பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-11-04
இலங்கையில் 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வீதி விபத்துகளினால் ஏற்பட்ட வருடாந்த உயிரிழப்புகளின் சராசரி எண்ணிக்கை 2,536 ஆகவும், காயமடைந்தவர்களின் வருடாந்த சராசரி எண்ணிக்கை 22,483 ஆகவும் காணப்படுவதாக சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே கௌரவ பிரதியமைச்சர் இந்தத் தகவல்களை வழங்கினார்.
வீதி விபத்துகளினால் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் அங்கவீனமடையும் நபர்களின் சராசரி எண்ணிக்கை சுமார் 25,000 ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சர்வதேச அளவுகோல்களுக்கு அமைய, ஒரு நாட்டின் வீதி விபத்துகளினால் அதன் பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனுக்கு ஏற்படும் இழப்பு (Productivity Loss), அந்நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையான அளவைக் கொண்டிருக்கும் என நம்பப்படுவதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2026-11-04
2026ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (நவ. 04) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.திரட்டு நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது நிதியிலிருந்து 4,261 மில்லியன் ரூபாவை (ரூ.4,261,000,000.00) இலங்கை விமானப்படைக்கு வழங்குவதற்காக இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மாறிவரும் செயற்பாட்டுச் சூழல், வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய வகையிலான தொடர்ச்சியான பாதகமான காலநிலை நிலைமைகளால் ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை விமானப்படையில் ஆளில்லா விமானக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படவுள்ளது.இதற்கு மேலதிகமாக, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெறவுள்ளது. (அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் எவ்வித மனுக்களும் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில்) வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்ற அலுவல்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
2026-11-04
குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பிற்கு அமைய இலங்கையில் தற்போது மொத்தமாக 727,293 இயலாமையுள்ள நபர்கள் இருப்பதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ கலாநிதி உபாலி பன்னிலகே, இயலாமையுள்ள நபர்களின் நலன்புரிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களால் வாய்மூல விடைக்காகக் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.அமைச்சர் வழங்கிய விளக்கத்தின்படி, குறைந்த வருமானம் பெறும் இயலாமையுள்ள நபர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்குதல், விசேட உதவி உபகரணங்களை வழங்குதல், செவிப்புலன் கருவிகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்வதற்காக அதிகபட்சமாக 50,000 ரூபா நிதியுதவி வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.வீடற்ற இயலாமையுள்ள நபர் ஒருவர் உள்ள குடும்பமொன்றுக்கு வீடமைப்புக்காக அதிகபட்சமாக 1,000,000 ரூபாவும், வீடுகளைப் புனரமைப்பதற்காக அதிகபட்சமாக 50,000 ரூபா நிதியுதவியும், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக 150,000 ரூபாவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக, வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக மேல் மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒருவருக்கு தலா 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படுகின்றது.கல்வி உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி வழங்குதல், மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுதல் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் தலையீட்டின் கீழ் மருத்துவ உதவிகளுக்காக அதிகபட்சமாக 100,000 ரூபா நிதியுதவி வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.இயலாமையுள்ள நபர்களுக்கு அல்லது அவர்களின் பராமரிப்பாளர்கள் சுயதொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையான நிதியுதவியும் வழங்கப்படுகின்றது. அத்துடன், விசேட கல்விப் பிரிவுகள் மற்றும் நிறுவனங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகள் ஆகியவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயலாமையுள்ள நபர்களுக்குச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் அபிவிருத்திக்காக அதிகபட்சமாக 500,000 ரூபா நிதியுதவியும் வழங்கப்படுகின்றது.மேலும், நடமாடும் கண் சிகிச்சை முகாம்களின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படுவதுடன், இயலாமையுள்ள நபர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களுக்கு இலகுவாகச் சென்று வருவதற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.தொழிற்பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தல், 16 வயதுக்குக் குறைந்த இயலாமையுள்ள சிறுவர்களை ஆரம்பகாலத் தலையீட்டுத் திட்டங்களின் ஊடாகக் கல்வியில் ஈடுபடுத்துதல், அதற்குத் தேவையான திறன் விருத்தி மற்றும் பகல்நேரப் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.இதற்கு மேலதிகமாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இயலாமையுள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. அத்துடன், உயர்கல்வியைத் தொடரும் இயலாமையுள்ள மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் ஊடாக மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2026-11-03
பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்தமை காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை 145 மீன்பிடிப் படகுகளுடன் 795 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 753 மீனவர்கள் 66 மீன்பிடிப் படகுகளுடன் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் சார்பில் பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.2024 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, மொத்தம் 49,271 மீன்பிடிப் படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவற்றில் 4,869 பதிவு செய்யப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகுகள், 880 ஒருநாள் மீன்பிடிப் படகுகள் (IDAY), வெளிப்புற இயந்திரங்களைக் கொண்ட 24,823 படகுகள் (OFRP), இயந்திரங்களைக் கொண்ட 2,709 பாரம்பரியப் படகுகள் (MTRB), இயந்திரங்கள் அற்ற 15,037 பாரம்பரியப் படகுகள் (NTRB) மற்றும் இயந்திரமற்ற கரைவலைப் படகுகள் (NBSB) 953 என்பன உள்ளடங்குவதாகத் தெரிவித்தார்.இவற்றில் 4,869 பலநாள் மீன்பிடிப் படகுகளும் சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான சட்டபூர்வ அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சில சந்தர்ப்பங்களில், சீரற்ற காலநிலை, பலத்த காற்று அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மீன்பிடிப் படகுகள் பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசிக்கும் நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, சில படகுகளின் மீகாமர்கள் வேண்டுமென்றே பிற நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் பிரவேசித்து, அங்குள்ள மீன் வளங்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.வெளிநாடுகளில் கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 7 மீன்பிடிப் படகுகளுடன் 40 மீனவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.வெளிநாடுகளில் கைது செய்யப்படும் மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் தொடர்பில், சம்பந்தப்பட்ட நாடுகளில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகங்கள் நேரடியாகச் செயற்படுவதாகவும், அதற்கமைய கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் தொடர்பில் தேவையான அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான தலையீடுகளையும் அந்தந்தத் தூதரகங்கள் மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும், அனர்த்தங்களுக்கு உள்ளாகும் படகுகள் உள்ளிட்ட ஏனைய மீன்பிடிப் படகுகள் தொடர்பான தேவையான தொழில்நுட்ப அறிக்கைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வழங்குவதாகவும், சில சந்தர்ப்பங்களில் மீனவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான விமானப் பயணச்சீட்டுகளைக்கூட அத்திணைக்களம் வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2026-11-03
2019 முதல் 2025 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 6,658 காசநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், சனநெரிசல் மிக்க மற்றும் திருப்தியற்ற குடியிருப்புச் சூழல், போஷாக்கின்மை, வாழ்க்கை முறை சார்ந்த காரணிகள் மற்றும் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருத்தல் ஆகியவை காசநோய் ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாக அமைவதாகவும் கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.Mycobacterium tuberculosis எனப்படும் பக்றீரியாவால் தொற்று ஏற்பட்ட பின்னர், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடையும் சந்தர்ப்பங்களில், அது காலப்போக்கில் செயலில் உள்ள காசநோயாக உருவாகக்கூடும் என அமைச்சர் தெரிவித்தார்.காசநோய் பரவுவதற்கான காரணங்களை விளக்கிய அமைச்சர், நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது, தும்மும்போது, பேசும்போது அல்லது சிரிக்கும்போது காசநோயை ஏற்படுத்தும் பக்றீரியாவைக் கொண்ட நுண்ணிய நீர்த்துளிகள் (airborne droplets) காற்றில் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டார். ஆரோக்கியமான ஒருவர் அந்த நீர்த்துளிகளைச் சுவாசிப்பதன் மூலம், பக்றீரியா அவரது சுவாசத் தொகுதிக்குள் நுழைவதால் நோய் பரவுவதாகவும் அவர் தெரிவித்தார்.கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் காசநோய் பரவுவதைத் தடுப்பதற்காக, நோயாளர்கள் அனைவருக்கும் இலவசமாக மருந்துகள் வழங்கப்படுவதுடன், நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சைகளும் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். அதிக ஆபத்துள்ள நகர்ப்புறப் பகுதிகளை இலக்காகக் கொண்டு, நடமாடும் எக்ஸ்-ரே வாகனங்களைப் பயன்படுத்தி இலவசப் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன.மேலும், அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைச் சிகிச்சைகளும் வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இதற்கு மேலதிகமாக, நகர்ப்புறச் சமூகத்தினர் மற்றும் பாடசாலை மாணவர்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், சுகாதார ஆலோசகர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியனவும் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.அத்துடன், அதிக ஆபத்துள்ள குழுக்களை அடையாளம் கண்டு அவர்களைச் சிகிச்சைக்கு வழிநடத்துதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களிடையே காசநோய் ஏற்படும் அபாயத்தைப் பரிசோதித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks