பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-11-04
2026ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (நவ. 04) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
திரட்டு நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது நிதியிலிருந்து 4,261 மில்லியன் ரூபாவை (ரூ.4,261,000,000.00) இலங்கை விமானப்படைக்கு வழங்குவதற்காக இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் செயற்பாட்டுச் சூழல், வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய வகையிலான தொடர்ச்சியான பாதகமான காலநிலை நிலைமைகளால் ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை விமானப்படையில் ஆளில்லா விமானக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெறவுள்ளது. (அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் எவ்வித மனுக்களும் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில்)
வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்ற அலுவல்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
2026-11-05
வலுவான எதிர்காலப் பெண் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதில், மனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக அரசியல் மற்றும் தலைமைத்துவம் தொடர்பான பெண்களின் அணுகுமுறைகளில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு வருவது உலக மற்றும் இலங்கை அரசியலில் காணக்கூடிய சாதகமான நிலைமையாகும் என பிரதி குழுக்களின் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்றத்தின் சபா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற மாரவில புனித குடும்ப மகளிர் மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே பிரதி குழுக்களின் தவிசாளர் இதனைத் தெரிவித்தார்.தற்காலத்தில் பெண்கள் திறமை, அறிவு மற்றும் கல்வி ஆகியவற்றின் ஊடாக வலுவடைந்து வருவதால், எதிர்காலத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் பெண்களின் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பு தொடர்பில் நம்பிக்கையுடன் எதிர்பார்க்க முடியும் எனவும், அதனை நனவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதி குழுக்களின் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஜனாதிபதி நிதியம் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். தற்போது நிலவும் சிறந்த மரபுகளைத் தொடர்ந்து பேணுவதுடன், எப்போதும் நேர்மறையான மாற்றத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் பங்களிப்பது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.வீட்டிலும் பாடசாலையிலும் ஆரம்பமாகும் நற்பழக்கவழக்கங்களை கிராமத்திற்கும், அங்கிருந்து நாடு முழுவதற்கும் விரிவுபடுத்த வேண்டும் எனவும், சமூகப் பொறுப்புணர்வையும் சுய ஒழுக்கத்தையும் பேணுவது பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித், சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய நிறுவனங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தி, ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படைக் கூறுகள் மற்றும் அவற்றின் பணிகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சூலா ஹேரத் அவர்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மாணவிகளுக்கு விளக்கமளித்தார். ஜனநாயகம், அதன் நடைமுறைச் செயற்பாடுகள், அரசியலமைப்பு, நிலையியற் கட்டளைகள், மரபுகள் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் நடைமுறைப் பயன்பாடுகள் தொடர்பில் மாணவிகளுக்கு நடைமுறை ரீதியான புரிதலையும் அவர் வழங்கினார்.மாரவில புனித குடும்ப மகளிர் மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்திற்கான சபாநாயகர் தெரிவும் இடம்பெற்றது. அத்துடன், மாணவர் பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் தமது அமைச்சுக்களின் கீழ் முன்னெடுக்க எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.இந்நிகழ்ச்சியை ஜனாதிபதி செயலகமும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
2026-11-05
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் மாண்புமிகு லெவான் எஸ்.டிகேரியன் அவர்கள், இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (நவ. 04) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.இச்சந்திப்பில் ரஷ்ய ஃபெடரல் அசம்பிளியின் மேல் சபை தலைவர் கௌரவ வி. மட்வியென்கோ அவர்கள் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்புக் கடிதத்தை ரஷ்யத் தூதுவர் கௌரவ சபாநாயகரிடம் கையளித்தார். இதற்கமைய, இரு தரப்பினருக்கும் வசதியான ஒரு திகதியில் 2027ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு சபாநாயகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் மேல் சபைக்கும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் இடையிலான நிலையான, நம்பிக்கையின் அடிப்படையிலான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த அழைப்புக் கடிதம் வலியுறுத்துகிறது. அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ரீதியான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.இச்சந்திப்பின்போது, இரு தரப்பினருக்கும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்கள் மற்றும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளைத் தொடர்ந்தும் வலுப்படுத்துவது தொடர்பிலும் சுமுகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
2026-11-04
குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பிற்கு அமைய இலங்கையில் தற்போது மொத்தமாக 727,293 இயலாமையுள்ள நபர்கள் இருப்பதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ கலாநிதி உபாலி பன்னிலகே, இயலாமையுள்ள நபர்களின் நலன்புரிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களால் வாய்மூல விடைக்காகக் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.அமைச்சர் வழங்கிய விளக்கத்தின்படி, குறைந்த வருமானம் பெறும் இயலாமையுள்ள நபர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்குதல், விசேட உதவி உபகரணங்களை வழங்குதல், செவிப்புலன் கருவிகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்வதற்காக அதிகபட்சமாக 50,000 ரூபா நிதியுதவி வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.வீடற்ற இயலாமையுள்ள நபர் ஒருவர் உள்ள குடும்பமொன்றுக்கு வீடமைப்புக்காக அதிகபட்சமாக 1,000,000 ரூபாவும், வீடுகளைப் புனரமைப்பதற்காக அதிகபட்சமாக 50,000 ரூபா நிதியுதவியும், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக 150,000 ரூபாவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக, வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக மேல் மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒருவருக்கு தலா 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படுகின்றது.கல்வி உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி வழங்குதல், மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுதல் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் தலையீட்டின் கீழ் மருத்துவ உதவிகளுக்காக அதிகபட்சமாக 100,000 ரூபா நிதியுதவி வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.இயலாமையுள்ள நபர்களுக்கு அல்லது அவர்களின் பராமரிப்பாளர்கள் சுயதொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையான நிதியுதவியும் வழங்கப்படுகின்றது. அத்துடன், விசேட கல்விப் பிரிவுகள் மற்றும் நிறுவனங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகள் ஆகியவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயலாமையுள்ள நபர்களுக்குச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் அபிவிருத்திக்காக அதிகபட்சமாக 500,000 ரூபா நிதியுதவியும் வழங்கப்படுகின்றது.மேலும், நடமாடும் கண் சிகிச்சை முகாம்களின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படுவதுடன், இயலாமையுள்ள நபர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களுக்கு இலகுவாகச் சென்று வருவதற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.தொழிற்பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தல், 16 வயதுக்குக் குறைந்த இயலாமையுள்ள சிறுவர்களை ஆரம்பகாலத் தலையீட்டுத் திட்டங்களின் ஊடாகக் கல்வியில் ஈடுபடுத்துதல், அதற்குத் தேவையான திறன் விருத்தி மற்றும் பகல்நேரப் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.இதற்கு மேலதிகமாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இயலாமையுள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. அத்துடன், உயர்கல்வியைத் தொடரும் இயலாமையுள்ள மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் ஊடாக மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2026-11-04
இலங்கையில் 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வீதி விபத்துகளினால் ஏற்பட்ட வருடாந்த உயிரிழப்புகளின் சராசரி எண்ணிக்கை 2,536 ஆகவும், காயமடைந்தவர்களின் வருடாந்த சராசரி எண்ணிக்கை 22,483 ஆகவும் காணப்படுவதாக சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே கௌரவ பிரதியமைச்சர் இந்தத் தகவல்களை வழங்கினார்.வீதி விபத்துகளினால் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் அங்கவீனமடையும் நபர்களின் சராசரி எண்ணிக்கை சுமார் 25,000 ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், சர்வதேச அளவுகோல்களுக்கு அமைய, ஒரு நாட்டின் வீதி விபத்துகளினால் அதன் பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனுக்கு ஏற்படும் இழப்பு (Productivity Loss), அந்நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையான அளவைக் கொண்டிருக்கும் என நம்பப்படுவதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks