logo

E   |   සි   |  

2026-07-15

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது

இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டம் குறித்த சங்கத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தென்னாபிரிக்க பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் ஆலோசகருமான இந்தெபிசெங் ரமஷிலா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளையும் பாராளுமன்ற ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான தென்னாப்பிரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.


வரவேற்புரையாற்றிய சங்கத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் ஊடாக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான கருவியாக விளங்குகின்றன என்று தெரிவித்தார். இவை, இரு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து, அனுபவ மற்றும் சிறந்த நடைமுறைப் பரிமாற்றங்களுக்கும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குமான அரிய வாய்ப்பை வழங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்தக் கூட்டம் பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயற்பாடுகளின் ஆரம்பத்தை குறிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளதாகவும், 1994 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து, ஜனநாயகம், சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய பொதுவான விழுமியங்களின் அடிப்படையில் வளர்ந்து வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இச்சங்கம் முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.


இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்ச்சியான உரையாடல்களையும் மக்களுக்கிடையிலான தொடர்புகளையும் ஊக்குவிப்பதன் மூலம் பாராளுமன்ற மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். அரசியல் தீர்மானமெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் அதிகரிக்கும் நோக்கில், இரு நாடுகளின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.


வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பும் கலந்துரையாடலின் முக்கிய அம்சமாக அமைந்தது. விவசாயம், சுரங்கத் தொழில், சுற்றுலாத்துறை, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, உற்பத்தித் துறை உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், எக்ஸ்போ 2027 வர்த்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க வர்த்தக பிரதிநிதிக் குழுவொன்றை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விருப்பத்தையும் தென்னாப்பிரிக்கத் தரப்பினர் முன்வைத்தனர்.


இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால விளையாட்டு உறவுகளை கருத்திற்கொண்டு, கிரிக்கெட் மற்றும் ரக்பி ஊடாக விளையாட்டு அடிப்படையிலான இராஜதந்திரத்தை மேம்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பல்கலைக்கழக கூட்டாண்மைகள், புலமைப்பரிசில் வாய்ப்புகள் மற்றும் கல்வி பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன.


இலங்கையின் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவாக, நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான தென்னாப்பிரிக்காவின் அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக தென்னாப்பிரிக்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்கள் நன்றியுரையாற்றினார்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks