பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-06-19
செய்தி வகைகள் : செய்திகள்
ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை (House Democracy Partnership/HDP) மற்றும் அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத்திட்ட அலுவலகம் (Congressional Budget Office (CBO)) ஆகியவற்றுடன் இணைந்து “பாராளுமன்றத்தின் வரவுசெலவுத்திட்ட மற்றும் பொருளாதார பகுப்பாய்வுகளை வலுப்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம் 2026ஆம் ஆண்டு ஜூன் 8 முதல் 12 ஆம் திகதி வரை இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
நிதி மேற்பார்வை, வரவுசெலவுத்திட்ட பகுப்பாய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கைவகுப்புத் தொடர்பில் பாராளுமன்றத்தின் திறனை வளர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், இலங்கை பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இது தொடர்பில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக அமைந்தது.
ஐக்கிய அமெரிக்க காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் மேகன் மூர், அமெரிக்க காங்கிரஸ் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தின் மேகன் கரோல் மற்றும் கிரிஸ்டி ஹவ்லே அன்டனி ஆகியோர் இதில் பங்கெடுத்தனர். அத்துடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுரகத்தின் துணைத் தூதுவர் ஜென் ஹோவெல் உள்ளிட்ட தூதுரகத்தின் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் இணைந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற குழுக்களின் பணியாளர்கள், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசாங்க நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிர்வாகம் தொடர்பான அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்தத் தூதுக்குழுவினர் இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரைச் சந்தித்து பாராளுமன்றத்தின் கண்காணிப்புக்களை வலுப்படுத்தல், நிறுவன ரீதியான திறன்களை மேம்படுத்தல் மற்றும் ஆதார அடிப்படையில் நிதி ரீதியான முடிவுகள் எடுக்கப்படுவதை ஊக்குவித்தல் ஆகியவை குறித்துக் கலந்துரையாடினர். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பொதுமக்களின் பங்கேற்பு, திறம்பட்ட குழு கண்காணிப்பு மற்றும் பாராளுமன்ற ஆதரவு சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கை – அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் அனுசரணையுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கான அறிமுக அமர்வு இடம்பெற்றது. குறித்த சங்கத்தின் தலைவர் கௌரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா, குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களில் பணியாற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இங்கு, அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தின் நிறுவனப் பங்கு மற்றும் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கக் குழுவினர் விளக்கமளித்தனர். பாராளுமன்ற வரவுசெலவுத் திட்டச் செயன்முறைக்கான ஒத்துழைப்பு ஆதரவு, சட்டமூலங்களுக்கான செலவு மதிப்பீடுகளைத் தயாரித்தல், வரவுசெலவுத் திட்டம் மற்றும் பொருளாதார முன்னறிவிப்புகளைத் தயாரித்தல், அத்துடன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பாரபட்சமின்மை ஆகிய கொள்கைகள் உள்ளிட்ட விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்த நிகழ்வின் அமர்வுகளில் நிதி மேற்பார்வை, வரவுசெலவுத் திட்ட ஆய்வு, பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் பாராளுமன்ற வலவுசெலவுத்திட்ட நிறுவனங்கள் தொடர்பான சர்வதேச நடைமுறைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் ஆகியோருடன் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. பாராளுமன்றக் குழுக்களின் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வில், பகுப்பாய்வின் வழிமுறைகள், ஆராய்ச்சி ஆதரவுப் பணிகள், வரவுசெலவுத் திட்டப் பகுப்பாய்வில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, அத்துடன் பாராளுமன்றத்திற்கும் மேற்பார்வை நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உத்திகள் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.
அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கி அழைக்கப்பட்டிருந்தபோது அமெரிக்க தூதுக் குழுவினர் அக்கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இலங்கையின் பாராளுமன்ற நிதி மேற்பார்வை வழிமுறைகள் மற்றும் பங்குதாரர் ஈடுபாட்டு செயல்முறைகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் தூதுக்குழுவினர் பெற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில், இலங்கையில் பாராளுமன்ற வரவுசெலவு அலுவலகத்தை நிறுவி நடைமுறைப்படுத்துவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு அடிப்படைத் திட்டத்தை வகுப்பதற்காக சுருக்கமான செயலமர்வொன்றும் நடத்தப்பட்டது.
அரசாங்க நிதி மேற்பார்வை மற்றும் வரவுசெலவுத் திட்டப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்துவதில் இந்தத் தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டம் ஒரு முக்கியப் படியாக அமைந்தது. மேலும், பொறுப்புக்கூறக்கூடிய, வெளிப்படையான மற்றும் ஆதார அடிப்படையிலான ஆளுகையை ஊக்குவிக்கும் நோக்கில், இலங்கை பாராளுமன்றத்திற்கும் அதன் சர்வதேசப் பங்காளிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது உதவியது.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks