logo

E   |   සි   |  

2023-12-04

செய்தி வகைகள் : செய்திகள் 

பாடசாலை தரங்களை 13 இலிருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிவு – உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவிப்பு

  • ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மட்டத்திலான மதிப்பீட்டில் குறிப்பிட்ட சதவீதத்தையும், பரீட்சையின் மூலம்  குறிப்பிட்ட சதவீதத்தையும் புள்ளியாக வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதுடன், புலமைப்பரிசில் பரீட்சையின் போட்டித்தன்மையைக் குறைப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது
  • சாதாரண தரத்தை 10வது தரத்திலும், உயர் தரத்தை 12வது தரத்திலும் அதாவது 17 வயதில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்ய சகல மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க முன்மொழிவு
  • சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களை 9 இலிருந்து 7ஆகக் குறைப்பதற்கும், தரம் 9 மற்றும் தரம் 10ல் மேலதிகப் பாடங்களை கட்டாயப்படுத்தவும் யோசனை


பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2023.12.01ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு வயதில் முன்பள்ளியும், ஆரம்பப் பிரிவு 1 முதல் 5ஆம் தரம் வரையிலும், கனிஷ்ட பிரிவு தரம் 6 முதல் தரம் 8 வரையிலும், சிரேஷ்ட பிரிவு தரம் 9 முதல் தரம் 12 வரையிலும் வகைப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பாடசாலை அடிப்படையிலான மதிப்பீட்டிற்கு குறிப்பிட்ட சதவீதத்தையும், பரீட்சையின் ஊடாகக் குறிப்பிட்ட சதவீதத்தை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்கி போட்டியை நீக்குவதற்கும் கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது.

மேலும், உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், 10ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது. சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 7 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 7 பாடங்களில், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT), தொழில்நுட்ப மற்றும் துறைசார் திறன்கள், மத மற்றும் விழுமியங்கள் போன்ற புதிய மூன்று பாடங்களை மேலதிக பாடங்களாகக் கற்பது கட்டாயப்படுத்தப்படவிருப்பது பற்றிய முன்மொழிவும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

ஒரு வருடத்தில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட (80,000) மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாததைச் சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சின் அதிகாரிகள், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் எந்தவொரு பிள்ளையும் சித்தியடையாத நிலையில் இருக்கமாட்டார்கள் என்றும், சாதாரணதரப் பரீட்சைக்கு முகங்கொடுத்த சகல பிள்ளைகளும் தொழிற்பயிற்சிப் பாடநெறியைக் கற்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதற்காக உயர்தரப் பாடங்கள் கல்விப் படிப்பு, தொழில்சார் படிப்பு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாணவரும் பட்டம் பெறுவதற்கான  பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. கல்விப் படிப்புக்களின் கீழ் தற்பொழுது காணப்படும் 6 பாடங்கள் 8 பாடங்களாக அதிகரிக்கப்பட்டு புதிய இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. அத்துடன், நடைமுறைக் கற்கைகளின் கீழ் 10 பாடப்பிரிவுகள் மூலம் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதாகவும், அதன் மூலம் பட்டம் சாராத துறைகளில் சென்று பட்டம் பெறும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றக்கொள்வார்கள் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

கல்விச் சேவையிலும் நிர்வாக மறுசீரமைப்பு இடம்பெற்று வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியது. தற்போதுள்ள கல்வி வலயங்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 122 ஆக அதிகரிக்கும் மற்றும் மொத்த எண்ணிக்கையான பத்தாயிரத்து நூற்று இருபத்தி ஆறு (10,126) பாடசாலைகள், ஆயிரத்து இருநூற்றி இருபது (1220) கொத்தணிப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும். தற்போதுள்ள அனைத்து தேசியப் பாடசாலைகளும் மாகாண மட்டத்தில் முதன்மைப் பாடசாலைகளாக கொத்தணிகளின் முதன்மைப் பாடசாலைகளாக இருக்கும்.

2024ஆம் ஆண்டுக்கான இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு 517.05 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபாவும், பாடசாலை சீருடைக்காக ஆறு மில்லியன் ரூபாவும், ஏழு இலட்சத்து இருபத்தி எட்டாயிரத்து நானூற்று எண்பது (728,480) பாடசாலை மாணவர்களுக்குக் காலணிகளை வழங்குவதற்கு இரண்டாயிரத்து ஐநூறு மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏறத்தாள 1.07 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்குத் தற்போது மதிய உணவு வழங்கப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் மாணவர்களுக்கு உணவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த குமார், கௌரவ அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் கல்வித்துறை பேராசிரியர் குணபால நாணயக்கார மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2026-08-18

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

விலங்குகள் (திருத்தம்) மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (18) சான்றுரைப்படுத்தினார்.1958ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விலங்குகள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் 2026.07.21 திகதியன்று முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 2026.08.06 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பிரதான சட்டத்தின் 38ஆம் பிரிவில் “விலங்கு” என்ற சொல்லுக்கான சட்டரீதியான வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். மேலும், “ஒரு விலங்கு” என்பதற்கான வரைவிலக்கணத்தை மீள வரையறுப்பதன் மூலம், ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகள் இந்தச் சட்டத்தின் IIஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், சட்டத்தின் IVஆம் பகுதிக்குப் பொருந்தும் வகையில் செம்மறியாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் உள்ளடங்கும் வகையில் வரைவிலக்கணங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைமச்சரினால் 2026.07.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026.08.06ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தத் திருத்தத்தின் மூலம், 1974ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் நவீனமயப்படுத்தப்பட்டு, நீர் வழங்கல், வடிகால் சேவைகளை வழங்குவது தொடர்பான சபையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் வலுப்படுத்தப்படுகின்றன.கைத்தொழில் பேட்டைகள், கைத்தொழில் பூங்காக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுக்கான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ சேவைகளையும் சபையின் பொறுப்புகளுக்குள் உள்ளடக்கும் வகையில் அதன் பொறுப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், மிகவும் பயனுள்ளதும் நிலையானதுமான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ஊழியர் காப்புறுதித் திட்டங்கள், தொழில்நுட்ப சேவைகள், பயிற்சி சேவைகள், ஆய்வக சேவைகள் மற்றும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் இந்தத் திருத்தத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, விலங்குகள் (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விலங்குகள் (திருத்தம்) சட்டமாகவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமாகவும் நடைமுறைக்கு வருகின்றன.


2026-08-18

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில்

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று (ஆக. 18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.முதலாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்  குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இதற்கு அமைய, இந்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்கும் வகையில் அமைந்துள்ளதா என்பதை சவாலுக்கு உட்படுத்த எவராவது விரும்பினால், இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடியும்.அவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் குறித்த விடயத்தை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தி 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.அத்துடன், நீதித்துறை (திருத்த) சட்டமூலம் (1978ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நீதித்துறைசட் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்) முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் ஊடாக மேல் நீதிமன்ற, மஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட ஏனைய அனைத்து நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பதற்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


2026-08-17

சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில், இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்றத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி ஒன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதன்போது, சட்டவாக்கச் செயன்முறை, பாராளுமன்ற சம்பிரதாயங்கள் உள்ளிட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கேள்வி – பதில் அமர்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் பாராளுமன்ற சபா மண்டபம் உள்ளிட்ட பாராளுமன்ற வளாகத்தை பார்வையிடும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பணிப்பாளர் (சட்டவாக்கச் சேவைகள்) எம். ஜயலத் பெரேரா, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) காஞ்சன ஹேரத் மற்றும் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சாந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-08-14

பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் 2026-ஆம் ஆண்டின் சிறந்த இணையதளத்திற்கான வெள்ளி விருதை வென்றது

அரச துறையில் சிறந்த இணையதளமாகவும்  பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தங்க விருது வென்றதுஇலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.parliament.lk, அண்மையில் நடைபெற்ற "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழாவில் 'சிறந்த இணையத்தளத்திற்கான' (Best Website Overall) ஒட்டுமொத்தப் பிரிவில் வெள்ளி விருதை (Silver Award) வென்றுள்ளது.அத்துடன், 'சிறந்த அரச இணையத்தளம்' (Best Government Website) பிரிவில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தங்க விருதை (Gold Award) வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.LK டொமைன் பதிவகத்தினால் (LK Domain Registry) ஏற்பாடு செய்யப்பட்ட "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழா, 2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் அமைந்துள்ள 'மொனார்க் இம்பீரியல்' (Monarch Imperial) மண்டபத்தில் நடைபெற்றது.இவ்வாண்டு 24 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 350க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் போட்டியில் பங்கேற்றன. தொழில்நுட்ப அமுலாக்கம், செயல்திறன், வடிவமைப்பு, உள்ளடக்கம், பாதுகாப்பு மற்றும் ஏனைய மேலதிக அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இணையத்தளங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இதற்கு முன்னரும் BestWeb.lk போட்டியில் பல சந்தர்ப்பங்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. நவீனமயப்படுத்தப்பட்ட புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு வருட இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு மீண்டும் இப்போட்டியில் பாராளுமன்ற இணையத்தளம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.இந்த விருது விழாவில் பல முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இணையத்தளங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதமரின் செயலாளர் திரு. ஜீ. பிரதீப் சபுதந்திரி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.இந்த அங்கீகாரம், பாராளுமன்றம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அணுகக்கூடிய, நம்பகமான மற்றும் பயனருக்கு எளிதான வகையில் பாராளுமன்றத் தகவல்களை வழங்குவதற்கும், தனது டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்துவதற்கும் உள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுகின்றது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks