பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-07-30
செய்தி வகைகள் : செய்திகள்
மக்கள் பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பும்போது அவர்களை அரசியல்வாதிகளாக அன்றி இராஜதந்திரிகளாகவே அனுப்ப வேண்டும் என கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி வலியுறுத்தினார். அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுவதாகவும், இராஜதந்திரிகள் பிள்ளைகளின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.
கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும் ஜனநாயக ஆட்சி செயன்முறை தொடர்பான புரிதலையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி,
“சட்டத்தை மதிக்காத மக்கள் வாழும் ஒரு நாட்டிற்கு ஏற்படக்கூடிய அனர்த்தத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவது பாராளுமன்றத்தினாலேயே மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக தெரிவுசெய்து அனுப்பப்பட வேண்டியவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாகவும் சட்டத்திற்கு கட்டுப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றக்கூடியவர்கள் அவர்களே.
பிள்ளைகளின் கனவுகளை நனவாக்குவதற்காக தங்களது அதிகபட்ச ஆற்றலை அர்ப்பணிக்கும் ஆசிரியர்களை மதியுங்கள். அவர்களுக்கு செவிசாயுங்கள். அவர்களது ஆசீர்வாதத்தை எப்போதும் பெற்றுக்கொள்ளுங்கள். மாணவர்களான நீங்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைந்தாலும், உங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் எப்போதும் ஆசிரியர்களாகவே இருப்பார்கள்.
நீங்கள் எந்தத் தொழிலை மேற்கொண்டாலும் அதனை அன்புடன் செய்யுங்கள். நீங்கள் செய்யும் தொழிலில் மகிழ்ச்சியடையுங்கள். அதற்கு மதிப்பும் மரியாதையும் அளியுங்கள். தொழிலில் ஈடுபடும்போது நேர்மையாக இருங்கள்.
தங்களைவிட தமது பிள்ளைகள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களே பெற்றோர்கள். உங்களை வளர்த்து ஆளாக்கும் அவர்களை மதியுங்கள். பிள்ளைகள் பெற்றோரைப் பின்பற்றுகின்றனர். எனவே, தமது பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பது பெற்றோரின் பொறுப்பாகும்.
சட்டத்தை மதிக்கும்போது, தான் சட்டத்தை மதிக்கும் பிரஜை என்ற உணர்வு ஏற்படுகிறது. மாணவர்களான நீங்கள் இன்று இந்த இடத்திலிருந்து வெளியேறும்போது சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக மாறுவோம் என்ற எண்ணத்தை மனதில் பதித்துக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் மக்கள் ஆணைக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பாராளுமன்றம் மக்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. அதிகாரத்திற்கு வந்தவர்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதற்கும் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தினர். மக்கள் ஆணைக்கு பொறுப்புக்கூறும், பொறுப்புணர்வுடன், கட்டுப்பாடும் ஒழுக்கமும் முன்னுதாரணமும் கொண்ட நிறுவனமாக பாராளுமன்றத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறப்பானதொரு பாராளுமன்ற அமர்வை நடத்தியுள்ளனர். நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் இருப்பதை இதன் மூலம் காண முடிந்தது. எதிர்காலத்தில் மாணவர்களான நீங்கள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, உங்களுக்குப் பின்னர் வரும் தலைமுறைக்காக உங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா அவர்கள், பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படும் பிரதான மூலாதாரங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விரிவான விளக்கமளித்தார்.
மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், உறுப்பினர்களான மாணவிகள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சுப் பதவிகளை வகிக்கும் மாணவிகள் தமது அமைச்சுக்களின் ஊடாக பாடசாலையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு கௌரவ பிரதிச் சபாநாயகர் உள்ளிட்ட சிறப்பு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவில் கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரி அதிபர் கங்கானி திலகரத்ன மெணிகே நன்றியுரை நிகழ்த்தினார்.
ஜனாதிபதி செயலகமும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத் தொடரின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற பணிப்பாளர் (தொடர்பாடல்) சமந்த மல்லவஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும், கேகாலை ஜோசப் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks