மற்றும் அரச நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் முன்னெடுத்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த  சில்வா அவர்கள் கலந்துகொள்ள முடியாதமை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக அச்சந்தர்ப்பத்தில் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின்போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், இணையவழி முறையின் ஊடாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க  கலந்துகொண்டார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்கதாகவும் தரமானதாகவும் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை பரவலாகப் பயன்படுத்துவதன் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.கணக்காய்வு செயன்முறையை தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைப்பதன் மூலம் கணக்காய்வு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதுடன், அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் மேலும் விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும் என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும், கணக்காய்வுச் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் திறமையான அதிகாரிகள் பயிற்சிக்குப் பின்னர் வேறு துறைகளுக்குச் செல்வதன் காரணமாக ஏற்படும் மனித வளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பிரச்சினை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.திறமையான கணக்காய்வு அதிகாரிகளை சேவையில் தக்கவைத்துக்கொள்வதற்காக பொருத்தமான கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், அரச நிறுவனங்களின் உள்நாட்டுக் கட்டுப்பாட்டு முறைமைகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றைத் திருத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் பொறுப்பு எனவும் வலியுறுத்தப்பட்டது.சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வின்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் கணக்காய்வு செய்வதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.கணக்காய்வு செயன்முறையை நவீனமயமாக்கும்போது தெளிவான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமொன்றைத் தயாரித்து, பணியாளர் தேவைகள் மற்றும் வளங்களை மிகவும் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தையும் குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.இதனிடையே, பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அதன் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தல் மற்றும் புலனாய்வு செய்தல், அத்துடன் சட்ட மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கான ஆணைக்குழுவின் பொறுப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஆணைக்குழுவை முழுமையான செயற்பாட்டு மட்டத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள், பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சட்டத்திற்கு அமைவாக குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்பதால், அந்த உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முழுநேர உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குழுவினால் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.


2026-09-04

2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான ரூ. 7.5 பில்லியன் கொண்ட குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

2026 ஆண்டு சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 7.5 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல் கொள்வனவை துரிதப்படுத்துவது இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.இதன்போது, நெல் கொள்வனவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை இணைத்துக்கொள்ளுதல், நெல் விலை மற்றும் சந்தை முகாமைத்துவம், போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நெல் விவசாயிகளைப் பாதுகாப்பதுடன், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்காக நீண்டகால தேசியக் கொள்கையொன்றின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இதனிடையே, இலங்கை சுங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. ASYCUDA முறைமையை மேலும் நவீனமயப்படுத்தி, தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கான காகிதமற்ற சுங்கச் செயன்முறையை 2026 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய ஒற்றை வர்த்தகச் சாளரம் (Trade National Single Window) ஊடாக சுங்கத் திணைக்களத்திற்கும் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.ASYCUDA முறைமையில் தேவையான வசதிகள் காணப்பட்டாலும், ஏனைய அரச நிறுவனங்களில் இதற்கு ஒத்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முறைமைகள் இல்லாத காரணத்தினால், அனைத்து நிறுவனங்களையும் தேசிய ஒற்றை வர்த்தகச் சாளரத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.அத்துடன், பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் முன்பணக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெறும் நிதி முறைகேடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இத்தகைய முறைகேடுகளைத் தடுப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கண்காணிப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.


2026-09-03

இலங்கை சுங்கத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை மீளாய்வு செய்த பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு

பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்தது. குறித்த குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், 2026 ஜூன் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,060,559 மில்லியன் ரூபாய் எனவும், அந்தக் காலப்பகுதிக்குள் 1,379,084 மில்லியன் ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இது சதவீத அடிப்படையில் 130% முன்னேற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டது.இதற்கமைய, இவ்வாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் எதிர்பார்க்கப்பட்ட வருவாயைக் காட்டிலும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் அதிகளவான முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தரவுகளுடன் தெரிவித்தனர்.2026 ஜூன் 30ஆம் திகதி வரையில் 316,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 512,547 மில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பான விடயங்களை முன்வைத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான 386,726 மில்லியன் ரூபாய் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது. அத்துடன், அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை 1,000cc இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளதுடன், அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96% ஆகும்.மேலும், இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை மற்றும் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விதம், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருவாய் நிர்வாகத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-03

இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனம்

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல் மற்றும் பொலிஸ் சேவையின் செயல்திறனை மேம்படுத்துதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, அதன் தலைவர் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் கடந்த ஆக. 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதில் இணையக் குற்றங்கள், சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. சட்டவிரோத சூதாட்டம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையத்தளங்களைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இணையக் குற்றங்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, குறித்த வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இணையக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அறிவைக் கொண்ட மனித வளத்தை வலுப்படுத்துவதற்காக மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளைப் பணியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு களப் பயிற்சியுடன் தேவையான வெளிநாட்டுப் பயிற்சிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், இணையக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக புதிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் உடனடியாகச் செயற்படுத்தக்கூடிய மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பொன்றை நிறுவுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, கிரிப்டோ நாணயப் பயன்பாடு தொடர்பான குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுடன் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும்போது காணப்படும் தடைகளை குறைப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்கள் தொடர்பான தற்போதைய நிலைமை, அக்குழுக்கள் ஊடாக கிடைக்கப்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் வெளியில் கசியாமல் தடுப்பது மற்றும் சமூக பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதற்கு மேலதிகமாக, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பொலிஸ் விசாரணைகளைத் துரிதப்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் ஆதரவை மேலும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks