2026-08-04
பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (04) சான்றுரைப்படுத்தினார்.
பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக (14ஆம் உறுப்புரைக்கு) விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதுடன், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி 2026.07.09 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக, பணம் தூயதாக்கலைத் தடுப்பதற்குத் தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டக் கட்டமைப்பு வலுப்படுத்துவது, நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை வினைத்திறன்மிக்கதாக முன்னெடுப்பதும், சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக இலங்கையின் சட்டக் கட்டமைப்பை நவீனப்படுத்துவது என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.
இதற்கமைய, பணம் தூயதாக்கல் குற்றங்களின் நோக்கெல்லையை விரிவுபடுத்துதல், அடிப்படைக் குற்றம் தொடர்பில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படாத நிலையிலும் பணம் தூயதாக்கல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்தல், சந்தேகத்திற்கிடமான சொத்துக்களைத் தற்காலிகமாகத் தடுத்து வைக்கும் உத்தரவுகள் மற்றும் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் செயன்முறையை வலுப்படுத்துதல் ஆகியன இத்திருத்தங்களின் முக்கிய அம்சங்களாகும்.
அத்துடன், தடுத்து வைக்கப்பட்ட சொத்துக்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் அகற்றுதல், குற்றச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், விசாரணை அதிகாரங்களை விரிவுபடுத்துதல், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பணச் சலவை குற்றத்திற்கான தண்டனைகளை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான புதிய ஏற்பாடுகளும் இச்சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் இலங்கையில் பணம் தூயதாக்கதலைத், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பது மற்றும் பேரழிவு ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பது தொடர்பான சர்வதேச தரநிலைகளுடன் இணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன:
ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்பில் உரிய கவனத்துடன் செயற்படுதல் தொடர்பான தேவைகளை முறைப்படுத்துதல்;
அறிக்கையிடும் நிறுவனங்களுக்கான பொறுப்புகளின் நோக்கெல்லையை விரிவுபடுத்துதல்;
• தற்போது நடைமுறையில் உள்ள ஏதேனும் எழுத்துமூல சட்டங்களுக்கு உட்பட்டு, மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்களை 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடுதல் சட்டத்தில் உள்ள “நிதி வணிகம்” என்ற வரைவிலக்கணத்திற்குள் உள்ளடக்குதல்;
• நிதிப் புலனாய்வுப் பிரிவை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிதிப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் பொறுப்புகளை வலுப்படுத்துதல்;
• பரிவர்த்தனைகளை இடைநிறுத்துவதற்கான உத்தரவுகளின் காலத்தை ஏழு நாட்களிலிருந்து 14 வேலை நாட்களாக நீடித்தல்;
• அறிக்கையிடும் நிறுவனங்களின் இணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நிர்வாகத் தண்டனைகளை விரிவுபடுத்துதல்;
• பணம் தூயதாக்கல் தடுப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மற்றும் பேரழிவு ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பது தொடர்பான தேசியக் குழுவை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல்;
• பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல் மற்றும் பேரழிவு ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தல் தொடர்பான இலக்கிடப்பட்ட நிதித் தடைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களைச் செயல்படுத்துவதை மேம்படுத்துதல்;
• சட்டத்தின் தெளிவை மேம்படுத்துவதற்காக புதிய வரைவிலக்கணங்களை அறிமுகப்படுத்துதல்;
• 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகளை அறிக்கையிடுதல் சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் திருத்துதல் ஆகியன அடங்குகின்றன.
பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம்
பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலத்தின் மூலம், 2005ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுவதுடன், இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை ஒடுக்குவதற்கான தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திருத்தங்களின் மூலம், பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான இலங்கையின் சட்ட நடவடிக்கைகள் சர்வதேச தரநிலைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயங்களுக்கு அமைவாக மேலும் வலுப்படுத்தப்படுகின்றன. அத்துடன், எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்குத் தயாராகுவதற்கும் இது உதவியாக அமையும்.
இதன் மூலம் இலங்கையின் நிதி முறைமையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிதி நடவடிக்கை செயலணியின் (Financial Action Task Force – FATF) கட்டமைப்பின் கீழ் இலங்கை நிறைவேற்ற வேண்டிய சர்வதேச கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கான அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துதல் ஆகியன சாத்தியமாகும்.
இதற்கமைய, பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலங்கள் முறையே, 2026ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமாகவும், 2026ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமாகவும், மற்றும் 2026ஆம் ஆண்டின் 18ஆம் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமாகவும் அமுலுக்கு வருகின்றன.
2026-10-13
சிறுநீரக நோயாளர்கள் 53,604 பேருக்கு மாதாந்தம் தலா 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக, இவ்வருடம் ஆகஸ்ட் மாதமளவில் அடையாளம் காணப்பட்டிருந்ததாக கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட வாய்மூல விடைக்கான வினாக்களுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்போர் பட்டியல் எதுவும் இல்லை எனவும், விண்ணப்பிக்கும் சிறுநீரக நோயாளர்களின் தகைமைகளின் அடிப்படையில் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2026-10-13
நாடு முழுவதும் தற்போது 19,646 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த ஒன்பது வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளினால் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.மேலும், பொதுப் பேருந்து நிலையங்களில் தனியார் பேருந்துகளிடமிருந்து சட்டவிரோதமாகப் பணம் அறவிடுவதற்கு எவருக்கும் சட்டரீதியான அதிகாரமோ அனுமதியோ இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறான பண அறவீடுகளைத் தடுப்பதற்காகப் பேருந்து பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் இலங்கைப் பொலிஸாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2026-10-13
2024ஆம் ஆண்டு குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பிற்கு அமைய இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மக்கள் தொகை 3,921,124 ஆகக் காணப்படுவதுடன், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18.002 சதவீதமாகும் என கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கநாத் அவர்களால் வாய்மூல விடைக்கான வினாவாக முன்வைக்கப்பட்ட கேள்விக்கு கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இந்த முதியோர் மக்கள் தொகையில் 1,712,535 பேர் ஆண்கள் எனவும், 2,208,589 பேர் பெண்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய, முதியோர் மக்கள் தொகையில் 43.67 சதவீதமானோர் ஆண்களாகவும், 56.33 சதவீதமானோர் பெண்களாகவும் உள்ளனர்.2000 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ், 2002ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேசிய முதியோர் செயலகமும் தேசிய சபையும் நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அவர்களின் நலனை உறுதிப்படுத்துதல் மற்றும் தேவையான சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன. முதியோர் பராமரிப்பு நிலையங்களைப் பதிவு செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல், முதியோர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு உதவிகளை வழங்குதல், அத்துடன் முதியோர் குழுக்களை வலுவூட்டுதல் ஆகியன அவற்றின் முக்கிய பணிகளாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.2025ஆம் ஆண்டில் 44,899 முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டில் 45,000 அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அத்துடன், 2026ஆம் ஆண்டில் 25 முதியோர் இல்லங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கும் 500 பயனாளிகளுக்கு உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2026-10-12
தான்சானியாவின் அருஷா நகரில் 2026 ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 153ஆவது மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த உயர்மட்ட இலங்கைத் தூதுக் குழுவினர் மாநாட்டின் முக்கிய அமர்வுகளின் விவாதங்கள், குழுக் கலந்துரையாடல்கள் மற்றும் நிலையியற் குழுக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகளில் பங்கேற்றதுடன், ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகள் ஆகிய துறைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்தனர்.“உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துதல், நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றின் ஊடாக நல்லாட்சியை மேம்படுத்தி சமூகங்களை வலுவூட்டுதல்” என்ற பிரதான தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், நிலையான ஜனநாயகத்தின் அடித்தளமாகப் பொதுமக்களின் நம்பிக்கையும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையும் விளங்குகின்றன என வலியுறுத்தினார். இலங்கையில் அண்மைக்காலத்தில் எட்டப்பட்ட முக்கிய முன்னேற்றங்களை எடுத்துரைத்த சபாநாயகர், தற்போதைய பத்தாவது பாராளுமன்றத்தில் 22 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன், அவர்கள் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 9.8 சதவீதத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்றும், அவர்களில் இருவர் மலையக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.மேலும், முதன்முறையாக மாற்றுத்திறனாளி ஒருவர் பத்தாவது பாராளுமன்றத்தில் உறுப்பினராகச் செயற்பட்டு வருவதுடன், அவருக்கு அண்மையில் பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தினால் வழங்கப்படும் கௌரவம் மிக்க 2026ஆம் ஆண்டுக்கான புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருதும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியம், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியம், அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு போன்ற சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள், சட்டவாக்கத்தில் சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்புகளையும் சபாநாயகர் விரிவாக எடுத்துரைத்தார்.அத்துடன், சைகை மொழி விளக்கத்துடன் பாராளுமன்ற விவாதங்களை ஒளிபரப்புதல், குழுக் கூட்ட நடவடிக்கைகளை ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு அனுமதித்தல் உள்ளிட்ட அண்மைக்கால திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புகள் குறித்தும் அவர் வலியுறுத்தினார். இத்தகைய முன்னெடுப்புகள் பொதுமக்களுக்கும் அவர்களது பிரதிநிதிகளான சட்டவாக்கத்துறையினருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் வெற்றிகரமாகப் பங்களிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், “உறுதிமொழியிலிருந்து பெறுபேறுகள் வரை: 2030ஆம் ஆண்டை நோக்கி இனப்பெருக்க, தாய்வழி, பிறந்த குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் சுகாதாரத்திற்கான மூன்று பூஜ்ஜிய இலக்குகளை அடைவதற்கான ஆபிரிக்கப் பாராளுமன்ற நடவடிக்கைகள்” என்ற தலைப்பில் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆபிரிக்க புவிசார் அரசியல் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்ட இணை நிகழ்வில் இலங்கைத் தூதுக்குழுவினருக்கு விசேட அங்கீகாரம் வழங்கப்பட்டது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவின் மருத்துவத் துறைசார் தொழில்முறைப் பின்னணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. தாய்வழி மற்றும் பிறந்த குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்துதல், சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவரது மருத்துவ அறிவும் பாராளுமன்றத் தலைமையும் கொண்டுள்ள முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டியது.மாநாட்டின் ஓர் அங்கமாக, இலங்கைத் தூதுக்குழுவினர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்றையும் நடத்தினர். இதன்போது, சுகாதாரப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்கான பல்துறைசார் ஈடுபாட்டுப் பிரிவின் தலைவர் லுடி சூரியந்தோரோவைச் சந்தித்தனர்.தேசிய சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய சுகாதார முன்னேற்பாட்டுச் சீராய்வு செயற்பாட்டை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.சுகாதாரப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட அதிகாரத்தை வழங்குதல், வரவுசெலவுத் திட்டச் செயற்பாடுகளின் ஊடாக நிதி ஒதுக்கீடுகளுக்கு அங்கீகாரம் வழங்கி அவற்றைப் பாதுகாத்தல், வலுவான மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல், பல்துறைசார் ஆளுகை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய மக்களின் சமத்துவத்தையும் மனித உரிமைகளையும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் பாராளுமன்றம் முக்கிய பங்காற்றுவதாக இலங்கைத் தூதுக்குழுவினர் இதன்போது வலியுறுத்தினர்.உள்ளடக்கிய சமூக அபிவிருத்திக்கான பாராளுமன்ற உத்திகள், இராணுவத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் காலகட்டத்தில் அமைதியை உறுதிப்படுத்துவதில் பாராளுமன்றங்களின் பங்கு, பாராளுமன்ற இராஜதந்திரம் மற்றும் மத்தியஸ்தம் ஊடாக அமைதியான எதிர்காலத்தை உருவாக்குதல், மோதல் காலங்களில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாத்தல், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் மோதல் தடுப்பு பொறிமுறைகளை மீளாய்வு செய்வதற்கான பிரேரணைகள் ஆகிய முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து இவ்வமர்வுகளில் கலந்துரையாடப்பட்டது.மேலும், சர்வதேசப் பாராளுமன்ற ஒன்றியத்தின் வழிகாட்டுக் கட்டமைப்பைப் பயன்படுத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், இயற்கை வளங்களை அகழ்ந்தெடுக்கும் கைத்தொழில்களின் மேற்பார்வை, பல்வேறு தலைமுறையினரிடையே டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் அதிகப்படியான பயன்பாட்டினால் ஏற்படும் சுமைகளையும் மனநலப் பிரச்சினைகளையும் கையாளுதல், சிறுவர் உரிமைகளுக்கு ஆதரவான நெறிமுறைசார் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், மாறிவரும் காலநிலைச் சூழலில் ஆரோக்கியமான உணவுகளை வழங்குதல், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகளை வலுப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளும் நடைபெற்றன.அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 153ஆவது மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் பங்கேற்றமை, ஜனநாயக ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, பொதுமக்களுக்கான பொறுப்புக்கூறல், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பான சர்வதேசப் பாராளுமன்ற உரையாடல் மற்றும் ஒத்துழைப்பில் இலங்கை தொடர்ந்து ஈடுபட்டு வருவதனைப் பிரதிபலிக்கிறது.