பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-07-16
செய்தி வகைகள் : செய்திகள்
முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை, சிறுவர் பாதுகாப்பு, பௌதீக ரீதியான தண்டனை, அது தொடர்பான சட்டப் பின்னணி மற்றும் நேர்மறை ஒழுக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி அண்மையில் (ஜூலை 08) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதியமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு, முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை தொடர்பாக கல்வி அமைச்சின் பணிப்பாளர் (முன்பள்ளிக் கல்வி) கே.டி.டி. விமலசிறி விளக்கமளித்தார். முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகள் 2027 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட முன்பள்ளி ஆசிரியர் கையேடும் மாதிரி செயற்பாட்டு நூலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக 108 பிரதான பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், அவர்களின் மூலம் மாகாண மட்டத்தில் மேலும் 556 பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10 நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ் முன்பள்ளிக் கல்வியை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், முன்பள்ளிகளுக்கான மதிப்பீடு மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கும், அடுத்த ஆண்டுக்குள் முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை சட்டமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தேசியக் கொள்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, சுகாதார அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க, குறித்த அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன், சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி பிரீதிகா சகலசூரிய மற்றும் விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாரச்சி ஆகியோர் சிறுவர் பாதுகாப்பு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பங்கு, பௌதீக ரீதியான தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள், அவ்வாறான தண்டனைகளால் சிறுவர் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள், தண்டனையை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கத்திற்கு மாற்றாக ‘நேர்மறை ஒழுக்கத்தை’ சிறுவர்களுக்கு கற்பிப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் உடல் தண்டனைகளையும் தடுக்கும் நோக்கில் சட்ட மற்றும் கொள்கை ரீதியான மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தனது ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனைச் சட்டக் கோவையைத் திருத்துவதன் மூலம் உடல் தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடாக இலங்கை, சிறுவர்களுக்கு எதிரான உடல் மற்றும் உளவியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான சர்வதேசப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், சட்டத் திருத்தங்கள் எந்தவொரு தரப்பையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படக் கூடாது என்பதையும், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்றதுடன், அவர்கள் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks