logo

E   |   සි   |  

2011-08-09

செய்தி வகைகள் : செய்திகள் 

சபாநாயகர் கெளரவ சமல் ராஜபக்ஷ பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் (பொ.பா.ச) தலைமைப் பதவியை ஏற்றார்



2011 ஜூலை 21 முதல் 28 வரை ஐக்கிய இராச்சியம், இலண்டனில் நடைபெற்ற பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் 57வது வருடாந்த மாநாட்டின் நிறைவில் பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் தலைமைப் பதவி இலங்கைப் பாராளுமன்றச் சபாநாயகர் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

2012 இல் இலங்கை, கொழும்பில் நடைபெறவுள்ள பொ.பா.ச. இன் அடுத்த வருடாந்த மாநாடு நிறைவுபெறும் வரை கெளரவ சாபநாயகர் அவர்கள் இப்பதவியை வகிப்பார். பொ.பா.ச. உறுப்புரிமை நாடுகளின் சபாநாயகர்கள், தேசிய, மாகாண சட்டவாக்கச் சபைகளின் உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளடங்கலாக மாநாட்டில் பங்குபற்றுனரகள் மத்தியில் உரையாற்றுகையில், 2012 செப்டம்பர் 7-15 வரையான காலப்பகுதியினுள் 58 ஆவது பொ.பா.ச. மாநாட்டை கொழும்பில், இலங்கை நடத்தவுள்ளது என மீளவலியுறுத்தியதுடன் அடுத்த மாநாட்டின் நிமித்தம் இலங்கைக்கு விஜயம் செய்து எமது நாட்டின் சிறப்பான விருந்தோம்பலை அனுபவிக்கும் படி பொ.பா.ச. இன் அனைத்து உறுப்புரிமை நாடுகளுக்கும் தனது உளமார்ந்த அழைப்பினை சாபநாயகர், கொளரவ சமல் ராஜபக்ஷ விடுத்தார்.

நூற்றாண்டு மாநாட்டை ஒழுங்கமைப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிகச் சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் தாம் ஐக்கிய இராச்சியத்திற்கு வருகை தந்தது முதல் சகல மாநாட்டு பங்குபற்றுனர்களுக்கும் வழங்கிய மகத்தான விருந்தோம்பல் ஆகியவற்றுக்காக பொ.பா.ச. ஐக்கிய இராச்சியக் கிளை, குறிப்பாக 2011 பொ.பா.ச. மாநாட்டுக் குழு, அமைப்பிலிருந்து வெளியேறிச் செல்லும் தலைவர், அதி. கெளரவ ஜோன் பெர்கோ, பொதுச் சபை சபாநாயகர், பொ.பா.ச. தலைமையகத்தின் பணிப்பாளர்கள், பணியாட்டொகுதியினர் ஆகியோருக்கு தமது நன்றியை விழா நிறைவின் பொழுது நன்றியுரை ஆற்றுகையில் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். மேலும் ஜனநாயக நல்லாட்சியின் நவீன போக்குகளுக்கு ஏற்பவும் பொருத்தமான விதத்திலும் பொ.பா.ச. திகழ்வதை தனது பதவிக்காலத்தில் உறுதிப்படுத்துவதற்காக சங்கத்திற்கு பாரிய சேவைகளை வழங்கியமைக்காக பொ.பா.ச. இன் செயலாளர் நாயகம் டாக்டர் வில்லியம் எப். ஷிஜா அவர்களுக்கும் கெளரவ சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். தனது உரையை நிறைவிற்கு கொண்டு வரும் தறுவாயில், 2012 இல் இலங்கையில் நடைபெறவுள்ள பொ.பா.ச. மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யும்படி அனைத்து பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் தனது உளமார்ந்த அழைப்பை கெளரவ சபாநாயகர் அவர்கள் விடுத்தார். "இம் மாநாட்டை நடத்துபவர்கள் என்ற முறையில் எமது பாரம்பரியம் சார்ந்த விருந்தோம்பலுடன் உங்களை வரறே்பதற்கு கொழும்பில் நாம் தயாராக இருக்கிறோம் எனவும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கும் நாட்கள் மனது மறக்காத மகிழ்வுகளை உங்களுக்கு ஏற்படுத்துவதற்கு நான் உறுதி அளிக்கிறேன்" எனவும் அவர் தெரிவித்தார். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் நாடு வென்றெடுத்த சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கும், சுபீட்சம், அபிவிருத்தி ஆகியவற்றை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்கும் தமது உதவிகளை நல்கும்படி பொதுநலவாயப் பாராளுமன்ற சகாக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சபாநாயகர் கெளரவ சமல் ராஜபக்ஷ, சபை முதல்வர் கெளரவ நிமல் சிறிபால த சில்வா, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ மஹிந்த சமரசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க, கெளரவ (டாக்டர்) திருமதி சுதர்ஷினீ பெர்னாந்துபுள்ளே பா.உ., கெளரவ எம்.ஏ. சுமந்திரன் பா.உ. ஆகியோரை உள்ளடக்கிய பாராளுமன்ற தூதுக்குழு ஐக்கிய இராச்சியம் இலண்டனில் நடைபெற்ற பொ.பா.ச. நூற்றாண்டு மாநாட்டில் பொ.பா.ச. இலங்கைக் கிளையை பிரதிநிதித்துவப்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks