logo

E   |   සි   |  

2012-02-13

செய்தி வகைகள் : செய்திகள் 

பிரியாவிடை பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம்

ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக கிதுல்கொட அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் இன்று இடம் பெற்றது. இது பாராளுமன்றச் செயலக ஊழியர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம், உயர் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். திரு. தம்மிக கிதுல்கொட 2012 பெப்ரவரி 14ஆம் திகதி முதல் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அவரது தொழில்சார் சிறுவிபரம் பின்வருமாறு:

பாராளுமன்ற செயலாளர் நாயகமாக திரு. தம்மிக கிதுல்கொட 2010 ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் மீள் நியமனம் செய்யப்பட்டார் (பதில் பா.செ.நா. ஆக 2008.03.31 முதல் 2010.08.27ஆம் திகதி வரை செயற்பட்டார்). இதற்கு முன்பு, 1999 பெப்ரவரி முதல் 2002 ஆகஸ்ட் வரை, பாரளுமன்றச் செயலாளர் நாயகமாக இவரே பணியாற்றினார். பாராளுமன்றச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதலாவது நீதித்துறை அதிகாரி திரு. கித்துல்கொட ஆவார். இவர் அரசியலமைப்புப் பேரவைக்கு செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இரண்டு மாறுபட்ட அரசியல் கட்சிகளால் நிர்வகிக்கப்பட்ட அரசாங்கங்களைச் சேர்ந்த மூன்று சபாநாயகர்களின் கீழ் வெற்றிகரமாக இப்பதவியை வகித்துள்ளார். தனது சுயாதீனம், பக்கச்சார்பின்மை ஆகியவற்றின் காரணமாக சபையிலுள்ள இரு பக்க உறுப்பினர்களதும் நம்பிக்கையையும், மதிப்பையும் இவரால் பெற முடிந்தது.

திரு. கித்துல்கொட அவர்களின் தொழில் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டமாகத் திகழ்வது, இலங்கையின் நீதித்துறையில் அவர் கடமையாற்றிய 19 வருடங்களாகும். 1980 இல் நீதிச் சேவையில் இணைந்த அவர், 1998 இல் மதிப்புமிக்க நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படும் வரை நீதவானாகவும், பின்னாளில் மாவட்ட நீதிபதியாகவும் நாட்டின் பல பகுதிகளிலும் சேவையாற்றினார். ஒரு நீதிபதி என்ற வகையில் திரு. கித்துல்கொட விரைவாக நீதி வழங்கும் தனது ஆற்றலினால் பிரபலமானவராகத் திகழ்ந்தார். நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக அவர் சேவையாற்றிய காலத்தில், சட்டத்தில் ஏற்பட்டிருந்த தாமதங்களைக் களைய அயராது கடப்பாடு பூண்டார். இந்த விடயத்தில் அவர் சர்வதேச கொடையாளர்களின் உதவியினைப் பெற்றுக்கொண்டார். USAID இன் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நீதிபதிகளின் பயிற்சி நிகழ்ச்சித் திட்டமானது இம் முயற்சியின் ஓர் அளப்பரிய சாதனையாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே அடுத்த கட்டப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு நீதித்துறைக் கல்வி வழங்குனர் என்ற ரீதியில், அவர் ஏனைய நீதித்துறைகளுக்கு மேற்கொண்ட விஜயங்களை தனது அறிவினை அதிகரிப்பதற்கு உபாயகரமாகப் பயன்படுத்தினார். நீதித்துறைக் கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டம் அவ்வாறான ஒரு முன்னெடுப்பின் பயனாகவே உருவாகியது.

பொதுநலவாய நீதவான்கள் மற்றும் நீதிபதிகளின் சங்கத்தில் திரு. கித்துல்கொட முனைப்பான ஈடுபாடு கொண்டிருந்தார். அதிலே அவர் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் பின்னாளில் உபதலைவராகவும் சேவையாற்றினார்.


தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks