2026-09-07
இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 13ஆவது கூட்டம், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
2026 ஜூலை முதல் 2027 ஜூன் வரையிலான காலப்பகுதிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் வரைவு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதனை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இச்செயற்றிட்டம் நான்கு பிரதான துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பாராளுமன்ற ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை, வரவு-செலவுத் திட்டத்திற்காக குரல் கொடுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல், சட்ட மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள், அத்துடன் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய அரச சேவைகள் ஆகிய துறைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
IFES நிறுவனத்தின் இலங்கைப் பிரதிப் பணிப்பாளர் இந்திரக உபேசேகர, சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் அனோஜிதா சிவாஸ்கரன் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய சபையின் உறுப்பினர் டிக்கிரி குமார ஜயவர்தன ஆகியோர் இதுவரை ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் முன்னிலையில் விளக்கமளித்தனர்.
இயலாமையுடைய நபர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளைப் பிராந்திய மட்டத்திலான திட்டமிடலில் உள்ளடக்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட மாவட்ட ரீதியான ஆலோசனை நிகழ்ச்சிகளின் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறான நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட மட்டத்தில் செயற்படும் அணுகல் தொடர்பான கணக்காய்வுக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் ஊடாக பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் போது, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தினரின் செயற்பூர்வமான பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கான பொருத்தமான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கட்டிடங்கள் மற்றும் நகரத் திட்டமிடலின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே அணுகல் வசதிகளை உள்ளடக்குவதன் மூலம், பின்னர் மேற்கொள்ள வேண்டிய அதிக செலவிலான மாற்றங்களை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு-செலவுத் திட்டத்திற்காக, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 அமைப்புகளின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட 234 கொள்கை மற்றும் நடைமுறை முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்று ஏற்கனவே ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அந்த முன்மொழிவுகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும், அதன் மூலம் ஆதரவுத் தேவையுடையோருக்கு உண்மையான நன்மைகள் கிடைக்கின்றனவா என்பதையும் நெருக்கமாகக் கண்காணிக்க ஒன்றியம் தீர்மானித்தது.
இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தற்போதுள்ள சட்ட மற்றும் கொள்கை ரீதியான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் “இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமூலம்” மற்றும் “சைகை மொழி சட்டமூலம்” ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் சட்டவரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போது காணப்படும் சட்ட ஏற்பாடுகள் மற்றும் தரநிலைகளை சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தனியார் துறை நிறுவனங்களுக்காக அணுகல் தொடர்பான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தி, அவற்றை படிப்படியாக சட்டக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதுடன், தெரிவுசெய்யப்பட்ட சில தனியார் நிறுவனங்களுடன் முன்மாதிரித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
அரச சேவைகளை மேலும் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய சேவைகளாக மாற்றுவது தொடர்பிலும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. தொழில் அமைச்சின் “மெஹெவர பியச” கட்டடம் மற்றும் செத்சிறிபாய I மற்றும் II கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகல் தொடர்பான கணக்காய்வு முடிவுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. செத்சிறிபாய III கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், இயலாமையுடைய நபர்கள் அணுகக்கூடிய வகையில் அதனை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், தாழ்தளப் பேருந்து சேவைகள், ஆதரவுத் தேவையுடையோர் அணுகக்கூடிய வகையிலான சுற்றுலாத்துறை மற்றும் “மிதுரு நகர” வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் அரச சேவைகளில் அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்கான முன்மாதிரிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சுகாதார சேவைகளைப் பெறும்போது ஆதரவுத் தேவையுடையோர் எதிர்கொள்ளும் அணுகல் தடைகளை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், இயலாமையுடைய நபர்களைக் கொண்ட சமூகத்தினர் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமான, சுயாதீனமான மற்றும் கண்ணியமான சமூக வாழ்க்கையை வாழக்கூடிய சூழலை உருவாக்குவது ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.
இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவர்களின் குரலுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் இந்தப் பொறுப்பை தொடர்ந்தும் நிறைவேற்றும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், IFES நிறுவனம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, வைத்தியர் இளைதம்பி ஸ்ரீநாத், சட்டத்தரணி பாக்கியஸ்ரீ ஹேரத் மற்றும் சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-11-13
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இச்சட்டமூலம் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. வெளிநாட்டு பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இச்சட்டமூலத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.இலங்கை பிரஜையொருவர் அல்லது இலங்கை பிரஜை அல்லாத வேறொரு நாட்டின் பிரஜை ஒருவர் இலங்கையில் சமுகமாயிருக்கையில், அல்லது இலங்கைக்கு வெளியே தவறிழைத்திருந்து அது அந்நாட்டின் சட்டத்தின் கீழ் தவறொன்றாக இருப்பின் இச்சட்டத்தின் கீழ் இலங்கையில் நடவடிக்கை எடுக்க முடியும். பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளல், திட்டமிடுதல், தயார்செய்தல் அல்லது அதில் பங்குபற்றுதல், பயங்கரவாத பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெறுதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தவறுகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை இன ரீதியாக இலக்குவைத்து கொண்டுவரப்படும் சட்ட ஏற்பாடு இல்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து குறித்த சட்டமூலத்திற்கு குழு அங்கீகாரம் வழங்கியது. குழுவின் உறுப்பினரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இச்சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பினைப் பதிவுசெய்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுரங்க ரத்னாயக்க, திலின சமரக்கோன், விஜேசிறி பஸ்நாயக்க, சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டோரும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-11-13
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் விரிவாக ஆராயப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது.அதிபர் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள், முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையில் 2014 ஒக்டோபர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம், ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவது பதவி உயர்வாகக் கருதப்படாமல் “புதிய நியமனம்” எனக் கருதப்படுவதன் காரணமாக சம்பள முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக அதிபர் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திலிருந்து அதிபர் சேவையின் IIIஆம் தரத்திற்கு நியமிக்கப்படும்போது, சம்பள அதிகரிப்புகளுக்கு இடையிலான பாரிய வேறுபாடு காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைவதாக அவர்கள் குறிப்பிட்டார். அத்துடன், 03/2014 சுற்றறிக்கையின் மூலம் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள வேறுபாட்டை ஈடுசெய்வதற்காக சரிசெய்தல் கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், சேவைக்காலம் அதிகரிக்கும்போது ஆசிரியர் சேவையில் தொடர்ந்திருந்தால் கிடைக்கக்கூடிய உயர்ந்த சம்பள அதிகரிப்புகள் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சம்பள இடைவெளி ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.இதன் காரணமாக ஆசிரியர் சேவையின் முதலாம் மற்றும் 2-Iஆம் தரங்களில் உள்ள சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அதிபர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அதிபர் சேவையில் இணைவதற்கும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இது விடயம் தொடர்பில் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து சம்பள ஆணைக்குழுவுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அது மாத்திரமன்றி, அதிபர் சேவையில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் உபகுழு இங்கு தீர்மானித்தது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, சுகத் வசந்த.த சில்வா மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-12
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறைகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், நிலவும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆராச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 06) பாராளுமன்றத்தில் கூடிய இக்குழுக் கூட்டத்தில், 2026ஆம் ஆண்டுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.இதன்போது, பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கல்விச் சீர்திருத்தங்கள், பாடநூல்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பாடசாலை மாணவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் ஆசிரியர் கல்வியின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், குறித்த அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைகளிலான தாமதங்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்திறன், பரீட்சைகளை நடத்துதல், பாடநூல்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகிப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன. விசேட தேவையுடைய சிறுவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.மேலும், பாடசாலை மாணவர்களின் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சீருடைகளை விநியோகித்தல் மற்றும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. புலமைப்பரிசில் கொடுப்பனவுகளைத் துரிதப்படுத்துவதற்காக புதிய கணினி முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதன் ஊடாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை வைப்பிலிடுவதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர்.உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறைகளுடன் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள், இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட்டன.இதன்போது, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தமது நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். குறித்த அறிக்கைகளை உரிய காலத்தில் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.மேலும், வருட இறுதியில் மாத்திரமன்றி, வருடத்தின் இடைப்பட்ட காலத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அழைத்து, அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் குழு தீர்மானித்தது.அத்துடன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-12
மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றின் மின்கலத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், அரச ஆராய்ச்சி நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்கங்களை வணிகமயமாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்தில், 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை, 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர்கள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.இதன்போது, இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திடம் காணப்படும் மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலங்களைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மின்கலங்களின் கொள்ளளவு, நீடித்துழைக்கும் தன்மை மற்றும் ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைப் பரிசோதிக்கும் ஆற்றல் இந்நிறுவனத்திடம் காணப்படுவதாகத் தெரியவந்தது.எனினும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள், மின்கலங்கள், கட்டுப்படுத்திகள் (Controllers) மற்றும் மின்னேற்ற நிலையங்கள் ஆகியவற்றுக்கான கட்டாய ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகள் இல்லாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, உரிய தரநிலைகளைத் தயாரித்து, அவற்றைப் பரிசோதித்தல் மற்றும் சான்றளித்தல் ஆகியவற்றைக் கட்டாயமாக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தினர்.பாரம்பரிய எரிபொருள் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம், பயிற்சித் திட்டங்கள் மற்றும் அவ்வாறு மாற்றியமைக்கப்படும் வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பான தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளைத் தயாரிப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் தகைமையுடைய பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பொருத்தமான சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையொன்றின் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அரச ஆராய்ச்சி நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துதல், நிலவும் குறைபாடுகளைக் குறைத்தல், ஆராய்ச்சி முடிவுகளைப் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஒரேவிதமான பணிகளை முன்னெடுக்கும் நிறுவனங்களை ஒன்றிணைத்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அதிகாரிகள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இலங்கை புத்தாக்குனர்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான மின்சார வேலித் திட்டங்கள், பல்கலைக்கழகங்களை மையமாகக் கொண்ட புத்தாக்க விருத்தி மையங்கள் (Incubation Centers) மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஊடாக புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.நடைமுறைப்படுத்தப்பட்ட நான்கு மின்சார வேலித் திட்டங்களில் மூன்று வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர்.மேலும், புத்தாக்குனர்களின் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாத்தல் மற்றும் புத்தாக்கங்களை வணிகமயமாக்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 'சிறிய காப்புரிமைகள்' (Petty Patents) முறையை அறிமுகப்படுத்துவதற்காக அறிவுசார் சொத்துச் சட்டத்தைத் திருத்துவதற்கான முன்மொழிவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, சதுர கலப்பத்தி, தனுர திசாநாயக்க, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோருடன் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.