logo

E   |   සි   |  

2026-06-19

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்றம் ஜூன் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அமைய 2026 ஜூன் மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2482/09 மற்றும் 2487/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2487/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் என்பன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

இதனையடுத்து, பி.ப 5.00 மணிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்படும் “நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலம் எனும் தனிநபர் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு குறித்து ஆராய்வதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது. (இதன்போது விவாதம் நடத்தப்படாது)

இதன் பின்னர் பி.ப 5.00 மணிமுதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 ஜூன் மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதமும், அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 ஜூன் மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 ஜூன் மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.00 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் 2478/41 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை தொடர்பான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றையதிம் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிக்கு 25.05.2026ஆம் திகதி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சிக்காக நேரம் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

சுயாதீன வரவுசெலவுத்திட்டப் பகுப்பாய்வுத் திறன்களை வலுப்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு இலங்கைப் பாராளுமன்றத்திற்கு விஜயம்

ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை (House Democracy Partnership/HDP) மற்றும் அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத்திட்ட அலுவலகம் (Congressional Budget Office (CBO)) ஆகியவற்றுடன் இணைந்து “பாராளுமன்றத்தின் வரவுசெலவுத்திட்ட மற்றும் பொருளாதார பகுப்பாய்வுகளை வலுப்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம் 2026ஆம் ஆண்டு ஜூன் 8 முதல் 12 ஆம் திகதி வரை இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.நிதி மேற்பார்வை, வரவுசெலவுத்திட்ட பகுப்பாய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கைவகுப்புத் தொடர்பில் பாராளுமன்றத்தின் திறனை வளர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், இலங்கை பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இது தொடர்பில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக அமைந்தது.ஐக்கிய அமெரிக்க காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் மேகன் மூர், அமெரிக்க காங்கிரஸ் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தின் மேகன் கரோல் மற்றும் கிரிஸ்டி ஹவ்லே அன்டனி ஆகியோர் இதில்  பங்கெடுத்தனர். அத்துடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுரகத்தின் துணைத் தூதுவர் ஜென் ஹோவெல் உள்ளிட்ட தூதுரகத்தின் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் இணைந்துகொண்டனர்.பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற குழுக்களின் பணியாளர்கள், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசாங்க நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிர்வாகம் தொடர்பான அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.இந்தத் தூதுக்குழுவினர் இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரைச் சந்தித்து பாராளுமன்றத்தின் கண்காணிப்புக்களை வலுப்படுத்தல், நிறுவன ரீதியான திறன்களை மேம்படுத்தல் மற்றும் ஆதார அடிப்படையில் நிதி ரீதியான முடிவுகள் எடுக்கப்படுவதை ஊக்குவித்தல் ஆகியவை குறித்துக் கலந்துரையாடினர். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பொதுமக்களின் பங்கேற்பு, திறம்பட்ட குழு கண்காணிப்பு மற்றும் பாராளுமன்ற ஆதரவு சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.இலங்கை – அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் அனுசரணையுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற  பணியாளர்களுக்கான அறிமுக அமர்வு இடம்பெற்றது. குறித்த சங்கத்தின் தலைவர் கௌரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா, குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களில் பணியாற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.இங்கு, அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தின் நிறுவனப் பங்கு மற்றும் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கக் குழுவினர் விளக்கமளித்தனர். பாராளுமன்ற வரவுசெலவுத் திட்டச் செயன்முறைக்கான ஒத்துழைப்பு ஆதரவு, சட்டமூலங்களுக்கான செலவு மதிப்பீடுகளைத் தயாரித்தல், வரவுசெலவுத் திட்டம் மற்றும் பொருளாதார முன்னறிவிப்புகளைத் தயாரித்தல், அத்துடன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பாரபட்சமின்மை ஆகிய கொள்கைகள் உள்ளிட்ட விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இந்த நிகழ்வின் அமர்வுகளில் நிதி மேற்பார்வை, வரவுசெலவுத் திட்ட ஆய்வு, பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் பாராளுமன்ற வலவுசெலவுத்திட்ட நிறுவனங்கள் தொடர்பான சர்வதேச நடைமுறைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் ஆகியோருடன் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. பாராளுமன்றக் குழுக்களின் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வில், பகுப்பாய்வின் வழிமுறைகள், ஆராய்ச்சி ஆதரவுப் பணிகள், வரவுசெலவுத் திட்டப் பகுப்பாய்வில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, அத்துடன் பாராளுமன்றத்திற்கும் மேற்பார்வை நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உத்திகள்  ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கி அழைக்கப்பட்டிருந்தபோது அமெரிக்க தூதுக் குழுவினர் அக்கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இலங்கையின் பாராளுமன்ற நிதி மேற்பார்வை வழிமுறைகள் மற்றும் பங்குதாரர் ஈடுபாட்டு செயல்முறைகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் தூதுக்குழுவினர் பெற்றனர்.நிகழ்ச்சியின் முடிவில், இலங்கையில் பாராளுமன்ற வரவுசெலவு அலுவலகத்தை நிறுவி நடைமுறைப்படுத்துவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு அடிப்படைத் திட்டத்தை வகுப்பதற்காக சுருக்கமான செயலமர்வொன்றும் நடத்தப்பட்டது.அரசாங்க நிதி மேற்பார்வை மற்றும் வரவுசெலவுத் திட்டப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்துவதில் இந்தத் தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டம் ஒரு முக்கியப் படியாக அமைந்தது. மேலும், பொறுப்புக்கூறக்கூடிய, வெளிப்படையான மற்றும் ஆதார அடிப்படையிலான ஆளுகையை ஊக்குவிக்கும் நோக்கில், இலங்கை பாராளுமன்றத்திற்கும் அதன் சர்வதேசப் பங்காளிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது உதவியது.


2026-06-17

மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (ஜுன் 17) சான்றுரைப்படுத்தினார்.இச்சட்டமூலம் 2026.03.17ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டிற்காகப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன், 2026.05.06ஆம் திகதி இது விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் ஊடாக மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டம், 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டம், 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம் மற்றும் 1988ஆம் ஆண்டின் 72ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டம் என்பன திருத்தப்படுவதுடன், கடனிறுக்கவகையின்மை (97வது அத்தியாயம்) கட்டளைச் சட்டத்தை நீக்குகிறது.இந்தச் சட்டம், கடனாளியின் நியாயமான வருமானம் மற்றும் அத்தியாவசிய சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கடன் பாதுகாப்பு, தற்காலிக விடுப்பு மற்றும் மறுசீரமைப்பு விதிகள் போன்ற தனிநபர் கடனிறுக்கவகையின்மை குறிப்பிட்ட நடைமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.மேலும், கடன் சந்தையின் முன்கணிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்காக, இந்தச் சட்டமூலம்  பெருநிறுவன நிர்வாகம், நிர்வாகப் பொறுப்பு ஏற்பு மற்றும் எல்லை தாண்டிய கடனிறுக்கவகையின்மை போன்ற விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.மேலும், இந்தச் சட்டம் நேர்மையான தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இயங்கக்கூடிய நிலையில் உள்ள நெருக்கடியில் உள்ள வணிகங்களை மறுவாழ்வு அளிப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையையும் வழங்க முற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய, மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமாக அமுலுக்கு வருகிறது.


2026-06-12

எதிர்காலத் தலைவர்கள் தார்மீக விழுமியங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றனர் – மாணவர் பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் வலியுறுத்து

நாளைய தலைவர்களான மாணவ சமூகத்தினர் பெரியோரை மதிப்பவர்களாகவும், தார்மீக விழுமியங்களைப் பாதுகாப்பவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பது அவசியம் என கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள் வலியுறுத்தினார். கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ பிரதி சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு மேலும் உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர்,மாணவர் பராயம் முதலே ஒழுக்கத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படும் நபர்கள் சட்டங்களை மதிக்கும் ஒழுக்கசீலர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது மக்களின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே அவர்கள், ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்படும் சேவைகள் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கினார். கல்விச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும், இந்த நிதியத்தை பிரதேச செயலகங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா அவர்கள், பாராளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கினார். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை குறித்து ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாண்புமிகு பிரதி சபாநாயகர் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில், கண்டி வித்யார்த்த கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எஸ். ஸ்ரீலால் நன்றியுரை  நிகழ்த்தினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, கண்டி வித்யார்த்த கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-11

இலங்கைப் பாராளுமன்ற தூதுக் குழு சீனாவிற்கான உத்தியோகபூர்வ செயலமர்வு நிகழ்ச்சித்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்தது

சீன மக்கள் குடியரசில் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற இலங்கைப் பாராளுமன்ற தூதுக் குழு, அதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து 2026 ஜூன் 05 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. கௌரவ வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்களது தலைமையிலான இந்தப் பாராளுமன்ற  தூதுக் குழு, 2026 மே 26 முதல் ஜூன் 04 வரை சீனாவின் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு  நிலையத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றது.  இந்த விஜயத்தின் போது, இக்குழு சீனாவின் ஆளுகைக் கட்டமைப்பு, அபிவிருத்தி மூலோபாயம், சனநாயக ஆலோசனைப் பொறிமுறைகள் மற்றும் தேசியக் கொள்கை வழிகாட்டல் முதலிய தலைப்புகளில் சீனாவின் சிரேஷ்ட கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரினால் நடத்தப்பட்ட அமர்வுகளில் பங்கேற்றது. இக்குழு தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) மாநாட்டு மண்டபம் மற்றும் மக்கள் மாபெரும் மண்டபம் (Great Hall of the People) உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்களுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டது. மேலும், சர்வதேச தேயிலைத் தினத்தை முன்னிட்டு 2026 மே 29 ஆம் திகதி பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்விலும் இக்குழு கலந்துகொண்டது. இந்நிகழ்வானது இலங்கையின் வளமான தேயிலை பாரம்பரியத்தையும், கலாசார மற்றும் பொருளாதார உறவுகளுக்கான அதன் பங்களிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது. இந்நிகழ்ச்சித் திட்டம் ஷென்சென் (Shenzhen) மற்றும் பின்னர் குவாங்சோ (Guangzhou) ஆகிய நகரங்களிலும் தொடர்ந்ததுடன் அங்கு இக்குழு ஸ்மார்ட் உட்கட்டமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம், தகவல் தொடர்பாடல்கள், விவசாயம் மற்றும் புதிய சக்திக் கைத்தொழில்கள் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களையும் அபிவிருத்திக் கருத்திட்டங்களையும் பார்வையிட்டது. இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திர உறவு, நிறுவன ரீதியான பரிமாற்றம் மற்றும் அறிவுப் பகிர்வு என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக இந்த செயலமர்வு அமைந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வருகின்ற நட்புறவுகளையும் மேலும் வலுப்படுத்தியது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks