2022-07-07
தரவுகளை ஆராயும்போது பெற்றோல் மற்றும் டீசலை ஏறத்தாழ 250 ரூபா விலைக்கு இலங்கைக்குள் விற்பனை செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்தார்.
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 2018, 2019 வருடங்களக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பேராசிரியர் கௌரவ சரித ஹேரத் தலைமையில் நேற்றுக் (06) கூடியபோதே அவர் தனது தனிப்பட்ட கருத்தை முன்வைத்தார்.
எரிபொருள் கொள்வனவின் போது அவற்றின் இறக்குமதிக்கான செலவு மற்றும் அரசாங்கம் அறவிடும் வரித் தொகை தொடர்பான புள்ளிவிபரங்களை சரியான முறையில் ஆராயும்போது இது தொடர்பான விபரங்கள் தெரியவருவதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். இதற்கமைய பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை தற்போதைய விலையைவிட 200 ரூபா குறைவாக விற்பனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார். எனவே, ஏறத்தாழ 250 ரூபாவிற்கு பெற்றோல் மற்றும் டீசலை இந்நாட்டுக்குள் விற்பனை செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஜூலை முதலாம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட டீசலில் ஒரு லீட்டருக்கு 280 ரூபாவை அரசாங்கம் வரியாக அறவிட்டிருப்பதாகவும் கூறினார்.
இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னர் தான் இந்தக் கருத்தை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அறிந்துள்ளனரா என கோப் குழுவின் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். எனினும், தாம் இது பற்றி அறிந்திருக்கவில்லையென பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் பதிலளித்தனர். அதேநேரம், நிதி அமைச்சுக்கும் இதுபற்றி உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லையென்றும் இங்கு தெரியவந்தது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு அவருக்குக் காணப்படும் தகுதிகள் குறித்தும் கோப் குழுவின் உறுப்பினர்கள் ரத்னாயக்கவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர். கல்வித் தகைமையாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அரசாங்க நிர்வாகம் குறித்த விசேட பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் காணப்படுவதாக அவர் பதிலளித்தார். மேலும் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தான் கற்றிருப்பதாகவும் கூறினார். அதேநேரம், தனது அரசியல் தகுதியாக 2005ஆம் ஆண்டு முதல் அரசாங்கங்கள் அமைப்பதற்கு ராஜபக்ஷக்களுக்கு விசேடமாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் ரத்னாயக்க தனது பதிலில் குறிப்பிட்டார்.
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் கூறிய இந்தக் கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை என்றும், இது நாட்டின் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே, இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்திவலு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை அழைத்து எதிர்காலத்தில் விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் 2021 டிசம்பர் 07ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு எவ்வித ஒப்பந்தங்களும் செய்து கொள்ளாமல் 2005ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பென்ஸ் ரக வாகனத்தை ஜெனரல் பிஸ்னஸ் (தனியார்) நிறுவனம் என்ற நிறுவனத்திடமிருந்து எரிபொருள் அல்லது சாரதி இன்றி மாதாந்த வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய இந்த வாகனத்துக்காக வருடாந்த வாடகையாக 4,500,000 ரூபாவாக அமைந்திருப்பதுடன், 2022 மே 31ஆம் திகதி குறித்த நிறுவனத்துக்கு 2,187,500 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த வாகனத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பான ஆவணங்கள் கணக்காய்வுக்காக வழங்கப்படாமை, 15 வருடங்கள் பழமையான வாகனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பணிப்புரை வழங்கப்பட்டமை, இதனைப் பெறுவதற்கான விலைமனுக் கோரலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை, இந்த வாகனத்துக்கான வாடகைப் பணம் செலுத்தும்போதான வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள் குறித்தும் கோப் குழுவில் வினவப்பட்டன. குறிப்பாக, இந்த நிறுவனத்திற்குப் பணம் வழங்குவதற்கான ஒப்புதலில் கையெழுத்திடும் அதிகாரி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோப் குழு அறிவுறுத்தியது.
இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மேலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன அமைப்பு மற்றும் சம்பளக் கட்டமைப்பு என்பன தேசிய சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், நிதி அமைச்சின் ஊடாக அமைச்சரவைக்குத் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவை அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனுமதி பெறப்படாது சில செயற்பாடுகளுக்கு செலவு செய்யப்பட்டமை குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
விசேடமாக, நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 11 வகைான கொடுப்பனவுகளின் கீழ் 45,873,483 ரூபா வழங்கப்பட்டிருப்பதுடன், மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளுக்காக முழுமையான நடவடிக்கைக்கான தொகையான 86,808,538 ரூபாவில் அதாவது, மொத்தத் தொகையில் 49 வீதம் செலவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.
மேலும், மின்சாரத் துறையில் வினைத்திறன், அவசியம், கேள்விக்கான மாற்றங்கள் போன்றவற்றைக் கண்காணித்து அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவது மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை மின்சார சபை நாளாந்தம் வழங்க வேண்டிய விநியோகச் சுருக்கம், உண்மையான விநியோகம் மற்றும் தினசரி விநியோக அட்டவணை 2018 மே மாதம் முதல் 2019 டிசம்பர் மாதம் வரை ஆணைக்குழுவுக்கு வழங்கப்படாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, 2018-2037ஆம் ஆண்டுக்கான மின்சார உற்பத்தித் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், 2021ஆம் ஆண்டு மற்றுமொரு புதிய மின் உற்பத்தித் திட்டத்தின் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது உரிய தேவைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அரசியல் அதிகாரம் மாற்றமடையும்போது இத்திட்டங்களும் மாற்றப்படுவதாலேயே பிரச்சினைகள் ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோப் குழு வலியுறுத்தியது.
மேலும், 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்சாரம் (விநியோகம்) செயல்திறன் தரநிலை ஒழுங்கு விதிகளின் கீழ், செயல்திறன் விதிகளைத் தயாரித்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் 36 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டிய பணிகள் ஏறத்தாழ 4 ஆண்டுகள் கடந்தும், 2018ல் முடிக்க திட்டமிடப்பட்ட கூட்டிணைத்தல் கட்டம் கூட இதுவரை பூர்த்திசெய்யப்படாமை குறித்து குழு கவனம் செலுத்தியது. இதனை 3 வருடங்களில் 3 கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாகவும், முறைமையை மாற்ற வேண்டிய தேவையாலும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளாலும் இதுவரை அது நடைபெறவில்லை எனவும் வருகை தந்திருந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இக்கூட்டத்தில், அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-10-01
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுப்புச் சட்டத்தை மேலும் பயனுள்ள வகையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கலந்துகொள்ளாத காரணத்தினால், ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களான சட்டத்தரணி சமிந்திராணி கிரிஎல்ல மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.குடும்ப வன்முறையைத் தடுப்பதும், அதன் காரணமாகப் பாதிக்கப்படும் நபர்களுக்கு துரிதமான சட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதும் இச்சட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்தச் சட்டத்திற்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டு மன்றம் பல்வேறு முன்மொழிவுகளை இதன்போது முன்வைத்தது.வன்முறைக்கு உள்ளாகும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நபர்கள் மற்றும் அதிகாரிகளின் வரம்பை விரிவுபடுத்துதல், விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிமைப்படுத்துதல், இடைக்காலப் பாதுகாப்புக் கட்டளைகளை மேலும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புக் கட்டளைகள் தொடர்பான பின்தொடர் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.அத்துடன், சட்டவாக்கத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களின் உண்மையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் அவசியம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.மேலும், கிரிசாலிஸ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் பெண்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வொன்று நடத்தப்பட்டது. பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு அப்பால் சென்று, கொள்கை வகுத்தல் உள்ளிட்ட தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்களின் பங்கேற்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.உள்நாட்டு வன்முறைக்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்டப் பாதுகாப்பு வழிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பெண்களின் உரிமைகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-30
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரியவந்தது.புதிய கிரிக்கெட் நிர்வாகக் கட்டமைப்பில் சுயாதீன பணிப்பாளர்களை உள்ளடக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், புதிய சட்ட ஏற்பாடுகளின் கீழ் மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் நேரடியாக முடிவுகளை மேற்கொள்ளாது எனவும், குறித்த சங்கங்கள் மாகாண கிரிக்கெட் சங்கங்கள் ஊடாக செயற்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது.பாடசாலை கிரிக்கெட்டுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வருடாந்தம் 900 மில்லியன் ரூபா நிதியும் உபகரணங்களும் வழங்கப்படுவதாகவும், பயிற்றுநர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வீரர்களைத் தெரிவுசெய்யும் நடைமுறையை முறையாக முன்னெடுப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குழுவில் தெரியவந்தது.அத்துடன், விளையாட்டுச் சங்கங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், 33 விளையாட்டுச் சங்கங்கள் குறித்த பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகவும், மேலும் 33 சங்கங்கள் தொடர்பில் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது.பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் நடைபாதைகள் மற்றும் விளையாட்டு வளாகங்களிலிருந்து கட்டணம் அறவிடுவதை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், விளையாட்டுத்துறையை இலாபம் ஈட்டும் வணிகமாகக் கருதாது, தேசிய சுகாதாரம் மற்றும் சமூக நலனுக்கான அரசாங்கத்தின் பொறுப்பாக முன்னெடுக்க வேண்டும் என்பதே அமைச்சின் கொள்கையாகும் எனவும் வலியுறுத்தப்பட்டது.ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு செயற்கை ஓடுபாதையை (Synthetic Track) வழங்கும் திட்டத்தின் கீழ் அடுத்த செயற்கை ஓடுபாதை அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாடளாவிய ரீதியில் இரண்டு செயற்கை ஓடுபாதைகள் மாத்திரமே காணப்படுவதாகவும் குழுவில் குறிப்பிடப்பட்டது.அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்தல், மட்டக்களப்பில் அமைந்துள்ள வெபர் விளையாட்டரங்கம் மற்றும் ஹிங்குராங்கொட விளையாட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்தல், பதுளை – ஹாலிஎல பகுதியில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் களுத்துறை – பண்டாரகம பொது விளையாட்டரங்கில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.மேலும், சர்வதேசப் போட்டிகளுக்காக அரசாங்க நிதி ஒதுக்கீடு செய்யும்போது, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகபூர்வ தேசிய அணிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டித் தொடர்களுக்கும் மாத்திரமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், தேசிய அணிகளைத் தெரிவுசெய்தல் மற்றும் வெளிநாட்டுப் போட்டிகளுக்கு அணிகளை அனுப்புதல் ஆகியவற்றின்போது எந்தவொரு இனத்தையோ அல்லது பிரதேசத்தையோ அடிப்படையாகக் கொண்டு எவ்வித பாகுபாடும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மாற்றுக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-09-30
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உப குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க அவர்கள் தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது.உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியதுடன், இத்திட்டத்தின் முன்னேற்றங்கள் அடங்கிய விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. பாடசாலைகளில் காணப்படும் சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளுக்கான தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றும், குறிப்பாக குடிநீரின் தரத்தை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.அதேநேரம், பாடசாலைகளுக்கான தொலைத்தொடர்புகளை வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் மாதிரி முன்பள்ளிகளை அமைப்பதற்கான திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு விரிவாகக் கேட்டறிந்துகொண்டது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எம்.சமந்த ரணசிங்ஹ, பத்மசிறி பண்டார ஆகியோரும், கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-09-30
2026ஆம் ஆண்டின் 01ஆம் மற்றும் 02ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதி மற்றும் வெளிநாட்டு சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான கட்டளை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து குறித்த ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டளைகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், வெளிநாட்டு முதலீடுகள், புலம்பெயர்ந்தவர்கள் தமது நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுதல் மற்றும் வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன், சம்பிக ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி மற்றும் அதன் வெளிநாட்டு செலாவணித் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இங்கு, 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகளின் கீழ் இலங்கையில் வசிப்பவர்களால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்பில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள தகுதியுடைய நபர்கள், முதலீடு செய்யக்கூடிய துறைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு மூலதனத்தை மாற்றும்போது பொருந்தும் வரம்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்குத் தேவையான நிதி வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகள் தொடர்பில், புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் உள்ள தமது சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்றும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அதற்குப் பொருந்தும் வரம்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, புலம்பெயர்ந்தோர் கொடுப்பனவு ஊடாக மூலதனத்தை வெளிநாடுகளுக்கு மாற்றுதல் மற்றும் வாடகை வருமானம், வட்டி மற்றும் இலாபப் பங்குகள் போன்ற நடப்பு வருமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல் தொடர்பில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகள் குறித்தும் குழுவில் விளக்கமளிக்கப்பட்டது.அத்துடன், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள தற்காலிக வரம்புகள் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர்.பொருளாதார நிலைமை மேம்படுவதுடன், குறித்த வரம்புகளைப் படிப்படியாகத் தளர்த்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் குழுவிடம் மேலும் தெரிவித்தனர்.ஏற்றுமதியாளர்கள் முந்தைய ஆண்டில் நாட்டிற்கு கொண்டுவந்த ஏற்றுமதி வருமானம் மற்றும் அந்த வருமானத்தின் ஒரு பகுதியை வெளிநாடுகளில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டு வர்த்தகர்களுக்கு சர்வதேச சந்தையில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.மேலும், வெளிநாட்டு செலாவணி சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளியேறுவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மற்றும் அதற்காக நடைமுறையில் உள்ள கண்காணிப்பு முறைகள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வங்கித் தரவுகள் மற்றும் சுங்கத் தரவுகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அத்துடன் வெளிநாட்டு செலாவணி முறைகேடுகளைத் தடுப்பதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், உள்நாட்டு கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் வர்த்தக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும்போது தேவையான வங்கி உத்தரவாதங்கள் மற்றும் ஏனைய நிதி வசதிகள் தொடர்பில் நிலவும் வரம்புகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலின்போது, விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பிலும் குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையும் வகையில் தேவையற்ற ஒழுங்குவிதிகளை விதிப்பதன் மூலம் வர்த்தகர்களை ஊக்கமிழக்கச் செய்யும் அபாயம் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதன் காரணமாக நாட்டிற்குள் வரும் வெளிநாட்டு செலாவணியின் அளவும் குறையக்கூடும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.ஒழுங்குவிதிகளில் அமெரிக்க டொலர் 2 மில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கட்டளையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக அந்தத் தொகை அமெரிக்க டொலர் 0.75 மில்லியன் என குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பிலும் குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வெளிநாட்டு செலாவணித் திணைக்கள அதிகாரிகள், அமெரிக்க டொலர் 0.75 மில்லியன் என்ற வரம்பு சுமார் 6 மாத காலத்திற்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கும் எனவும், 2027 ஆம் ஆண்டில் அதனைத் தளர்த்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். அதேபோன்று, பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு இந்த வரம்பு அமெரிக்க டொலர் 0.2 மில்லியனாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.இந்த வரம்புகளை விட அதிகளவிலான வெளிநாட்டு செலாவணியை மாற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் நடவடிக்கை எடுக்க முடியும் என வெளிநாட்டு செலாவணித் திணைக்களம் தெரிவித்தது. இதன்போது, குறித்த அங்கீகாரம் வணிகத்தின் நிதிநிலை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இவ்வாறான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகளவான சொத்துக்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்கு அதிகமாகக் கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.