பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-09-04
2026 ஆண்டு சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 7.5 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல் கொள்வனவை துரிதப்படுத்துவது இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
இதன்போது, நெல் கொள்வனவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை இணைத்துக்கொள்ளுதல், நெல் விலை மற்றும் சந்தை முகாமைத்துவம், போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நெல் விவசாயிகளைப் பாதுகாப்பதுடன், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்காக நீண்டகால தேசியக் கொள்கையொன்றின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே, இலங்கை சுங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. ASYCUDA முறைமையை மேலும் நவீனமயப்படுத்தி, தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கான காகிதமற்ற சுங்கச் செயன்முறையை 2026 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய ஒற்றை வர்த்தகச் சாளரம் (Trade National Single Window) ஊடாக சுங்கத் திணைக்களத்திற்கும் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ASYCUDA முறைமையில் தேவையான வசதிகள் காணப்பட்டாலும், ஏனைய அரச நிறுவனங்களில் இதற்கு ஒத்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முறைமைகள் இல்லாத காரணத்தினால், அனைத்து நிறுவனங்களையும் தேசிய ஒற்றை வர்த்தகச் சாளரத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
அத்துடன், பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் முன்பணக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெறும் நிதி முறைகேடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இத்தகைய முறைகேடுகளைத் தடுப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கண்காணிப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
2026-11-13
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இச்சட்டமூலம் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. வெளிநாட்டு பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இச்சட்டமூலத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.இலங்கை பிரஜையொருவர் அல்லது இலங்கை பிரஜை அல்லாத வேறொரு நாட்டின் பிரஜை ஒருவர் இலங்கையில் சமுகமாயிருக்கையில், அல்லது இலங்கைக்கு வெளியே தவறிழைத்திருந்து அது அந்நாட்டின் சட்டத்தின் கீழ் தவறொன்றாக இருப்பின் இச்சட்டத்தின் கீழ் இலங்கையில் நடவடிக்கை எடுக்க முடியும். பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளல், திட்டமிடுதல், தயார்செய்தல் அல்லது அதில் பங்குபற்றுதல், பயங்கரவாத பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெறுதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தவறுகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை இன ரீதியாக இலக்குவைத்து கொண்டுவரப்படும் சட்ட ஏற்பாடு இல்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து குறித்த சட்டமூலத்திற்கு குழு அங்கீகாரம் வழங்கியது. குழுவின் உறுப்பினரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இச்சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பினைப் பதிவுசெய்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுரங்க ரத்னாயக்க, திலின சமரக்கோன், விஜேசிறி பஸ்நாயக்க, சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டோரும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-11-13
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் விரிவாக ஆராயப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது.அதிபர் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள், முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையில் 2014 ஒக்டோபர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம், ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவது பதவி உயர்வாகக் கருதப்படாமல் “புதிய நியமனம்” எனக் கருதப்படுவதன் காரணமாக சம்பள முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக அதிபர் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திலிருந்து அதிபர் சேவையின் IIIஆம் தரத்திற்கு நியமிக்கப்படும்போது, சம்பள அதிகரிப்புகளுக்கு இடையிலான பாரிய வேறுபாடு காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைவதாக அவர்கள் குறிப்பிட்டார். அத்துடன், 03/2014 சுற்றறிக்கையின் மூலம் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள வேறுபாட்டை ஈடுசெய்வதற்காக சரிசெய்தல் கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், சேவைக்காலம் அதிகரிக்கும்போது ஆசிரியர் சேவையில் தொடர்ந்திருந்தால் கிடைக்கக்கூடிய உயர்ந்த சம்பள அதிகரிப்புகள் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சம்பள இடைவெளி ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.இதன் காரணமாக ஆசிரியர் சேவையின் முதலாம் மற்றும் 2-Iஆம் தரங்களில் உள்ள சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அதிபர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அதிபர் சேவையில் இணைவதற்கும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இது விடயம் தொடர்பில் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து சம்பள ஆணைக்குழுவுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அது மாத்திரமன்றி, அதிபர் சேவையில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் உபகுழு இங்கு தீர்மானித்தது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, சுகத் வசந்த.த சில்வா மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-12
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறைகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், நிலவும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆராச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 06) பாராளுமன்றத்தில் கூடிய இக்குழுக் கூட்டத்தில், 2026ஆம் ஆண்டுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.இதன்போது, பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கல்விச் சீர்திருத்தங்கள், பாடநூல்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பாடசாலை மாணவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் ஆசிரியர் கல்வியின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், குறித்த அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைகளிலான தாமதங்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்திறன், பரீட்சைகளை நடத்துதல், பாடநூல்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகிப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன. விசேட தேவையுடைய சிறுவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.மேலும், பாடசாலை மாணவர்களின் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சீருடைகளை விநியோகித்தல் மற்றும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. புலமைப்பரிசில் கொடுப்பனவுகளைத் துரிதப்படுத்துவதற்காக புதிய கணினி முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதன் ஊடாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை வைப்பிலிடுவதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர்.உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறைகளுடன் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள், இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட்டன.இதன்போது, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தமது நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். குறித்த அறிக்கைகளை உரிய காலத்தில் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.மேலும், வருட இறுதியில் மாத்திரமன்றி, வருடத்தின் இடைப்பட்ட காலத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அழைத்து, அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் குழு தீர்மானித்தது.அத்துடன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-12
மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றின் மின்கலத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், அரச ஆராய்ச்சி நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்கங்களை வணிகமயமாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்தில், 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை, 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர்கள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.இதன்போது, இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திடம் காணப்படும் மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலங்களைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மின்கலங்களின் கொள்ளளவு, நீடித்துழைக்கும் தன்மை மற்றும் ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைப் பரிசோதிக்கும் ஆற்றல் இந்நிறுவனத்திடம் காணப்படுவதாகத் தெரியவந்தது.எனினும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள், மின்கலங்கள், கட்டுப்படுத்திகள் (Controllers) மற்றும் மின்னேற்ற நிலையங்கள் ஆகியவற்றுக்கான கட்டாய ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகள் இல்லாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, உரிய தரநிலைகளைத் தயாரித்து, அவற்றைப் பரிசோதித்தல் மற்றும் சான்றளித்தல் ஆகியவற்றைக் கட்டாயமாக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தினர்.பாரம்பரிய எரிபொருள் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம், பயிற்சித் திட்டங்கள் மற்றும் அவ்வாறு மாற்றியமைக்கப்படும் வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பான தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளைத் தயாரிப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் தகைமையுடைய பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பொருத்தமான சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையொன்றின் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அரச ஆராய்ச்சி நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துதல், நிலவும் குறைபாடுகளைக் குறைத்தல், ஆராய்ச்சி முடிவுகளைப் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஒரேவிதமான பணிகளை முன்னெடுக்கும் நிறுவனங்களை ஒன்றிணைத்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அதிகாரிகள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இலங்கை புத்தாக்குனர்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான மின்சார வேலித் திட்டங்கள், பல்கலைக்கழகங்களை மையமாகக் கொண்ட புத்தாக்க விருத்தி மையங்கள் (Incubation Centers) மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஊடாக புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.நடைமுறைப்படுத்தப்பட்ட நான்கு மின்சார வேலித் திட்டங்களில் மூன்று வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர்.மேலும், புத்தாக்குனர்களின் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாத்தல் மற்றும் புத்தாக்கங்களை வணிகமயமாக்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 'சிறிய காப்புரிமைகள்' (Petty Patents) முறையை அறிமுகப்படுத்துவதற்காக அறிவுசார் சொத்துச் சட்டத்தைத் திருத்துவதற்கான முன்மொழிவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, சதுர கலப்பத்தி, தனுர திசாநாயக்க, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோருடன் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks