பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-07-16
செய்தி வகைகள் : செய்திகள்
கொரியா குடியரசின் (தென்கொரியா) இலங்கைத் தூதுவர் மண்புமிகு மியூன் லீ அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (ஜூலை 10) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.
தூதுவரை வரவேற்ற கௌரவ சபாநாயகர், இலங்கைக்கும் கொரியா குடியரசிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பாராட்டியதுடன், இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது கொரியா குடியரசு வழங்கிய ஆதரவிற்கும், நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக, கொரியா குடியரசில் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, அமைதியானதும் முதலீட்டிற்கு உகந்ததுமான சூழலை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறியதுடன், நாட்டில் உருவாகி வரும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பும் விடுத்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த தென்கொரியத் தூதுவர் மாண்புமிகு மியூன் லீ அவர்கள், பல்வேறு துறைகளில் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க கொரியா குடியரசு தயாராக இருப்பதாக உறுதியளித்தார். மேலும், இலங்கையின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளதை நினைவுகூர்ந்த தூதுவர், இந்த முக்கிய மைல்கல் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டார். இதனையொட்டி, ஆண்டு முழுவதும் இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மற்றும் கொரியா குடியரசின் அரசியல் மற்றும் கலாசாரப் பின்னணிகள் தொடர்பாகவும் சுமுகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்ற இச்சந்திப்பின் நிறைவில், நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளினதும் பரஸ்பர அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
2026-08-19
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மனுக்களின் பிரதிகள் மற்றும் “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதியொன்றும் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஆக. 19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
2026-08-18
விலங்குகள் (திருத்தம்) மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (18) சான்றுரைப்படுத்தினார்.1958ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விலங்குகள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் 2026.07.21 திகதியன்று முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 2026.08.06 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பிரதான சட்டத்தின் 38ஆம் பிரிவில் “விலங்கு” என்ற சொல்லுக்கான சட்டரீதியான வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். மேலும், “ஒரு விலங்கு” என்பதற்கான வரைவிலக்கணத்தை மீள வரையறுப்பதன் மூலம், ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகள் இந்தச் சட்டத்தின் IIஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், சட்டத்தின் IVஆம் பகுதிக்குப் பொருந்தும் வகையில் செம்மறியாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் உள்ளடங்கும் வகையில் வரைவிலக்கணங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைமச்சரினால் 2026.07.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026.08.06ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தத் திருத்தத்தின் மூலம், 1974ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் நவீனமயப்படுத்தப்பட்டு, நீர் வழங்கல், வடிகால் சேவைகளை வழங்குவது தொடர்பான சபையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் வலுப்படுத்தப்படுகின்றன.கைத்தொழில் பேட்டைகள், கைத்தொழில் பூங்காக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுக்கான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ சேவைகளையும் சபையின் பொறுப்புகளுக்குள் உள்ளடக்கும் வகையில் அதன் பொறுப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், மிகவும் பயனுள்ளதும் நிலையானதுமான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ஊழியர் காப்புறுதித் திட்டங்கள், தொழில்நுட்ப சேவைகள், பயிற்சி சேவைகள், ஆய்வக சேவைகள் மற்றும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் இந்தத் திருத்தத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, விலங்குகள் (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விலங்குகள் (திருத்தம்) சட்டமாகவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமாகவும் நடைமுறைக்கு வருகின்றன.
2026-08-18
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று (ஆக. 18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.முதலாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இதற்கு அமைய, இந்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்கும் வகையில் அமைந்துள்ளதா என்பதை சவாலுக்கு உட்படுத்த எவராவது விரும்பினால், இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடியும்.அவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் குறித்த விடயத்தை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தி 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.அத்துடன், நீதித்துறை (திருத்த) சட்டமூலம் (1978ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நீதித்துறைசட் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்) முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் ஊடாக மேல் நீதிமன்ற, மஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட ஏனைய அனைத்து நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பதற்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2026-08-17
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி ஒன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதன்போது, சட்டவாக்கச் செயன்முறை, பாராளுமன்ற சம்பிரதாயங்கள் உள்ளிட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கேள்வி – பதில் அமர்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் பாராளுமன்ற சபா மண்டபம் உள்ளிட்ட பாராளுமன்ற வளாகத்தை பார்வையிடும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பணிப்பாளர் (சட்டவாக்கச் சேவைகள்) எம். ஜயலத் பெரேரா, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) காஞ்சன ஹேரத் மற்றும் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சாந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks