2026-06-24
செய்தி வகைகள் : செய்திகள்
சுயாதீன ஆணைக்குழுவாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மகளிர் ஆணைக்குழு சுயாதீனமாகவும், வலுவான நிலையிலும் செயற்படுவதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவைப் பாராளுமன்றம் வழங்கும் எனப் பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் (ஜுன் 23) தன்னைச் சந்தித்த தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசிர்வாதம் (Ms. Grace Asirwatham) உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தினால் இலங்கையில் முதன்முறையாக நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவான தேசிய மகளிர் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு கௌரவ சபாநாயகர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இலங்கையின் மக்கள் தொகையில் 51 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களுக்காக தேசிய மகளிர் ஆணைக்குழுவிற்கு பாரியதொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
உலகின் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கை என்றும், தெற்காசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டுப் பெண்கள் சமூகத்தில் முன்னோக்கி வந்துள்ளனர் என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார். எனவே, இலங்கைப் பெண்களை மேலும் வலுவாக அதிகாரப்படுத்துவதற்காக சரியான மற்றும் சுயாதீனமான முடிவுகளை எடுப்பதற்கு தேசிய மகளிர் ஆணைக்குழு செயற்பட வேண்டும் என கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.
தேசிய மகளிர் ஆணைக்குழுவில் தற்போது காணப்படும் நிர்வாக மற்றும் ஏனைய உள்கட்டமைப்புப் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி மற்றும் அதன் உறுப்பினர்களான கே.டி.ஆர். ஒல்கா, ஸ்ரீன் சாரூர் (Ms. Shreen Saroor), ஜனஹா செல்வராஸ் (Ms. Janaha Selvaras), ஜயந்தி உத்பலா, வைத்தியர் பத்மா குணரத்ன, கலாநிதி கலன சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
2026-06-24
பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை-பஹ்ரைன் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே தெரிவுசெய்யப்பட்டார்.குறித்த பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று (ஜுன் 23) இடம்பெற்றபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார். இதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்ஹ இச்சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இலங்கை – பஹ்ரைன் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உப தலைவர்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கவீந்திரன் கோடீஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன், உதவிச் செயலாளர்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் லால் பிரேம்நாத் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, 1992ஆம் ஆண்டு ஆரம்பமான இலங்கைக்கும் பஹ்ரைன் நாட்டுக்கும் இடையிலான தூதரக உறவுகள், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்துறைகளில் முன்னேறியிருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், பஹ்ரைனில் வசிக்கும் இலங்கைச் சமூகம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய இணைப்பாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற மட்டத்திலான கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கு இந்த நட்புறவு சங்கம் முக்கிய தளமாக அமையும் எனச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும்போது நாடுகள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபடுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.இலங்கைக்கும் பஹ்ரைன் இராச்சியத்திற்கும் இடையிலான தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சங்கத்தின் புதிய தலைவர், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பாராளுமன்ற மட்டத்தில் தீவிரமான தலையீடுகள் தேவை என்று சுட்டிக்காட்டினார். பஹ்ரைனில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரின் நலனுக்கும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நட்புறவு சங்கம் முக்கிய பங்காற்றும் எனக் குறிப்பிட்டதுடன், இந்தப் பொதுவான இலக்குகளை அடைவதில் தனது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பாராளுமன்ற அளவிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இச்சங்கத்தின் செயலாளர், இத்தகைய சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் இடையே நட்பையும் புரிதலையும் வளர்ப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-24
பாடநெறிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படாமல், தலைமைத்துவப் பண்புகள், குழுவாகப் பணியாற்றுதல் மற்றும் முடிவெடுக்கும் திறன் போற்றவற்றை வெளிப்படுத்தவும் அவற்றை மேம்படுத்துவதற்கும் மாணவர் பாராளுமன்றம் தனித்துவமான தளமாக அமையும் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.கொழும்பு 07, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் அமைந்துள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது குழுக்களின் பிரதித் தவிசாளர் இதனைக் குறிப்பிட்டார்.தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு மத்தியில், ஆன்மீக வளர்ச்சி மற்றும் நல்ல மனப்பான்மைகளுடன் ஒரு சமூகத்தை உருவாக்குவது மாணவர்களின் பொறுப்பு என்பதை நினைவுகூர்ந்த குழுக்களின் பிரதித் தவிசாளர், வறுமை ஒழிப்பு, வலுசக்தி சேமிப்பு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் போன்ற தேசிய அளவிலான சவால்களை எதிர்கொள்ள மாணவர் பாராளுமன்றங்கள் மூலம் புதிய யோசனைகளை முன்மொழிய முடியும் என்றார்.இங்கு கருத்துத் தெரிவித்த விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, அறிவை புரிதலாக வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆராய்ச்சி என்பது அன்றாட வாழ்வில் முடிவுகளை எடுக்க உதவும் ஒரு செயல்முறை என்று சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களின் ஆர்வத்தையும் பகுப்பாய்வு சிந்தனையையும் வளர்ப்பது மற்றும் அறிவை நடைமுறையில் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார்.மேலும், இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன கமகே, ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகளை விளக்கினார். அதேவேளை, ஜனாதிபதியின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மாணவர் பாராளுமன்றப் பிரதிநிதிகளிடையே உரையாற்றும் போது, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் மனிதாபிமானம் நிறைந்த குடிமக்களாக மாறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா மதுபாஷினி புலத்சிங்கல அவர்கள், இலங்கைப் பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, சபாநாயகர் தேர்தல் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்புடன் தொடங்கியது. இதன் அமைச்சர்கள் தங்கள் அமைச்சுக்களின் சார்பில் பாடசாலையில் செயற்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினர்.இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தின் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அழைக்கப்பட்ட பாடசாலைகளின் சார்பில் கலந்துகொண்ட கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் டி.எம். லால் திசநாயக்க மாணவர் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்நிழ்வின் இறுதியாக கொழும்பு 07, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபர் சுமேதா ஜயவீர நன்றியுரையாற்றினார்.கொழும்பு 07, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, கொழும்பு 07, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-19
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சமரவீர தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற தூதுக்குழுவினர் பொதுநலவாயப் பாராளுமன்ற சங்கத்தின் இங்கிலாந்து கிளையும் (CPA UK), இலங்கை பாராளுமன்றமும் (CPA இலங்கை கிளை) கூட்டாக இணைந்து 2026 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் ஏற்பாடு செய்த ஐக்கிய இராச்சியம் - இலங்கைப் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தில்' பங்கேற்கும் பொருட்டு ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கயந்த கருணாதிலக்க, எஸ்.எம். மரிக்கார், வைத்தியர் ஜகத் குணவர்தன, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, கந்தசாமி பிரபு, தனுஷ்க ரங்கநாத், ருவன் விஜேவீர, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் படைக்கலச்சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்ன ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர். இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் மற்றும் ஐக்கிய இராச்சியம் பாராளுமன்றத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்துவதே வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகவிருந்தது. பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஆட்சிமுறை சார்ந்த அறிவு, அனுபவங்கள் மற்றும் சிறந்த செயன்முறைகள் என்பவற்றின் பரிமாற்றத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கத்தில் உள்ளடங்கியிருந்தது. இந்நிகழ்ச்சித்திட்டம் முழுவதும், ஒப்பீட்டுப் பாராளுமன்ற முறைமைகள், குழுக்களின் கட்டமைப்புகள் மற்றும் மேற்பார்வைப் பொறிமுறைகள், சட்டவாக்கம் மற்றும் சட்டவாக்கத்திற்குப் பின்னைய ஆய்வுகள், பாராளுமன்ற நியமங்கள் மற்றும் சிறப்புரிமைகள், நிதிசார் ஆய்வுகள், பொதுப் பொறுப்புக்கூறல், பாராளுமன்றத்தை நவீனமயமாக்கல் மற்றும் பொதுமக்களுடனான ஈடுபாடு என்பன உள்ளிட்ட, பரந்த அளவிலான பாராளுமன்ற விவகாரங்களில் ஒருமுகப்படும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களிலும், அவதானிப்புகளிலும், ஊடாடும் அமர்வுகளிலும் இக்குழு பங்கேற்றது. இந்நிகழ்ச்சித்திட்டம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் குழு நடவடிக்கைகள் மற்றும் பிரதமருக்கான கேள்வி நேரம் என்பன உள்ளிட்ட பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக அவதானிப்பதன் மூலம், ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பான நேரடி அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் வழங்கியது. இதன் போது இக்குழுவினர் பொதுச் சபை உறுப்பினர்கள், பிரபுக்கள் சபை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடனும் மற்றும் பல்வேறு பாராளுமன்ற அமைப்புகளுடனும் மற்றும் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். தொடர் கலந்துரையாடல்களில், பயனுள்ள மேற்பார்வையை உறுதிசெய்வதில் தெரிவுக் குழுக்களின் வகிபங்கு, பொதுக் கணக்குகள் பற்றிய குழுக்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் என்பவற்றின் ஊடாக நிதிசார் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல், பொதுமக்களின் பங்களிப்பையும் மற்றும் நம்பிக்கையையும் மேம்படுத்துவதில் பாராளுமன்ற வெளிக்களத் தொடர்புகளின் பங்களிப்பு, மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான முன்முயற்சிகள் என்பன இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ளடங்கியிருந்தன. இக்குழுவினர், ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் (WFD) பிரதிநிதிகளுடனும் மற்றும் இலங்கைக்கான சர்வகட்சிப் பாராளுமன்றக் குழுவின் (APPG) உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினர். இது பாராளுமன்றத்தை வலுப்படுத்தும் முன்முயற்சிகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்குமான வாய்ப்புகளை வழங்கியது. இது தவிர, இக்குழுவினர் பொதுநலவாயப் பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் அவர்களையும் மற்றும் CPA தலைமையக அதிகாரிகளையும் சந்தித்து, இலங்கைப் பாராளுமன்றத்தின் ஊடாக அவர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்ற பணிகள் பற்றி கலந்துரையாடியதோடு, எதிர்காலத்தில் சாத்தியமான கூட்டு ஈடுபாடுகள் பற்றியும் ஆராய்ந்தனர். இவ்விஜயத்தின் போது, இக்குழுவினருக்கு ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவும் உதவியும் கிடைத்திருந்தன. உயர்ஸ்தானிகர் மாண்புமிகு நிமால் சேனாதீர மற்றும் தூதரக அதிகாரிகள் இக்குழுவினருடன் இணைந்து செயற்பட்டனர். இவர்கள் இந்நிகழ்ச்சித்திட்டம் சார்ந்த விடயங்களையும் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகளையும் எளிதாக்கிக்கொடுத்தனர். இந்நிகழ்ச்சித்திட்டம், இலங்கைப் பாராளுமன்றத்திற்கும், ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றத்திற்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தியதோடு, பயனுள்ள பாராளுமன்ற நடைமுறைகள், ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் நிறுவன ரீதியான அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்துவதில் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அதிகாரிகளினதும் அறிவையும் மற்றும் நிபுணத்துவத்தையும் மேம்படுத்தவும் உதவியது.
2026-06-19
பாராளுமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய 2026 ஜூன் மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2482/09 மற்றும் 2487/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2487/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் என்பன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.இதனையடுத்து, பி.ப 5.00 மணிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்படும் “நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலம் எனும் தனிநபர் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு குறித்து ஆராய்வதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது. (இதன்போது விவாதம் நடத்தப்படாது)இதன் பின்னர் பி.ப 5.00 மணிமுதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 ஜூன் மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதமும், அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 ஜூன் மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 ஜூன் மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.00 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் 2478/41 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை தொடர்பான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதிம் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிக்கு 25.05.2026ஆம் திகதி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சிக்காக நேரம் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.